48. வானத்து இளமதியும் பாம்பும் - பாடல் 3
தன் மீது ஏவப்பட்ட மதயானை
கானிரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப் பூம்பட்டினத்து
உள்ளார் போலும்
வானிரிய வருபுரம் மூன்று எரித்தார் போலும் வடகயிலை
மலையது தம் இருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா உடையார் போலும் உயர்
தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும்
தேனிரிய மீன் பாயும் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே
விளக்கம்
இரிய = நீங்கிய. சிவபிரானால் கொல்லப்பட்ட மதயானை தான் புக வேண்டிய காட்டினை விட்டு நீங்குகின்றது. வானில் பரந்த திரிபுரத்து கோட்டைகள் வானினை விட்டு நீங்குகின்றன; பிரமனின் மண்டையோடு சதையுடன் கூடி இருந்த நிலையிலிருந்து மாறி பெருமானின் கையினில் பொருந்துகின்றது. இவை மூன்றும் நடைபெறுவது பெருமானின் வீரச் செயலால் என்று நயமாக கூறும் அப்பர் பிரான், பாட்டின் இறுதி அடியில், தலத்தின் பொய்கைகளில் துள்ளி விளையாடும் மீன்கள் மலர்கள் மீது மோதுவதை, மலரிலிருந்து தேனை நீக்கும் செயலாக குறிப்பிடுகின்றார்.
Advertisement
பொழிப்புரை
தன் மீது ஏவப்பட்ட மதயானை என்றும் காட்டை விட்டு நீங்குமாறு, அதன் தோலை உரித்துக் கொன்ற சிவபெருமான்; காவிரிபூம்பட்டினத்து தலத்தில் உறைகின்றார். வானில் எங்கும் திரிந்து பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் என்றும் வானத்தை விட்டு நீங்கி இருக்குமாறு, மூன்று கோட்டைகளையும் எரித்த சிவபெருமான், நமது நாட்டின் வடக்கில் உள்ள கயிலை மலையினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். உலர்ந்ததால், தசைகளை விட்டு நீங்கிய மண்டையோட்டினை தான் உண்ணும் கலனாகக் கொண்டுள்ள சிவபெருமான், ஊழிக்காலத்திலும் நீரில் மூழ்காமல் உயர்ந்த இடத்தில் இருக்கும் தோணிபுரம் தலத்தில் உறையும் ஒப்பற்ற கடவுள் ஆவார். மலர்களில் உள்ள தேன், அதனை நீங்கி கீழே சிந்துமாறு, துள்ளி விளையாடும் மீன்கள் மலர்களின் மீது மோதும் தெளிந்த பொய்கைகளை உடைய சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறையும் சிவபெருமான், வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.