95. காரைகள் கூகை முல்லை - பாடல் 8
கயிலை மலையை
பாடல் 8:
வலமிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா
அரக்கன் வலியோடு
உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான்
உகந்த நகர் தான்
நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என
நின்ற நீதி அதனை
நலமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
நனிபள்ளி போலும் நமர்காள்
விளக்கம்:
Advertisement
வாளன்=வாளினை உடையவன்; உலம்=கற்றூண்; நலமிகு கீழுமேலும்=நலமுடைய கீழ் ஏழ் மற்றும் மேலேழ் உலகங்கள்; வலமிகு வாளன் வேலன் என்ற தொடரினை அரக்கன் என்பதுடன் கூட்டி. வலிமை மிகுந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடைய அரக்கன் இராவணன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பொழிப்புரை:
வலிமை மிகுந்தவனும், சிறந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடையவனும் ஆகிய பெருமான், வளைந்த வாள் போன்று நீண்ட பற்களை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையை மதியாது அதனைப் பேர்த்து எடுக்கத் துணிந்த போது, அரக்கனது கற்றூண் போன்று வலிமையான தோள்களும் வலிமை இழக்கும் வண்ணம் தனது விரலை மலையின் மீது ஊன்றி அரக்கனை மலையின் கீழே அழுத்தினான். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறையும் நகரம் தான் நனிபள்ளி. நலங்கள் பல உடைய கீழேழ் மற்றும் மேலேழ் உலகங்களிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாதவனாக திகழும் சிவபெருமானை, நீதியின் வடிவமாக திகழும் பெருமானை வணங்கி அவனது திருவடிகளைப் போற்றி புகழும் அடியார்கள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.