57. பாறலைத்த படுவெண் - பாடல் 5
எங்களது தலைவராகிய பெருமான்
எம் பிரான் இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பராகி இருந்த எம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழும் அவர்க்கு
அன்பராகி நின்றார் அன்னியூரரே
விளக்கம்
ஈசன் = ஆள்பவன். இமையோர்கள் தமக்கெலாம் எம்பிரான் என்று சொற்களை மாற்றி அமைத்துக்கொண்டு, தேவர்கள் அனைவருக்கும் தலைவன் என்று பொருள் கொண்டு, இன்பராகி இருந்த ஈசன் என்பதற்கு வரம்பில்லாத இன்பம் உடையவன் என்று அவனது குணத்தினை குறிப்பதாகவும் கொள்ளலாம். வரம்பிலா இன்பம் உடைத்தல், பெருமான் எட்டு குணங்களில் ஒன்றாகும்.
Advertisement
பொழிப்புரை
எங்களது தலைவராகிய பெருமான், தேவர்களின் துயரங்களை நீக்கியதால் அவர்களுக்கு இன்பம் அளிப்பவராக இருக்கின்றார். எங்களை ஆள்பவராக விளங்கும் பெருமான், தங்களுக்கு துன்பங்களை அளிக்கும் கொடிய வினைகளை நீக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் தன்னைத் தொழும் அடியார்களின் வினைகளை அறுத்து அவர்களுக்கு அன்பராகத் திகழ்கின்றார். இவ்வாறு தேவர்களுக்கு இன்பராகவும், அடியார்களுக்கு அன்பராகவும் விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.