103. தேவா சிறியோம் பிழையை - பாடல் 3
முனிவர்களும் அந்தணர்களும்
பாடல் 3:
நீடு மலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானைப்
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே
விளக்கம்:
Advertisement
முனிவர்களும் அந்தணர்களும் வழிபடுவதை முந்தைய இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் எப்போதும் இறைவனின் பண்புகளையும் தன்மைகளையும் அறிந்து கொள்வதற்காக தேடிக் கொண்டிருக்கும் அடியார்களை குறிப்பிடுகின்றார். தேடுதல் என்ற சொல் ஆராய்தல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. நிரந்தரம்=எப்போதும்; நீடு=மிகுதியான; புனல்=நீர்; இரண்டாவது பாடலில் தலத்தின் உள்ள குரங்குகள் எவ்வாறு இறைவனை வழிபடுகின்றன என்று கூறிய சம்பந்தர், இந்த பாடலில் கிளிகள் இறைவனின் திருநாமங்களை சொல்ல பழகிக்கொண்டு அவனை புகழ்கின்றன என்று கூறுகின்றார்.
தேடும் அடியார் என்று கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் அங்கமாலை பதிகத்து கடைப் பாடலை (4.9.12) நினைவூட்டுகின்றது. பிரமனும், திருமாலும் தேடிக் காணமுடியாத சிவபிரானைத் தனது உள்ளத்தின் உள்ளே இருப்பதைத் தான் கண்டுகொண்டதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தைனையில் ஆழ்ந்திருந்த அப்பர் பிரானின் நெஞ்சத்தில் இறைவன் இருந்ததில் வியப்பேதும் இல்லை.
தேடிக் கண்டு கொண்டேன் -- திரு
மாலும் நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்
மேற்கண்ட பாடலில் அப்பர் பிரான் கூறுவது போல் மணிவாசகர் கூறும் பாடலொன்று அன்னைப்பத்து பதிகத்தில் காணப்படுகின்றது. சிவபிரானின் மீது தீராத காதல் கொண்ட தலைவியின் எண்ணங்களை, அவளது தோழி, தலைவியின் தாய்க்கு வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல்களைக் கொண்ட பதிகம். அருளாளர்கள், தங்களை இறைவன் மீது காதல் கொண்ட பெண்ணாக உருவகித்துக் கொண்டு, தங்களது எண்ணங்களை, தனது வாய்மொழியாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ வெளிப்படுத்துவது, பக்தி இலக்கியங்களின் மரபு. இந்த பாடலில் மாணிக்க வாசகர், திருமாலும் பிரமனும் காணமுடியாத சிவபிரான், தனது நெஞ்சத்தில் இருப்பதகாவும், இது ஒரு அதிசயம் என்றும் கூறுகின்றார். உன்னுதல்=நினைத்தல். உத்தரகோச மங்கை என்ற தலம், இங்கே உத்தர மங்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உன்னற்கு அரிய சீர் உத்தர மங்கையர்
மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்
எந்த ஒரு பொருளையும் அந்த பொருள் இருக்கும் இடத்தில் தேடினால் தான் கிடைக்கும். அடியார்கள் மனதினில் உறையும் இறைவனை அங்கே தேடினால் தானே அவன் அகப்படுவான். அப்பர் பிரான் தான் தேடியது எங்கே என்பதையும், இந்த பாடலில் தேடிக் கண்டு கொண்டேன் என்று குறிப்பிடுகின்றார். காண்டலே கருத்தாய் என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் (பதிக எண்: 4.20) கடைப் பாடலில் பக்தர்களின் சித்தத்துள் இருக்கும் சிவபிரான் என்று குறிப்பிடுகின்றார்.
நாடினார் கமலம் மலர் அயனோடு
இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு
பத்தர்கள் சித்தத்துள் புக்குத்
தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே
கன்றாப்பூர் (தற்போதைய பெயர் கண்ணாப்பூர்) தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அப்பர் பிரான் அடியார்களின் நெஞ்சத்தினுள்ளே சிவபிரானைக் காணலாமே என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் நாம் இறக்கும் தருவாயில் தொண்டையில் கோழை அடைக்கும் என்பதை கூறும் அப்பர் பிரான், இறந்த உடலினை உறவினர் என்ன செய்வார்கள் என்றும் கூறுகின்றார். நடுதறி என்பது கன்றாப்பூர் தலத்தின் இறைவனின் திருநாமம். ஐ=கோழை. மிடறு=குரல்வளை. உடலினை விட்டு உயிர் பிரியும் நாள் வரை காத்திராமல், அதற்கு முன்னரே தலைவனாகிய பெருமானுக்கு அடிமையாக மாறி, அவன் பால் மிகுந்த அன்பு கொண்டு மனம் கசிந்து மயிர்ப்புளகம் அடையும் வண்ணம் உணர்ச்சி பெருக்குடன் பெருமானின் திருவடிகளை தொழும் அடியார்களின் நெஞ்சினுள்ளே இறைவனைக் காணலாம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினால் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தில்
இடுவதன் முன் மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய்
அரும்பி அடிகள் பாதம்
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
பொழிப்புரை:
அதிகமான மலர்களும் நீரும் கொண்டு சென்று வழிபட்டு, எப்போதும் அவனது பண்புகளையும் தன்மைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் அடியார்களின் சிந்தனையில் திகழும் இறைவன் உறையும் தலம் முதுகுன்றம் ஆகும். இந்த தலத்தில் உள்ள சோலைகள் மேகங்கள் தோயும் வண்ணம் உயர்ந்து காணப்படுகின்றன. அத்தகைய சோலைகளில் உள்ள குயில்கள் பாட, அந்த குயில்களின் அருகே உள்ள கிளிகள், அடியார்கள் சொல்லிக் கேட்ட பெருமானது திருநாமங்களை நினைவு கூர்ந்து, மீண்டும் மீண்டும் சொல்லி பழகிக் கொண்டு இறைவனை வாழ்த்துகின்றன.