முகப்பு
தினம் ஒரு தேவாரம்

80. ஒன்று கொலாம் - பாடல் 8

விரும்பி சூடும் மலர்

Updated On : 29 நவம்பர், 2017 at 9:54 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:44 PM

பாடல் 8:

    எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
    எட்டு கொலாம் அவர் சூடும் இன மலர்
    எட்டு கொலாம் தோள் இணையாவன
    எட்டு கொலாம் திசை ஆக்கினதாமே

 
விளக்கம்:

இறைவன் எண்குணத்தான் என்று ஒரு திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது

கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 


இந்த பாடலுக்கு உரை கண்ட பரிமேலழகர் எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன. 

சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள், புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை. அக மலர்கள் என்று நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணங்கள் எட்டினை குறிப்பிடப் படுகின்றன.  கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார்.

நான்கு முகங்கள் கொண்ட இறைவனை எண்தோளான் என்று பல தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. கருகாவூர் மீது அப்பர் பிரான் அருளிய குருகாம் வயிரமாம் என்று தொடங்கும் பதிகத்தின் (6.15) ஒன்பதாவது பாடலில், சிவபெருமான் எண்தோளான் என்று குறிப்பிடப்படுகின்றார். விட்டுருவம்=தனது உருவத்தை விட்டு நீங்கி; சூழல்=நிலை; பாணி=தாளம், பட்டுருவ தோல்=பட்டு போன்று மென்மையான தோல்; கீண்டான்=கிழித்தவன்; கட்டுருவம்=அழகான உருவம் கொண்ட மன்மதன்; கடியான்=கடிந்தவன், கோபித்தவன், கண்=வழிகாட்டி. பல வல்லமைகள் படைத்து இருந்தாலும். அடியார்களுக்கு மிகவும் எளியானாக, அவர்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமான் விளங்குகின்றான் என்று இங்கே அப்பர் பெருமான் கூறுகின்றார். 

விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம்
         விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம்
பட்டுருவ மால் யானைத் தோல் கீண்டானாம்
          பலபலவும் பாணி பயின்றான்             தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம்
          என்னுச்சி மேலானாம் எம் பிரானாம்
கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும்
          கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

Advertisement

எண்தோள்களையும், மூன்று கண்களையும் உடைய சிவபெருமான், தன்னை ஆட்கொண்டு தனது உடல், பொருள், ஆவி மூன்றினையும் தனதாக்கிக் கொண்டமையால், தனக்கு ஏதும் இடையூறு இனி இல்லை என்று கூறும் மணிவாசகர், தனக்கு நன்மை, தீமை, எது ஏற்பட்டாலும் தனக்கு அதனால் ஏதும் பாதிப்பு இல்லை என்றும் கூறுகின்றார்.

அன்றே என் தன் ஆவியும் உடலும்
                     உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே
                     கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள்
                     முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ
                     இதற்கு நாயகமே  

பொழிப்புரை:

சிவபிரானின் அழிவில்லாத குணங்கள் எட்டு. அவர் விரும்பி சூடும் மலர்கள் எட்டு. ஒன்றுக்கொன்று இணையாக காணப்படும் அவரது தோள்கள் எட்டு. அவர் ஆக்கிய திசைகள் எட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.