82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 8
பகைவர்களான அசுரர்களும்
பாடல் 8:
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய
நஞ்சு தனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க
உம்பர்கள் கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
சடை மேல்
இண்டை மதியம் அன்றோ எம் பிரானுக்கு
அழகியதே
விளக்கம்:
அண்டர்=பகைவர், இங்கே தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பகைவர்களான அரக்கர்களை குறிக்கின்றது. விடத்தின் தன்மை, விடம் உண்டவரை ஒடுக்கி செயலற்று இருக்கச் செய்யும். ஆனால் சிவபெருமான், விடத்தை உண்ட பின்னரும், அந்த விடம் செயலற்றுப் போகுமாறு விடத்தின் தன்மையை ஒடுக்கியவராக திகழ்ந்தமை, நஞ்சு தனை உண்டும் அதனை ஒடுக்க வல்லான் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. தலத்தில் இந்திரன் வழிபட்டமை இந்த பாடல் மூலம் உணர்த்தப்படுகின்றது.
பொழிப்புரை:
தேவர்களும் அவர்களுக்கு பகைவர்களான அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, கடலிலிருந்து எழுந்து எங்கும் பரவிய நஞ்சினை உண்டு, நஞ்சினை உண்ட பின்னர் அந்த நஞ்சு செயலற்றுப் போகுமாறு தனது கழுத்தினில் அடக்கியவன் சிவபெருமான். அவனது மேன்மையை உணர்ந்த தேவர்கள் தலைவன் இந்திரன் தொடர்ந்து திருத்தொண்டுகளில் ஈடுபட்டு சோற்றுத்துறை தலத்து இறைவனை வழிபட்டு பலன் அடைந்தான்: இவ்வாறு பெருமை வாய்ந்த சோற்றுத்துறை இறைவனின் நீண்ட சடை முடியில், இண்டை மாலை போன்று சந்திரன் விளங்கி மிகவும் அழகாக காணப்படுகின்றது.
Advertisement