117. காடது அணிகலம் - பாடல் 10
புலித்தோல் உடுப்பர்
பாடல் 10:
அடியிணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்
கொடியணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோலுடுப்பர்
பிடியணியும் நடையாள் வெற்பு இருப்பதோர் கூறுடையர்
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக் கண்டரே
விளக்கம்:
Advertisement
அடியிணை கண்டிலன் மால், முடி கண்டிலன் தாமரையோன், கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர், புலித்தோல் உடுப்பர், பிடியணியும் நடையாள் ஓர் கூறுடையார், வெற்பு இருப்பது என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பிடி=பெண் யானை; வெற்பு=மலை, இங்கே இமயமலை; கடி=நறுமணம்;
பொழிப்புரை:
பெருமானது இணையான திருவடிகளை திருமால் காணமுடியவில்லை; தாமரை மலரினை தனது ஆசனமாக உடைய பிரமனாலும் பெருமானின் திருமுடியை காண முடியவில்லை; தனது கொடியில் அடையாளமாக உள்ள எருதினைத் தனது வாகனமாக உகந்து ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; தன்னை எதிர்த்து வந்த புலியினை அடக்கி அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டவர் சிவபெருமான்; பெண் யானை போன்று அழகிய நடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் வாழ்வது இமயமலையினில்; இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், மணம் வாய்ந்த சோலைகள் நிறைந்த சீர்காழியில் நீலகண்டராக உறைகின்றார்.