முகப்பு
தினம் ஒரு தேவாரம்

57. பாறலைத்த படுவெண் - பாடல் 8

காலை என்பதற்கு காலை நேரம்

Updated On : 6 ஏப்ரல், 2017 at 5:53 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:40 PM

காலை போய்ப் பலி தேர்வர் கண்ணார் நெற்றி    
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ் புறங்காடு அரங்காகவே
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே
 

விளக்கம்

காலை என்பதற்கு காலை நேரம் என்றும் தகுந்த நேரம் என்றும் இருவகையாக பொருள் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். பெருமான் காலை நேரத்தில் தாருகாவனம் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. பிச்சைப் பெருமானாகத் தங்களது இல்லங்களுக்கு வந்த பெருமானின் அழகால் கவரப்பட்ட இல்லத்தரசிகள், தாங்கள் ஈடுபட்டிருந்த வேலைகளையும் மறந்து, தங்களது உடைகள் நழுவதையும் உணராமல் பெருமானின் பின்னர் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரத்தில் (வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில், வேலூரிலிருந்து சுமார் பதினைந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம்) உள்ள கோயிலில், பிட்சாடனர் சன்னதியில் இந்த நிகழ்ச்சி மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் நான்கு முனிபத்தினிகள் பெருமானை பின் தொடர்வதாக சிற்பங்கள் உள்ளன. அதில் இரண்டு பெண்மணிகளில் கையில் கரண்டிகள் காணப்படுகின்றன. காலை நேரத்தில் பெருமான் பலி ஏற்கச் சென்றதை இந்த சிற்பம் உணர்த்துகின்றது.

Advertisement

தேர்தல் என்ற சொல்லுக்கு ஆராய்ந்து அறிதல் என்று பொருள். பலி ஏற்பதற்காகச் செல்லும் பெருமான், வீடுபேறு அடைவதற்கான பக்குவம் அடைந்த ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை பீடித்துள்ள மலங்களை, பலியாகப் பெறுவதற்காக செல்கின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை

பக்குவம் அடைந்த ஆன்மாக்களைத் தகுந்த நேரத்தில் அணுகி, அவர்கள் பிச்சையாக இடும் மலங்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் வீடுபேறு பெறுவதற்கு வழி வகுப்பவரும், தனது நெற்றியில் கண் உடையவரும், மேல் உலகத்தில் வாழும் வானவர்கள் விரும்புகின்ற சோலைகள் சூழ்ந்த சுடுகாட்டினைத் தான் நடனம் ஆடும் அரங்காக கொண்டவரும் ஆகிய பெருமான் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தார். அவர் தான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.