முகப்பு
தினம் ஒரு தேவாரம்

101. நின்று மலர் தூவி  - பாடல் 3

இறைவன் அரியவன்

Updated On : 11 ஜனவரி, 2019 at 11:27 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:38 PM


பாடல் 3:

    ஐயன் முதுகுன்றைப்
    பொய்கள் கெட நின்று
    கைகள் கூப்புவீர்
    வையம் உமதாமே

விளக்கம்:

Advertisement

ஐயன்=தலைவன்; வையம்=உலகம்; பொய்கள்=வஞ்சனையான சிந்தனைகள்; இறைவனின் சன்னதி முன்னர் பொய்கள் கெட நின்று வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். ஏன் அவ்வாறு பொய்கள் கெட நின்று வழிபடவேண்டும் என்பதற்கு அப்பர் பிரான் விடை அளிக்கும் பாடல் (6.56.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வஞ்சனை எண்ணங்கள் உடைய நெஞ்சினில் புகுவதை இறைவன் தவிர்ப்பான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எனவே இறைவன் நமது மனதினில் புகவேண்டும் என்று நாம் விரும்பினால் பொய்கள் கெட நாம் அவனை வழிபடவேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது

    மை சேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி மாலுக்கு
         ஓராழி ஈந்தாய் போற்றி
    பொய்ச் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
         போகாது என் உள்ளத்து இருந்தாய்             போற்றி
    மெய் சாரப் பால் வெண்ணீறாடீ போற்றி மிக்கார்கள்
         ஏத்தும் விளக்கே போற்றி
    கை சேர் அனல் ஏந்தியாடீ போற்றி கயிலை
         மலையானே போற்றி போற்றி

வஞ்சனை உடைய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களை இனம் கண்டுகொண்டு நாணி நிற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் கூறுவதும் (5.90.9) நமது நினைவுக்கு வருகின்றது. பொக்கம்=பொய்ம்மை. தனது நடிப்பினால் ஒருவன் மனிதர்களை ஏமாற்றலாம். மனத்தளவில் இருக்கும் வஞ்சனையை மறைத்து, ஒருவரை மதிப்பது போலும் வணங்குவது போல் நடித்து ஏமாற்றுவது எளிது. ஆனால் இறைவனை அவ்வாறு ஏமாற்ற முடியாது என்று அப்பர் பிரான் நமக்கு எச்சரிக்கை தருகின்றார். நெக்கு=உள்ளம் நெகிழ்ந்து

    நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
    புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்
    பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
    நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே

இதே கருத்து இன்னம்பர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் பாடலிலும் (5.21.8) உணர்த்தப்படுகின்றது. கீழ்க்கணக்கு=சிறு வரிகளால் எழுதப்படும் குறிப்பு. இன்னம்பர் தலத்தில் உறையும் இறைவனுக்கு கீழ்க்கணக்கர் என்பது ஒரு திருநாமம். இந்த தலத்து இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயரும் உண்டு. அதனை உணர்த்தும் வகையில் எழுதும் கீழ்க்கணக்கு என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். இந்த பாடலில் மனம், மொழி மற்றும் மெய்யினால் செய்யப்படும் வழிபாடு உணர்த்தப்படுகின்றது. மனத்தினால் இறைவன் பால் அன்பு கொண்டு, உடலால் தொழுதும் மலர்கள் தூவியும், வாயினால் அழுதும் அவனது திருநாமங்களை அரற்றியும் வழிபாடு செய்ய வேண்டும் என்று அப்பர் பெருமான் கூறுகின்றார்

    தொழுது தூமலர் தூவித் துதித்தி நின்று
    அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
    பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
    எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கும் இறைவன், தன்னை வழிபடும் அடியார்களின் வழிபாட்டு நிலையையும் அறிந்து குறித்துக் கொள்கின்றான் என்று மேற்கண்ட இன்னம்பர் பதிகத்து பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு உணர்த்துவதன் மூலம் வஞ்சனையான வழிபாட்டினை, தவிர்க்குமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். இதே கருத்தினை உள்ளடக்கிய திருமந்திரப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கண்காணியாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் இறைவனின் தன்மையை உணர்ந்தவர்கள் தவறேதும் செய்ய மாட்டார்கள் என்று திருமூலர் இங்கே கூறுகின்றார்.

    கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
    கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்
    கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
    கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.

வஞ்சனை நிறைந்த நெஞ்சர்க்கு இறைவன் அரியவன் என்று அப்பர் பிரான் கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.07.1) குறிப்பிடுகின்றார் கரவு=கள்ளம், வஞ்சனை. இறைவனுக்கு உரிய நமது மனம், மொழி மெய்களை வேறு பொருட்களுக்கு உரித்தாக்குதல் வஞ்சனையான செயலாக அப்பர் பெருமானால் கருதப் படுகின்றது. அவ்வாறு இருப்பவர்களின் நெஞ்சத்தை வலிமையான நெஞ்சம் (கல் நெஞ்சம்) என்று இங்கே அப்பர் பெருமான் சாடுகின்றார்..

    கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானைக் கரவார் பால்
    விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
    அரவாடச் சடை தாழ அங்கையினில் அனலேந்தி
    இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

 
பொழிப்புரை:

முதுகுன்றத்து தலைவனை, மனதினில் வஞ்சனை ஏதுமின்றி தங்களது கைகளை தலைக்கு மேல் உயரத்தி கூப்பித் தொழும் அடியார்களுக்கு உலகமே உரிமைப் பொருளாக மாறிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.