93. மடையில் வாளைபாய - பாடல் 3
பாம்பினை அணிகலனாக
பாடல் 3
பூணல் பொறி கொள் அரவம் புன்சடை
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாட மறை வல்லானையே
பேணப் பறையும் பிணிகள் ஆனவே
விளக்கம்:
பிணிகள்=பிறவியினால் வரும் கேடுகள்; குழகன் என்று இறைவனை சம்பந்தர் கூறுகின்றார். குழகன் என்றால் அழகன் என்று பொருள். தனது முதல் பதிகத்தில் இளநாகம் என்று கூறி நரை, திரை, மூப்பு இல்லாத காரணத்தால் பாம்பு என்றும் இளமையாக இருக்கும் என்று கூறும் சம்பந்தர், இளமையுடன் காணப்படும் நாகம் அழகிய புள்ளிகளைக் கொண்டு அழகாக தோன்றுகின்றது என்று கூறுகின்றார். அழகனுக்கு அழகு சேர்க்கும் அணிகலனான பாம்பு இங்கே விவரிக்கப்படுகின்றது. பொறி என்றால் புள்ளி என்று பொருள். புன்சடை என்றால் சுருண்டு நீண்ட சடை என்று பொருள். மாண என்றால் மாட்சிமை பொருந்திய என்று பொருள். எளிமையாக இருக்கும் பெருமான் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அழகாக இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். பூணல்=பூண்+நல்; நல்=அழகிய; பொறி=புள்ளிகள்; பேண=இடைவிடாது தியானம் செய்ய; பேணுதல் என்பதற்கு முறையாக பூசை செய்து தூபம் தீபம் நிவேதனம் காட்டி வழிபடுதல் என்றும் பொருள் கொள்ளலாம்; பறையும்=அழிந்துவிடும்.
Advertisement
பொழிப்புரை:
அழகிய புள்ளிகளைக் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக பூண்டுள்ள பெருமான், சுருண்டும் நீண்டும் காணாப்படும் தனது கூந்தலில் வளைந்த பிறைச் சந்திரனை சூடியுள்ளான். அவன் அழகும் இளமையும் பொருந்தி காணப்படுகின்றான். மறைகளில் வல்லவனும் கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் மாண்புகளை இடைவிடாது தியானம் செய்தாலும், முறையாக பூசை செய்து வழிபட்டாலும், பிறப்பு எடுத்ததால் நாம் அடையும் துன்பங்கள் முழுவதும் மறைந்துவிடும்.