முகப்பு
தினம் ஒரு தேவாரம்

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 5

தனது சடையில் கங்கை நதியை மறைத்து

Updated On : 3 மார்ச், 2017 at 6:18 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM

ஆறுடைச் சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும் கோளரவு அரையர் போலும்
நீறுடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மைச்
சேறுடைக் கமலவேலித் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

அடியார்களுக்கு அன்பராக சிவபெருமான் இருப்பார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது நமக்கு அவர் அருளிய முதல் பதிகத்தின் (கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம்) ஒன்பதாவது பாடலை நினைவூட்டுகின்றது. சூலை நோயால் வருந்தி, அந்த பிணியைத் தீர்த்துக்கொள்ள அதிகை வீரட்டத்து இறைவரை அணுகிய அப்பர் பிரானுக்கு, தன்னைப்போன்று வருந்தும், துன்பம், பிணி, கவலை ஆகியவற்றால் வருந்தும், அடியார்களின் நிலை நினைவுக்கு வருகின்றது. அடியார்களை வருத்தும் துன்பம், பிணி, கவலை முதலியவற்றை விரட்டியும் மறைத்தும் அருள் செய்ய வேண்டும் என்று சிவபிரானிடம் அப்பர் பிரான் வேண்டுகின்றார். அவ்வாறு செய்தால் தான் சிவபிரான் அடியார்கள்பால் கொண்டிருக்கும் அன்பினை அனைவரும் உணர்ந்து தெளிவடைவார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். சிவபெருமானது கருணையால் சூலைநோய் தீர்க்கப்பட்டு அவருக்கு அன்பராக மாறியவர், அன்பருக்கு அன்பராக சிவபிரான் விளங்கிய தன்மையை தனது அனுபவத்தில் புரிந்துகொண்டவர், அந்த நிலையினை அனைவர்க்கும் தெரியப்படுத்தும் பாடலாக இந்த பாடல் விளங்குகின்றது.

Advertisement

பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன் சடையீர்
                மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து
                கரந்தும் இடீர்
என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது
                இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை
                    அம்மானே

பொழிப்புரை

சிவபெருமான், தனது சடையில் கங்கை நதியை மறைத்து வைத்திருக்கின்றார்: அவர் அடியார்களுக்கு அன்பராகத் திகழ்கின்றார்: தனது உடலின் ஒரு பாதியில் பார்வதி தேவியை வைத்திருக்கின்றார்: கொடிய பாம்பினைத் தனது இடுப்பில் கட்டிக்கொண்டு திரிகின்றார்: உடலில் திருநீறு அணிந்து அழகுடன் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகளை உடைய சிவபெருமான், நெய்தல் பூக்களும், சேற்றிலே தாமரைப் பூக்களும் கமழும் நீர்வளம் உடைய திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.