முகப்பு
தினம் ஒரு தேவாரம்

82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 10

இலங்கைக்குத் தலைவனாகிய

Updated On : 21 டிசம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:51 PM


பாடல் 10:

இலங்கைக்கு இறைவன் இருபது தோளும்
                                                           முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக்
                                                           கருத்து அழித்த
துலங்கல் மழுவினன் சோற்றுத்துறை உறைவார்
                                                          சடை மேல்  
இலங்கு மதியம் அன்றோ எம் பிரானுக்கு
                                                          அழகியதே


விளக்கம்:

துலங்கல்=ஒழி வீசுகின்ற: இலங்கும்=விளங்கும் 

பொழிப்புரை:

இலங்கைக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களும் பத்து முடிகளும் நெரியுமாறும், அவனது மனம் கலங்குமாறும், தனது காலை விரலை ஊன்றி, கயிலை மலையினை பேர்த்தேடுக்கும் கருத்துடன் வந்த அரக்கனின் கருத்து அழியுமாறு செய்தவர் சிவபெருமான் ஆவார். ஒளி வீசும் மழுவுடன் இருப்பவரும் சோற்றுத்துறை தலத்தில் உறைபவரும் ஆகியதென் சிவபெருமானுக்கு, அவரது நீண்ட சடைமுடியில் இண்டை மாலை போன்று விளங்கும் பிறைச் சந்திரன் மிகவும் அழகாக உள்ளது.

Advertisement

முடிவுரை:

இந்த பாடலில் சிவபிரானுடன் இணைந்ததால் தங்களது அழகினைப் பெருக்கிக்கொண்ட பொருட்கள் என்று சந்திரன், பாம்பு, வெண்தலை மாலை, கையில் ஏந்தும் சூலம் மற்றும் மழு, கங்கை நதி என்று பல பொருட்களைக் குறிப்பிடும் அப்பர் பிரான், சந்திரனை சிவபெருமான் தனது சடையில் ஏற்ற செய்தியை அதிகமான பாடல்களில் குறிப்பிடுகின்றார். அழிந்து தேய்ந்த நிலையில் இருந்த சந்திரனுக்கு அபயம் அளித்து, அவனை வளரச் செய்து கருணை புரிந்த இறைவன், நாம் அழியும் நிலையில் உள்ளபோது அவனை நினைத்து துதித்தாலும் நமக்கு இரங்கி அருள் செய்வான் என்ற செய்தியை நமக்கு உணர்த்தத் தான் இவ்வாறு அதிகமான பாடல்களில் சந்திரன் இறைவனுக்கு அழகு செய்வதை குறிப்பிடுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. மாதர் பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் திருவையாறு பதிகத்திலும் (4.03) மிகவும் அதிகமான பாடல்களில் பிறைச் சந்திரனைத் தனது தலையில் சிவபிரான் ஏற்ற நிலை குறிப்பிடப்படுகின்றது. 

அழகியதே என்று ஒவ்வொரு பாடலையும் முடித்து சிவபிரானின் அழகையும், அவனுடன் சேர்ந்த பொருட்கள் பெற்ற அழகினையும் நம் கண் முன்னே கொண்டு வரும் அப்பர் பிரானின் பாடல், நமக்கு நாகைப் பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் அருளிய ஒரு பிரபந்தப் பாடலை (பெரிய திருமொழி 9.2) நினைவூட்டுகின்றது. இந்த பிரபந்தத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆழ்வார் அழகியவா என்று முடிக்கின்றார். இந்த பிரபந்தத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வியப்பூட்டும் அழகு என்பதை புலப்படுத்த அச்சோ அழகியவா என்று ஆழ்வார் இங்கே கூறுகின்றார்.  

    கோழியும் கூடலும் கோயில் கொண்ட
              கோவலரே ஒப்பர் குன்றம் அன்னப்
    பாழியம் தோளும் ஓர் நான்கு உடையர்
              பண்டு இவர் தம்மையும் கண்டு அறியோம்
    வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
              மாகடல் போன்று உளர் கையில் வெய்ய
    ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
             அச்சோ ஒருவர் அழகியவா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.