51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 8
கார் காலத்தில் காணப்படும் கொன்றை மாலை
காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவினோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதியுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்கள் ஏத்த
சீரொடு பாடலானார் திருச்செம்பொன் பள்ளியாரே
விளக்கம்
பதினெட்டு கணங்கள் - பதினெட்டு வகையான இன வகைகள்: தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னரர், கிம்புருடர், யட்சர், வித்தியாதரர், அரக்கர், சித்தர், கந்தருவர், சாரணர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாச வாசிகள் மற்றும் போக பூமியர். பார் = கீழுலகம். காருடைக் கொன்றை = கார்க்காலத்தில் காணப்படும் கொன்றை மலர்கள். அடியார்கள் தன்னை மிகவும் புகழ்ந்து பாடும் பாடல்களை விருப்பமாக ஏற்றுக்கொள்ளும் சிவபெருமான் அத்தகைய பாடல்களாக மாறிவிடுகின்றார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
Advertisement
பொழிப்புரை
கார் காலத்தில் காணப்படும் கொன்றை மாலை, கதிரொளி வீசும் சந்திரன், பாம்பு மற்றும் கங்கை நதி ஆகியவற்றை சடையில் அணிந்து, நீதியே வடிவினராய், அந்த நீதியை நடத்தும் இறைவனே, பூவுலகம், பாதாளம் மற்றும் விண்ணுலகும் ஆகிய மூன்று உலகங்களிலும் பதினெட்டு வேறுவேறு இனங்களைச் சார்ந்தவர்கள் உம்மை புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு துதித்துப் பாடப்படும் பாடல்களின் வடிவமாக உள்ளவர், திருச்செம்பொன்பள்ளியில் உள்ள இறைவனார் ஆவார்.