முகப்பு
தினம் ஒரு தேவாரம்

57. பாறலைத்த படுவெண் - பாடல் 2

பழமையான இனிய இசையை

Updated On : 6 ஏப்ரல், 2017 at 5:49 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:40 PM

பண்டொத்த ஒத்த மொழியாளை ஓர் பாகமாய்
இண்டைச் செஞ்சடையன் இருள் சேர்ந்ததோர்
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன்
அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே
 

விளக்கம்

பண்டு = பண்டைய இனிமையான இசை. காதுக்கு இனிமை அளிக்காத இசை பின்னாளில் வரவிருப்பதை முன்னமே உணர்ந்த அப்பர் பிரான், அந்த இசையிலிருந்து வேறுபடுத்தி காட்ட இவ்வாறு கூறினாரா அல்லது மேற்கத்திய இசை எப்படி இருக்கும் என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்தவர்களாக இருந்தார்களா என்பது ஆய்வுக்கு உரியது. இண்டை = ஒரு வகையான முட்செடி. இருள் = கருமை நிறம். கரி = யானை. அண்டத்து = அண்டத்தில் இருப்பவர்களின் ஆய்வுக்கு. பண் என்ற சொல் எதுகை கருதி பண்டு என்று திரிந்ததாகக் கொண்டு, பண்ணினை ஒத்த இனிய சொற்களை உடைய பார்வதி அன்னை என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. பண்+தொத்த என்பது பண்டொத்த என இணைந்தது என்றும் கூறுவார்கள். தொத்த என்றால் போன்று என்று பொருள். பண்ணினை ஒத்த மொழியை உடைய அன்னையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

Advertisement

பொழிப்புரை

பழமையான இனிய இசையை ஒத்த மொழியினை உடைய உமை அன்னையை, தனது உடலின் ஒரு பாகமாக உடையவனும், இண்டை மலரைத் தனது செஞ்சடையில் சூடியவனும், இருளைப் போன்று கரிய நிறம் கொண்ட கழுத்தினை உடைய நீலகண்டனாக விளங்குபவனும், மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக்கொண்டவனும், அனைத்து உலகங்களிலும் இருப்பவர்களின் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவனும் ஆகிய பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.