54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 4
அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று
ஊன் தலை வலியனாகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப் பட்டு நின்று சார் கனலகத்து வீழ
வான் தலைத் தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும்
தோன்றலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
ஊன் தலை வலியன் = உடல் பலத்தால் வலியவன். சென்ற பாடலில், அன்னை அனைத்து உயிர்களுக்கும் தாயாக விளங்கும் தன்மையை குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில், பெருமான் அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று நிற்கும் தன்மையை உணர்த்துகின்றார்.
Advertisement
பொழிப்புரை
புலாலால் வடிவமைந்து உலகத்தில் காணப்படும் அனைத்து உயிர்களிலும் கலந்து நின்று, அந்த உயிர்களுக்கு வலிமை அளிப்பவனாக இருப்பவன் சிவபெருமான். இவ்வாறு பெருமான் அளித்த வலிமையால் வாழும் உயிர்கள், தாங்கள் முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகுதியின் பயனாக பல துன்பங்களை அனுபவிக்க நேர்கின்றன. அத்தகைய தருணங்களில், அந்த துன்பங்களைத் தாங்க முடியாமல், தேவர்கள் உள்ளிட்ட பல உயிர்களும், வானவர்க்கும் இறைவனாக விளங்கும் மகாதேவா, என்று இறைஞ்சி வழிபட, அந்த உயிர்களுக்கு அருள் புரிவதற்காக தோன்றுபவன் சிவபெருமான். இத்தைகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, நான் துருத்தித் தலத்தில் கண்டேன். அடியார்களாகிய நீங்களும், பெருமானை துதித்து அவரை காணும் பேற்றினை பெறுவீர்களாக.