57. பாறலைத்த படுவெண் - பாடல் 1
ஒட்டியுள்ள சதைப் பிண்டங்களை
(அன்னியூர் – குறுந்தொகை)
முன்னுரை
அன்னியூர் என்று தேவாரப் பதிகங்களில் அழைக்கப்பட்ட இந்த தலம், இந்நாளில் அன்னூர் என்றும் பொன்னூர் என்றும் அழைக்கப்படுகின்றது. மயிலாடுதுறை மணல்மேடு பாதையில், மயிலாடுதுறைக்கு வடகிழக்கே எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். அப்பர் பிரான் அன்னியூர் சென்றதாக பெரிய புராண குறிப்பு ஏதும் இல்லை. அப்பர் பிரான் கயிலாயம் தவிர்த்த மற்ற அனைத்து தலங்களின் மீது அருளிய பதிகங்களை, அந்தந்த தலங்களுக்கு சென்று பாடினார் என்பதாலும், இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் கிடைத்திருப்பதால், அவர் அருகில் உள்ள பந்தணைநல்லூர் முதலிய தலங்களுக்கு சென்றபோது இங்கும் சென்றிருக்க வேண்டும் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம்.
பாடல் 1
Advertisement
பாறு அலைத்த படுவெண் தலையினன்
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய் கோளரவு ஆட்டிய
ஆறு அலைத்த சடை அன்னியூரனே
விளக்கம்
பாறு = பருந்து. பாறு அலைத்த = பருந்துகள் பொருந்திய. நீறு அலைத்த = திருநீறு விரவிய, திருநீறு பூசப்பட்ட. கூறு அலைத்த = ஒரு கூறாக கலந்த. கோளரவு = கொடிய தன்மை கொண்ட பாம்பு. ஆறு அலைத்த = பரந்து விரிந்த கங்கை நதி அடங்கிய. நேரிழை = அணிகலன்கள் அணிந்த அன்னை பார்வதி தேவி.
பொழிப்புரை
ஒட்டியுள்ள சதைப் பிண்டங்களை கொத்தித் தின்பதற்காக பருந்துகள் வட்டமிடும் பிரமனின் தலையை, தனது கையினில் உண்ணும் கலனாக ஏற்றவன் சிவபெருமான். தனது திருமேனியில் திருநீறு பூசப்பட்ட சிவந்த மேனியன் சிவபெருமான்; சிறந்த நகைளை அணிந்த அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்டுள்ள பெருமான், கொடிய குணத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுக்கமான கச்சையாக கட்டி ஆட்டுகின்றான். பரந்த கங்கை நதி தனது சடையில் அடங்குமாறு அடக்கிய பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றான்.