முகப்பு
தினம் ஒரு தேவாரம்

95. காரைகள் கூகை முல்லை - பாடல் 4

கங்கை நதியின்

Updated On : 19 மே, 2018 at 2:40 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:22 PM


பாடல் 4:

    
குளிர்தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு
              தலை மாலையோடு குலவி
    ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகமாக
              உடையானுகந்த நகர் தான்
    குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட
              பெடை வண்டு தானும் முரல
    நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகு
              நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

மாடு=அருகே; நாரை என்பது நரை என்று குறுகியது. குலவி=விருப்பத்துடன் கூடி மகிழ்தல்; கொம்மல்=கொம்பு என்று அழைக்கப்படும் இசைக்கருவி; சிலர் கொம்மல் என்ற சொல்லுக்கு கும்மிப் பாட்டு என்று பொருள் கூறுகின்றனர். குருகுகள்=நீர்க்குருவிகள்; மாலை=அழகாக கோர்க்கப்பட்ட மாலையில் பூக்கள் வரிசையாக உள்ளது போன்று பறவைகள் சோலைகளில் அமர்ந்துள்ள நிலை;

Advertisement

பொழிப்புரை: 

தனது சடையில் தங்கும் குளிர்ந்த நீரினை உடைய கங்கை நதியின் அருகினில் தலைமாலையினை மிகுந்த விருப்பமுடன் சூடியவராக காணப்படும் இறைவன், ஒளி வீசும் பிறைச் சந்திரனையும் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ளார். இத்தகைய பெருமான், உமை அன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாக வைத்துள்ள பெருமான். விருப்பமுடன் எழுந்தருளியுள்ள நகரம் தான் நனிபள்ளி நகரம். குளிர்ந்ததும் கொம்பு என்று அழைக்கப் படுவதும் ஆகிய இசைக் கருவியில் இருந்து எழும் நாதத்திற்கு ஏற்ப குயில்கள் பாடுவதைக் கேட்கும் பெடை வண்டுகளும் இசை முரலும் அழகிய சோலைகளில் வரிசை வரிசையாக நாரைகளும் குருகுகளும் வாழ்கின்றன. அத்தகைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.