முகப்பு
தினம் ஒரு தேவாரம்

104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 5

பெருமான் அணிந்துள்ளார்

Updated On : 5 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:53 PM


பாடல் 5:

    இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒரு பாலா ஒரு பால் எள்காது
    உழை மேவு முரி உடுத்த ஒருவன் இருப்பிடம் என்பர் உம்பர் ஓங்கு
    கழை மேவு மடமந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின்
    முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றே

விளக்கம்:

Advertisement

உழை=மான்: உழை மேவும் முரி=தோல், கழை=மூங்கில்; இழை=அணிகலன்; எள்குதல்= இகழுதல், எள்காது-இகழாது; உம்பர்=தேவர்கள், இங்கே தேவர்களின் உலகம்; ஒண்=சிறந்த; கல்லின் முழை=மலையில் அமைந்துள்ள குகையில்; மால் யானை=சிறந்த பெரிய யானை; தனது மனைவியை உடலின் ஒரு பாகத்தே பெருமான் ஒருவன் தான் வைத்துள்ளான். மேலும் மான் தோல் புலித்தோல் ஆகியவற்றை, தவம் செய்யும் போதும் பூஜை வழிபாடுகள் செய்யும் போதும் தாங்கள் அமரும் ஆசனமாக பயன்படுத்தும் எவரும் அந்த தோலினை ஆடையாக அணிவதில்லை. எனவே தான் பெருமான் மான் தோல் அணிந்திருக்கும் நிலையினை குறிப்பிடும் சம்பந்தர் தோல் என்று இகழாது மான் தோலினை பெருமான் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். வேறு எவரும் இத்தகைய கோலத்துடன் காட்சி அளிப்பதில்லை என்பதால் ஒப்பற்ற ஒருவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மட மந்தி=பெண் குரங்கு; ஏந்திழை=சிறந்த நகைகளை உடலில் கொண்டவள்;       

பொழிப்புரை:

மேகலை எனப்படும் அழகிய அணிகலன் பொருந்திய மார்பகங்களை உடையவளும் அழகிய நகைகளைத் தனது உடலில் ஏந்தியவளும் ஆகிய உமையன்னையைத் தனது உடலின் ஒரு புறத்தே வைத்துள்ள பெருமான், தனது உடலின் ஒரு பகுதியில் தோல் என்று இகழாது மான் தோலினை அணிந்துள்ளான். இவ்வாறு ஒப்பற்றவனாக காட்சி தரும் பெருமான் உறையும் திருக்கோயில் உள்ள இடம் முதுகுன்றமாகும். வானுலகம் எட்டும் வண்ணம் உயர்ந்து வளர்ந்துள்ள மூங்கில் மேல் அமர்ந்துள்ள பெண் குரங்கு, மழை வருதலைக் கண்டதும் அச்சமுற்று தனது குட்டியுடன் மலையில் உள்ள குகை ஒன்றினில் ஒடுங்கும் பொருட்டு வேகமாக கீழே இறங்க, பெரிய யானைகள் தங்களது குட்டிகளுக்காக உணவினைத் தேடும் பொருட்டு அலைந்து கொண்டிருக்கும் சாரல்களை உடைய முதுகுன்றமே, பெருமானின் திருக்கோயில் உள்ள தலமாகும்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.