முகப்பு
தினம் ஒரு தேவாரம்

104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 3

கருணைக் கண்களால்

Updated On : 3 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:53 PM

பாடல் 3:

   தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன்
       அருக்கன் அங்கி
   மிக்க விதாதாவினொடும் விதி வழியே தண்டித்த
       விமலர் கோயில் 
   கொக்கு இனிய கொழும் வருகை கதலி கமுகு உயர்
        தெங்கின் குலை கொள்             சோலை
   முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள்வயல்
        சூழ் முதுகுன்றே

  
விளக்கம்:

விதி=சிவ அபராதம் செய்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப் படவேண்டும் என்ற நெறிமுறை. எச்சன்=யாகத்தின் தலைவன்; யக்ஞம் என்ற வடமொழிச் சொல் எச்சம் என்று பயன்படுத்தப் பட்டுள்ளது. கொக்கு=மாமரம்; வருக்கை= பலா; கதலி=வாழை; கொழும்=சிறந்த; விதாதா=பிரமன்; அங்கி=தீக்கடவுள்; அருக்கன்= பன்னிரு சூரியர்களில் ஒருவன்; புராணர்=பழையவர்; 

Advertisement

கொக்கு என்றவுடன் நமக்கு சேவல் தினமும் காலையில் கொக்கரக்கோ என்று கூவுவது நினைவுக்கு வருகின்றது. முருகப் பெருமானுடன் செய்த போரின் இறுதிக் கட்டத்தில் சூரபதுமன், மாயை புரிந்து மாமரமாக மாறுகின்றான். முருகப் பெருமான் விடுத்த வேல் அந்த மரத்தினை இரண்டு கூறாக பிளக்க, அவ்வாறு பிளக்கப்பட்ட கூறுகள் மயிலாகவும் சேவலாகவும் மாறி முருகப்பெருமானை எதிர்க்கச் சென்றன. அப்போது முருகப் பெருமான் தனது கருணைக் கண்களால் அவை இரண்டினையும் நோக்க, அந்த இரண்டு பறைவகளும் ஆவேசத்தை விட்டுவிட்டு இயற்கை நிலையை அடைந்தன. பின்னர் சேவல் கொடியின் சின்னமாகவும் மயில் வாகனமாகவும் ஏற்றுக் கொள்ள படுகின்றன. சேவல் கொக்கரகோ என்று கூவுவதை மாமரமாக நின்ற சூரபதுமனை அழித்த தலைவனே என்று கூறுவதாக விளக்கம் கூறுவார்கள்.    

யாகத்தின் தலைவன் வேறு யாகத்தை நடத்தி வைப்பவர் வேறு. யாகத்தின் தலைவனின் மேற்பார்வையில் வேள்விச் சடங்குகள் நடைபெறுவதாக ஐதீகம். இன்றும் வேள்விகள் செய்யப்படும் தருணத்தில், அங்கே கூடியிருக்கும் அந்தணர்களில் முதியவரும் வேள்வி விதிமுறைகள் தெரிந்தவரும் ஆகிய ஒருவரை பிரமன் என்று நியமித்து அவர் மீது அட்சதை தூவி வேள்வியினை தொடங்குவார்கள். இவ்வாறு பிரமனாக நியமிக்கப் பட்டவர், அதே இடத்தில் அமர்ந்து, வேறெங்கும் செல்லாமல் வேள்வியை கண்காணிக்க வேண்டும். வீடுகளில் நடைபெறும் வைதீக சடங்குகளிலும் இந்த முறை பின்பற்றப்படுவதுண்டு. ஆனால் பல இடங்களில் எவரும் அவ்வாறு உட்கார்ந்து கண்காணிப்பதில்லை என்பதால், ஒரு தர்ப்பைக் கட்டினை பிரம்மாவாக பாவித்து அதன் மேல் அட்சதை தூவி வைதீக சடங்குகளை, பெரும்பாலான இடங்களில் இந்நாளில் நடத்துகின்றனர். பெருமானை புறக்கணித்துத் தான் செய்ய திட்டமிட்ட வேள்வி அனைவர்க்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரம்மாண்டமான அளவில் வேள்வி செய்ய தக்கன் நினைத்தான் என்பதை குறிப்பிடும் வண்ணம் பெரு வேள்வி என்று குறிப்பிடுகின்றார். தக்கன் நடத்திய வேள்வி பெருமானை நிந்தித்து செய்யப் பட்டமையால்  பெரு என்ற சொல் இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கமும் பொருத்தமாக உள்ளது. வேதங்களில் சொல்லப் பட்டுள்ள நெறிக்கு மாறாக அமையக் கூடாது என்பதை கருத்தினில் கொண்ட பெருமான் இந்த வேள்வி முற்றுப்பெறாமல் அழிக்கின்றார்.      
  
பொழிப்புரை:

சிவபெருமானை நிந்தனை செய்வது தகாத குற்றமாக கருதப்படுவதால், பெருமானை நிந்தனை செய்து பெரிய அளவில் நடத்தப் பட்ட தக்கனது வேள்வி முற்றுப் பெறாமல் அழித்ததுமன்றி, அந்த வேள்வி செய்தவர்கள் மற்றும் வேள்வி செய்வதற்கு துணையாக நின்றவர்கள் ஆகிய சந்திரன், இந்திரன், வேள்வித் தலைவன், சூரியன், அக்னி, வேள்வியில் பிரமனாக கருதப்பட்டவன் ஆகிய அனைவரையும் தண்டித்தவரும், இயற்கையிலேயே மலங்களிலிருந்து விடுபட்டவரும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் உள்ள தலம் முதுகுன்றம் ஆகும். இனிப்பான மாங்கனிகள் உடைய மாமரம் சிறந்த பலா மரங்கள் வாழை மரங்கள் கமுகு மற்றும் குலை குலையாக தேங்காய் கொண்டுள்ள உயர்ந்த தென்னை மரங்கள் ஆகிய சோலைகள் நிறைந்த இந்த தலத்தில் முக்கனிகளின் சாறு ஒழுகி அதனால் விளைந்த சேறு எப்போதும் உலராமல் இருக்கும் நீண்ட வயல்களைக் கொண்ட செழிப்பு மிகுந்த தலம் முதுகுன்றமாகும்.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.