50. தூண்டு சுடர்மேனி - பாடல் 5
மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கும் குழை
கொள்ளைக் குழைக் காதில் குண்டை பூதம் கொடுகொட்டி
கொட்டிக் குனித்துப் பாட
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர் நான் தெரிய
மாட்டேன் மீண்டேன்
கள்ள விழி விழிப்பர் காணாக் கண்ணால் கண்ணுள்ளார்
போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் வெண்காடு மேவிய
விகிர்தனாரே
விளக்கம்
குண்டை = உடல் பருத்துக் காணப்படும் பூதங்கள். பூதங்கள் பாட, அவை இசைக்கும் கொடுகட்டிக் கருவியின் இசைக்கு ஏற்ப நடமாடும் தன்மை, மற்றவரிடமிருந்து மாறுபட தன்மை என்பதை உணர்த்தும் வண்ணம் விகிர்தன் என்று அப்பர் பிரான் இங்கே பெருமானை அழைக்கின்றார். கொள்ளை = மிகுதி, மிகுந்த ஒளி வீசும் குழை ஆபரணம்.
Advertisement
தனது இல்லத்திற்கு பிச்சை ஏற்க பெருமான் வந்ததை முந்தைய பாடலில் குறிப்பிட்ட அப்பர் நாயகி, அப்போது நடந்த நிகழ்ச்சிகளை இந்த பாடல் மூலம் விளக்குகின்றாள்.
பொழிப்புரை
மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கும் குழை அணியை காதில் அணிந்தவராய், குட்டையான உருவத்துடனும் பருத்த உடலுடனும் அவருடன் வந்த பூதங்கள் கொடுகொட்டி என்ற இசைக் கருவியை இசைத்தும் பாடியும் அவரைச் சூழ்ந்து வர, அந்த பாடலுக்கும் இசைக்கும் ஏற்றவாறு நடனம் ஆடி ந்த பெருமான், எனது உள்ளத்தினை கொள்ளை கொள்ளும் நோக்கத்துடன் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தார். இவ்வாறு என்னைச் சுற்றித் திரிந்த பெருமானின் நோக்கத்தினை அறியாத நான் திரும்பிப் பார்த்தபோது, அவரது கள்ளவிழிப் பார்வை என்மேல் படுவதைக் கண்டேன்; என்னை நேராக பார்க்காமல் அரைக் கண்ணால் பார்க்கும் அவர், ஒரு சமயம் எனது கண்களுக்குள்ளே அகப்படுவார் போல் தோன்றினாலும் அடுத்த கணமே எனது கண் பார்வையிலிருந்து அகன்று விடுகின்றார். ஆனாலும் அவரது உருவம் எனது உள்ளத்தில் நிலையாக பதிந்து இருப்பதால் எனது அகக்கண்ணால் நான் அவரை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். இவ்வாறு எனக்கு போக்கு காட்டிய பெருமான், வெள்ளத்தைத் தனது சடை முடியில் அடக்கியவர், எப்போதும் வேதங்கள் ஓதும் நாவினை உடையவராக இருப்பவர். அவர்தான் வெண்காடு தலத்தினை விரும்பியேற்று, அதனில் உறைகின்ற விகிர்தனார் ஆவார்.