முகப்பு
தினம் ஒரு தேவாரம்

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 2

சிவபெருமான் நுண்ணிய பொருட்களுக்கும்

Updated On : 3 மார்ச், 2017 at 6:16 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM

நொய்யவர் விழுமியாரும் நூலினுள் நெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்
                          தன்னில்
நெய் அமர் திரியுமாகி நெஞ்சத்துள் விளக்குமாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

நொய்யவர் = நுண்ணியர். விழுமியார் = மேன்மை அடைந்தவர். நூல் = வேதநூல். இடிஞ்சில் = அகல், விளக்குத் தகளி. கருவாய் இருந்த காலத்திலிருந்து, சிவபெருமானது திருவடியை மெய்யன்புடன் தான் தேடிய காரணத்தால், அவரது திருவடி தனது நெஞ்சினில் நெய் விடாமல் ஏற்றப்பட்ட விளக்காக உள்ளது என்று திருமூலர் கீழ்க்கண்ட பாடலில் கூறுகின்றார், இந்த பாடலில் தனது நெஞ்சினை நெய் விட்டிடாத இடிஞ்சில் என்று கூறுவதை நாம் உணரலாம். கருவிலே இருந்த காலத்தை முதல் அடியில் குறிப்பிடும் திருமூலர், உடலுடன் வாழ்ந்த வாழ்க்கையையும் (மெய் விட்டிலேன்) உடலினை உயிர் பிரிந்த பின்னர் இருக்கும் நிலையையும் (பொய் விட்டு) என்று குறிப்பிடுவதாக, சிலர் விளக்கம் அளிக்கின்றார்கள். பொய் விட்டு என்பதற்கு, நிலையில்லாத மற்ற பொருட்களின் மேல் நாட்டத்தினை செலுத்தாமல், மெய்பொருளை நாடியதை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது மேலும் பொருத்தமாக இருக்கின்றது.

Advertisement

கைவிட்டிலேன் கருவாகிய காலத்தும்
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடையான் அடி
நெய் விட்டிடாத இடிஞ்சலுமாமே

பொழிப்புரை

சிவபெருமான் நுண்ணிய பொருட்களுக்கும் மிகவும் நுண்ணியராகத் திகழ்பவர். அவர் அனைவரிலும் மேம்பட்டவர்: வேதங்களிலும் ஆகமங்களிலும் உள்ள நுட்பமான பொருளை நமக்கு விளக்கிக் காட்டும் உண்மை நெறியினர். பொய் ஏதும் இல்லாதவர்: உடலென்னும் அகல் விளக்கில் உள்ள நெய்யில் தோய்ந்த திரியாகவும், ஒளி தரும் விளக்காகவும் உள்ளவர், செம்மை நிறத்துடன், நஞ்சினை கழுத்தில் அடக்கியதால் கரிய கண்டம் உடையவராய் விளங்குபவரும் திருச்செம்பொன்பள்ளியில் உறைபவரும் ஆகிய சிவபெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.