முகப்பு
தினம் ஒரு தேவாரம்

54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 9

அப்பர் பிரானின் அரிய பாடல்

Updated On : 25 மார்ச், 2017 at 4:42 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:38 PM

குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து ஒண்ணாது தொழுமின்
                                          நீர்கள்
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே
 

விளக்கம்

ஞானசம்பந்தப் பெருமான், தனது பதிகத்தின் பத்தாவது பாடல்களில், சமணர்கள் மற்றும் புத்தர்கள் சொல்லும் உரையினில் மயங்கி, அவர்கள் பின்சென்று விடதீர்கள் என்று அறிவுரை கூறுவதை நாம் காணலாம். அத்தகைய அறிவுரை காணப்படும் அப்பர் பிரானின் அரிய பாடல் இது. விண்டவர் = சிவநெறியிலிருந்து விலகிய திரிபுரத்து அரக்கர்கள். சமணர்களும் புத்தர்களும் குறிக்கோள் இல்லாது வாழ்வதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவது நமக்கு, குறிக்கோள் இல்லாமல் வாழும் வாழ்க்கை பலனேதும் அளிக்காது என்று கூறும் கொண்டீச்சரத்து பதிகத்துப் பாடலினை நினைவூட்டுகின்றது. வாழ்கையின் மூன்று நிலைகளாக, சிறுவன், இளைஞன், வயது முதிர்ந்த கிழவன் ஆகிய நிலைகள் கருதப்படுகின்றன. இந்த மூன்று பருவங்களிலும் குறிக்கோள் இல்லாது வாழும் மனிதர்கள் தான் பெரும்பாலும் இந்த உலகத்தில் இருப்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம். சிறுவயதில் விளையாட்டினில் பெரும்பகுதி கழிகின்றது, மேலும் இறைவனை உணர்ந்து வழிபடுவதற்கு தேவையான அறிவு முதிச்சியும் இருப்பதில்லை. இளைஞனாக இருக்கும் பருவத்தில், நமது மனம் அழகிய மங்கையரை நாடுகின்றது; அதனால் உடலின்பத்தை பெரிதாக கருதி, வாழ்வினில் பெரும்பகுதியை, இரு பாலருக்கும் மகிழ்ச்சி தரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றோம். முதிர்ந்த பருவத்தில், உடல் மெலிந்து, மூப்பு அடைந்து, பிணிகளால் துன்புற்று, கோலினை ஊன்றிக்கொண்டு நடக்கும் நாம், இறைவனை வழிபடுவதுதான் உய்யும் வழி என்பதை உணர்ந்தபோதும், உடலளவில், மனதளவில் தளர்ச்சி அடைந்த நிலையில், இறைவனைத் தொழுவதற்கு இயலாத தன்மையில் வாழ்க்கையை கழிக்கின்றோம். இவ்வாறு வாழ்க்கையின் மூன்று பருவங்களிலும் குறிக்கோள் இலாது வாழ்ந்து கெட்டுப்போகும் நிலையை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

   பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார் தம்
   மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
   கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
   சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சரத்து உளானே

பொழிப்புரை

உடல் பருத்த சமணர்களும் புத்தர்களும், தாங்கள் அடைய வேண்டிய குறிக்கோள் என்ன என்பதை அறியாதவர்களாய், தாங்கள் இந்த உலகத்தில் காணும் பொருட்களை முடிந்த பொருட்களாக கருதுவார்கள். எனவே அவர்களது கருத்தினை புறக்கணித்து, இறைவனை வழிபட்டு பயன் அடைவீர்களாக. சிவநெறியிலிருந்து விலகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் எய்து, தீ மூட்டி, அரக்கர்களால் வேதனைக்கு உள்ளான தேவர்களைக் காத்து அருள்புரிந்தவனும், தொண்டர்களுக்குத் துணையாக நிற்பவனும் ஆகிய இறைவனை துருத்தியில் அடியேன் காணும் பேறு பெற்றேன். எனவே நீங்களும் இறைவனை வழிபாட்டு அத்தகைய பேற்றினைப் பெறுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.