முகப்பு
தினம் ஒரு தேவாரம்

52. கானறாத கடிபொழில் - பாடல் 1

காவிரி நதியின் இரு கரைகளிலும்

Updated On : 9 மார்ச், 2017 at 3:57 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:28 PM

(செம்பொன்பள்ளி – குறுந்தொகை)

முன்னுரை

காவிரி நதியின் இரு கரைகளிலும் உள்ள பல திருக்கோயில்கள் சென்ற அப்பர் பிரான் செம்பொன்பள்ளி சென்று வணங்கிய பின்னர் மயிலாடுதுறை சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். விடை உயர்த்தார் = இடப உருவத்தினை தாங்கிய கொடியை உடைய பெருமான்.

Advertisement

மேவு புனல் பொன்னி இருகரையும் சார்ந்து விடை உயர்த்தார்
            திருச்செம்பொன்பள்ளி பாடிச்
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரை துருத்தி
            வேள்விக்குடி எதிர்கொள்பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி
            பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து
            ஆவடு தண்துறையைச் சார்ந்தார்    

பாடல் 1

கான் அறாத கடி பொழில் வண்டினம்
தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்
ஊன் அறாததோர் வெண் தலையில் பலி
தான் அறாததோர் கொள்கையன் காண்மினே
 

விளக்கம்

கான் = நறுமணம். வெண் தலை = தசை நீங்காத தலை. அறாத = நீங்காத.

இந்த பாடலில் சிவபெருமானை, பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாதவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி = இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலை வாழ்க்கைக்கு அப்பர் பிரான் ஒரு சிறந்த உதாரணம். சமணர்கள் கொடுமைகளால், பல துன்பங்கள் அனுபவித்த போதும், எல்லாம் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்ட அவர், இன்பங்களை அனுபவித்த போதும் ஈசனது செயல் என்றே செயல்பட்டார். புகலூரில் உழவாரப் பணி செய்து வருகையில், தரையில் கிடந்த விலை மதிப்பில்லாத மணிகளையும் குப்பைகளாக கருதி, கல்லுடன் மண்ணுடன் கலந்து அவற்றையும் அப்புறப்படுத்தினார். மேலும் அரம்பையர்கள் அவரின் முன்னே வந்து நடனமாடி, அவரது கவனத்தைத் தங்கள்பால் ஈர்க்க முயற்சி செய்தபோதும், மனம் பேதலிக்காமல், அவர்களை எனது வழியிலிருந்து விலகிச் செல்லுங்கள், அல்லையேல் திருவாரூர் பெருமான் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கை விடுத்து, அகன்றார்.

பரந்து உலகேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்        
நிரந்தரமாக நினையும் அடியார்
இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத்தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

பொழிப்புரை

பூக்களிலிருந்து வீசும் நறுமணம் எப்போதும் நீங்காது விளங்கும் சோலைகளில் உலவும் வண்டுகள், குறைவில்லாத தேனைப் பருகியவாறு இருக்கும் செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் இறைவன், தசை நீங்காமலும் வெண்மை நிறத்துடனும் காணப்படும் மண்டையோட்டில் பலி ஏற்பதைத் தனது கொள்கையாக கொண்டவன் இவ்வாறு தான் பிச்சை ஏற்பதை நிறுத்தாமல் இருக்கும் பெருமானை, செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் பெருமானை நீங்கள் சென்று கண்டு வழிபடுவீராக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.