முகப்பு
தினம் ஒரு தேவாரம்

58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 4

அச்சம் நடுக்கம் ஆகிய உணர்வுகள்

Updated On : 15 ஏப்ரல், 2017 at 11:17 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:45 PM

துண் எனா மனத்தால் தொழு நெஞ்சமே
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே
எண்ணிலார் எயில் மூன்றும் எரித்த முக்
கண்ணினான் கடம்பூர் கரக் கோயிலே
 

விளக்கம்

துண் எனா மனம் = அச்சம் மற்றும் நடுக்கம் இவை இல்லாத மனம். முனம் = அவனது சன்னதி முன்னர். எண்ணிலார் = நல்ல எண்ணம் கொண்டிராத திரிபுரத்து அரக்கர்கள். எயில் = கோட்டை. அனைத்து உலகங்களையும் நடுங்கச்செய்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த நகரில், சுதன்மன், சுசீலன், சுபுத்தி எனப்படும் மூன்று அரக்கர்கள், தங்களது மன்னர்களாகிய வித்யுன்மாலி, தாருகாட்சன் மற்றும் கமலாட்சன் ஆகிய மூவர்களிடம் கொண்டிருந்த அச்சத்தால், அங்கே வாழ்ந்து வந்த ஏனையோர் சிவ வழிபாட்டினை நிறுத்திவிட்டபோதும், தொடர்ந்து சிவபிரானை வழிபாட்டு வந்தார்கள். இவர்கள் மூவரும் பெருமானிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக, திரிபுரங்கள் மூன்றும் அழிக்கப்பட்டபோதும், இவர்கள் மூவரும் இறவாது இருந்தார்கள். மேலும் சுதன்மன் சுசீலன் என்ற இருவரும் பெருமானின் வாயில் காப்பாளராகவும், சுபுத்தி பெருமானின் எதிரே மத்தளம் வாசிப்பராகவும் இருக்கும் தகுதியை அடைந்தார்கள். பெருமானிடம் அன்பு கொண்டு, அச்சம் நடுக்கம் ஏதுமின்றி, பெருமானை வழிபட்ட மூவர்கள் எய்திய பெருமை இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு மூவர்க்கு அருள்செய்த கருணைச் செயல் பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. கீழ்க்கண்ட பாடல் திருப்புன்கூர் தலத்தின் மீது சுந்தரர் அருளியது (7.55.8).

மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின்
            திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி காடு
                அரங்காக
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க
                            அருள் செய்த
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில்
            திருப்புன்கூர் உளானே

Advertisement

தனது அடியார்கள் மூவரும் அழிந்து போகாமல், அவர்களை காவல் செய்து, மற்ற அரக்கர்களை பெருமான் அழித்த செய்தி மணிவாசகரின் திருவாசக திருவுந்தியார் பதிகத்திலும் காணப்படுகின்றது.

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றே உந்தீ பற

இதே செய்தி, திருவண்ணாமலை மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்திலும், கற்குடி தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்திலும் காணப்படுகின்றன. தொறு என்றால் ஆடுகள் என்று பொருள். நிரை என்றால் மந்தை. ஆமாம் பிணை என்றால் காட்டு பசுக்கள். கோள் என்றால் சிங்கம் என்ற சொல்லுக்கு. நரசிங்கமாக வந்த திருமால் என்று பொருள் கொள்ள வேண்டும்.

பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார்
            வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூமா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே
    
கொலை யானை உரி போர்த்த கொள்கையானைக் கோளரியைக்
                        கூர் அம்பா வரை மேல் கோத்தச்
சிலையானைச் செம்மை தரு பொருளான் தன்னைத்
    திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்கள் ஆனான் தன்னைத் தையலோர்
            பங்கினனைத் தன் கை ஏந்து
கலையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக்
            கண்ணாரக் கண்டேன் நானே

பொழிப்புரை

அச்சம் நடுக்கம் ஆகிய உணர்வுகள் ஏதுமின்றி, அன்பு நிறைந்த மனத்துடன், இறைவனின் சன்னதியின் முன்னர் சென்று பண்ணுடன் இசைந்த பாடல்களைப் பாடி இறைவனைத் தொழுவீர்களாக. நல்ல எண்ணமில்லாமல், அடுத்தவர்க்கு கெடுதல் செய்யும் நோக்கத்துடன் அனைத்து இடங்களிலும் திரிந்து உலகத்தவரை துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் மூன்றினையும் எரித்தவன், மூன்று கண்களை உடைய பிரான், கடம்பூர் கரக் கோயிலில் உறைகின்றான். அவனைத் தொழுது அவனது அன்புக்கு பாத்திரமாகி பயன் அடைவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.