முகப்பு
தினம் ஒரு தேவாரம்

103. தேவா சிறியோம் பிழையை  - பாடல் 5

இடர்களைக் களைந்து

Updated On : 27 ஜூலை, 2018 at 10:52 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM


பாடல் 5:

    வைத்த நிதியே மணியே என்று வருந்தித் தம்
    சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்
    கொத்தார் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்து
    முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே

விளக்கம்:

Advertisement

மணியும் முத்தும் கலந்து ஓடியதால் மணிமுத்தாறு என்று பெயர் வந்தது என்பார்கள். வைத்த நிதி=சேமிப்பாக உள்ள செல்வம்; சேமித்து வைக்கப் படும் பொருள், பின்னாளில் தேவைக்கு உதவுவது போன்று, நாம் செல்வம் ஈட்ட முடியாத காலத்தில் பயன்படுவது போன்று சிவபெருமான் நமக்கு துன்பம் வந்த காலத்தில் இடர்களைக் களைந்து உதவும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு பெருமான் உதவும் நிலை பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. 

இன்றைய சேமிப்பு பின்னாளில் நமக்கு உதவுகின்றது என்பதை புரிந்து கொள்ளும் நாம் நாளைய தேவைகளுக்காக இன்றும் நாம் ஈட்டும் செல்வத்தின் ஒரு பகுதியை சேமித்து வைக்கின்றோம். நாளை நமது வாழ்வினில் நடக்கவிருப்பது என்ன என்பதை நாம் அறிய முடியாது. வரும் நாட்களில் நமது வினைப்பயனால் நாம் பல துன்பங்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் தருணத்தில், இறைவனின் கருணை நமக்கு தேவையாக இருக்கும் அந்த நேரத்தில், நமது உடலும் மனமும் நம்முடன் ஒத்துழைத்து இறைவனின் திருநாமங்களை சொல்வதற்கோ அல்லது அவனை வழிபடுவதற்கோ வழி வகுக்குமா என்பது நிச்சயமில்லை. எனவே தான் அந்நாளில் நமக்கு உதவும் பொருட்டு இன்றே  பெருமானை வழிபாட்டு, அவனது கருணையை பெற்று, சேமிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எனவே பெருமான் இன்று நமக்கு அருள் புரிந்து நமது துன்பங்களை தவிர்ப்பதுடன், வரும் நாட்களில் நமக்கு உறுதுணையாக இருப்பார் என்ற செய்தி, வைத்த நிதி என்ற தொடர் மூலம் மிகவும் அழகாக உணர்த்தப் படுகின்றது.

    வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி
       மனத்து அடைத்துச்
    சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்
    மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
    அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே

மேலே குறிப்பிடப்பட்ட பாடல் அப்பர் பிரான் கரையேறிய பின்னர் அருளிய பதிகத்தின் (1.94.5) பாடலாகும். சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளிவிடப் பட்ட அப்பர் பிரான் சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தினை (4.11) ஓதி, கல்லே தெப்பமாக மிதக்க கரை ஏறியதை நாம் அறிவோம்.  நமச்சிவாய என்ற இறைவனின் திருநாமத்தை ஒவ்வொரு பாடலிலும் உள்ளடக்கிய பதிகம் தனது உயிரினை காத்த தன்மையை நன்கு உணர்ந்த அப்பர் பிரான், பின்னாளில் இறைவன் நமக்கு உதவுவார் என்பதை மனதினில் கொண்டு இன்றே அவனை மனம் ஒன்றி வழிபடவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். சந்திரனின் அடர்ந்த கலைகள் போன்று பல கலைகளையும் கற்ற அந்தணர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூர் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மொய்த்த கதிர் போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் என்பதற்கு, நிறைந்த ஒளியினை உடைய சந்திரனின் கிரணங்கள் போன்று குளிர்ந்த தன்மை கொண்ட (உயிர்கள் பால் கொண்ட கருணையால்) பாதிரிப்புலியூர் தலைவன் சிவபிரான் என்றும் பொருள் கொள்ளலாம்.   

உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நிலையற்றவை. என்றேனும் ஒரு நாள் அழிந்து விடக் கூடியவை. உயிர் பிரியும் போது எடுத்துச் செல்ல முடியாதவை. ஆனால் சிவபிரானை எப்போதும் நினைத்து அந்த நினைவினால் நாம் பெறுகின்ற புண்ணியம்  வீடுபேற்றினை பெறுவதற்கு வழி வகுப்பதால், அது தான் அழியாத சேமிப்பாக கருதப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

தில்லை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.80.4) இவ்வாறு பின்னாளில் நமக்கு உதவும் பெருமான் என்பதால் வருகின்ற காலத்தை நினைத்து தான் கொண்டிருந்த அச்சத்தினை ஒழித்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நமது வாழ்வில் தேவையான சமயத்தில் பயன்படக்கூடிய செல்வம் நமச்சிவாய என்னும் சொல் என்பதை தான் உணர்ந்ததால், தனது எதிர்காலம் பற்றிய அச்சம் ஏதும் இல்லாமல் தான் இருப்பதாக கூறும் அப்பர் பிரான் அவ்வாறே நாமும் பயப்படாமல் இருப்பதற்கு நமக்கு அந்த மந்திரத்தை கற்றுக்கொடுப்பதை இங்கே உணரலாம். வைச்ச பொருள்=வயது முதிர்ந்த காலத்திலும் உடல் வலிமை குன்றிய காலத்திலும் பயன்படுவதற்காக சேமிப்பாக நாம் வைத்துள்ள பொருள். அருளாளர்கள் பொதுவாக பயப்படுவது அடுத்த பிறவி ஒன்று எடுக்க நேரிடுமோ என்பது தான். பஞ்சாக்கர திருநாமத்தை தான் உச்சரித்து வந்ததால், தனக்கு அந்த பயம் நீங்கியது என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பித்தன் என்ற சொல் எதுகை கருதி பிச்சன் என்று மாறியது. 

    வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்றெண்ணி நமச்சிவாய
    அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
    பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
    கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்
       கொண்டு காண்பதென்னே.  

திருவாசகம் போற்றித் திருவகவலில் மணிவாசகர், வாழ்வே போற்றி வைப்பே போற்றி என்று, பெருமான் நமது வாழ்வாகவும், சேமிப்பு போன்று நாம் துயருறும்போது இடர்களைக் களைபவனாகவும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடல் ஒன்றினில் வாழ்முதலே என்றும் வைப்பே என்றும் இறைவனை குறிப்பிடுகின்றார். நமது வாழ்வினுக்கு மூலாதாரமாக இருக்கும் இறைவன், சேமிப்பு போன்று நமது உடலும் மனமும் துன்பத்தினால் நலிவுற்ற நிலையிலும் இடர்களை களைந்து உதவுகின்றான் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். எய்ப்பு=இளைத்து வருந்தும் நிலை; தருக்கி= செருக்குற்று; வினைத் துணையேன்=வினையினைத் துணையாக கொண்டவன், வினைகளுடன் பிணைந்துள்ளவன், வினைகளைத் தவிர்த்து வேறு துணை இல்லாதவன்;

    தனித்துணை நீ நிற்க யான் தருக்கித்
       தலையால் நடந்த 
    வினைத் துணையேனை விடுதி கண்டாய்
       வினையேனுடைய     
    மனத் துணையே என் தன் வாழ்முதலே எனக்கு
       எய்ப்பில் வைப்பே
    தினைத் துணையேனும் பொறேன் துயர்
       ஆக்கையின் திண் வலையே

தனது ஆற்றலில் செருக்கு கொண்டு கர்வம் மிகுந்து திரியும் எவரையும் தலையால் நடக்கின்றான் என்று கூறுவது உலக வழக்கு. இறைவன் இருக்கும் இடத்தில் வினைகள் அடங்கிச் செயலற்று கிடக்கின்றன. இறைவன் இல்லாத நேரத்தில் அவை தலை விரித்து ஆடுகின்றன. குருந்த மரத்தின் அடியில் இறைவன் முன்னிலையில் இருந்த அடிகளார், இறைவன் தனக்கு ஒப்பற்ற துணையாக இருந்த நிலையில் வினைகள் தம்மை விட்டு நீங்கியதையும், வினைகளின் பிடியிலிருந்து தான் விடுபட்டு இருந்த நிலையினையும் உணர்ந்தார் போலும். இறைவன் தன்னைத் தனியாக விட்டுவிட்டு, தன் கண் முன்னே முன்னர் தோன்றிய சீடர்களுடன் மறைந்த நிலையில், வினைகள் தன்னை மீண்டும் ஆட்கொண்டதாக நினைத்து வருந்துகின்றார். தனது மனதின் துணையாகவும் வாழ்க்கையின் அடித்தளமாகவும் சேமிப்பு போன்று தான் துயருற்று வருந்தி இளைக்கும் தருணங்களில் உதவும் சேமநிதியாகவும் உள்ள இறைவனே என்று அழைத்து இறைஞ்சுகின்றார். அவர் விடுக்கும் விண்ணப்பம் தான் என்னே. தனது உடலினை வலிமையான வலையாக உருவகித்து, அந்த உடலாகிய வலையில் அகப்பட்டுள்ள உயிர் தனது சுதந்திரம் இழந்து ஐந்து பொறிகளின் ஆளுமைக்கு உட்பட்டு அடிமையாக கிடப்பதாகவும் உணர்த்தி, இத்தகைய தன்மையை தினையளவு நேரம் கூட பொறுக்க முடியாமல் உயிர் வருந்துவதாகவும் குறிப்பிட்டு, உயிரினை வினைகளின் பிடியிலிருந்து, ஐந்து பொறிகளின் ஆளுமையிலிருந்து விடுவிக்குமாறு இங்கே வேண்டுகின்றார்.    
   
பொழிப்புரை:

சேமிப்பாக வைக்கப்பட்டுள்ள நிதி போன்று பின்னாளில் அருள் புரிபவனே, ஒளி வீசும் மணி போன்று மிகவும் அரிதானவனே, என்று பெருமானை அழைத்து, தமது பிறவிப்பிணி இன்னும் தீரவில்லையே என்ற வருத்தத்துடன், நைந்த சிந்தையராய் சிவபெருமானை தியானிக்கும் அடியார்களின் மனதினில் உறைபவர் சிவபெருமான். கொத்து கொத்தாக சந்தன மரத்தின் பூக்களையும் குரவ மலர்களையும் வாரிக் கொணர்ந்து கரை சேர்க்கும் மணிமுத்தாறு நதியின் கரையில் அமைந்துள்ள முதுகுன்றமே, மேலே குறிப்பிட்டவாறு அடியார்கள் சிந்தனை செய்யும் பெருமான் உறையும் இடமாகும்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.