97. மந்திர மறையவை - பாடல் 1
இறைவனை வணங்கும்
பின்னணி:
இரண்டாவது தல யாத்திரையாக நனிபள்ளி சென்ற திருஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு, தலைச்சங்காடு, சாய்க்காடு, பல்லனீச்சரம், வலம்புரம், திருமுல்லைவாயில் ஆகிய தலங்கள் சென்று பெருமானை கண்டு மகிழ்ந்து வணங்கி பதிகங்கள் பாடி போற்றிய பின்னர், திருவெண்காடு வந்து சேர்கின்றார். இந்த தலத்து இறைவன் மீது மூன்று பதிகங்கள் திருஞானசம்பந்தர் அருளியுள்ளார். கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகத்தின் (2.48.2) பாடலில் வெண்காட்டு இறைவனை வணங்கும் அடியார்களை தோயாவாம் தீவினைகள் என்று பாடிய சம்பந்தர், உண்டாய் நஞ்சை என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில் (2.61.11) அந்த பதிகத்தினை பாடி வெண்காட்டானை வணங்கும் அடியார்களை தீவினைகள் அடையாது என்று கூறுகின்றார். இந்த தலத்தின் மீது அருளிய மூன்றாவது பதிகத்தில், மந்திர மறையவை என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தினை பாடி பெருமானை வணங்கும் அடியார்களின் அருவினைகள் அறுதல் ஆணை என்று ஆணை பிறப்பிக்கின்றார். எனவே இந்த பதிகமும் ஆணைப் பதிகமாக கருதப் படுகின்றது.
பாடல் 1:
மந்திர மறையவை வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்த வெண்ணீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே
Advertisement
விளக்கம்:
மந்திரம்=சிறப்பு வாய்ந்த நமச்சிவாய மந்திரம். மந்திர மறை=சிறப்பான நமச்சிவாய மந்திரத்தை தனது நடுவினில் கொண்டுள்ள வேதங்கள். வேதங்கள் மொத்தத்தில் நான்கு என்றாலும், அதர்வண வேதம் மந்திரங்கள், மருத்துவம் பற்றி அதிகமாக கூறுவதால், அதனை விட்டுவிட்டு மூன்று வேதங்கள் என்று கூறுவதுண்டு. இந்த மூன்று வேதங்களின் தொகுப்பினை வேதத்ரயீ என்றும் சொல்வார்கள். இன்றும் வடநாட்டில் சதுர்வேதி, திரிவேதி என்ற பெயர்கள் பழக்கத்தில் உள்ளன. இந்த மூன்று வேதங்களில் நடுவாக கருதப்படுவது யஜூர் வேதமாகும். யஜூர் வேதத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. நடுவாக உள்ள நான்காவது காண்டத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. பதினோரு அனுவாகங்களில் நடுவாக கருதப்படுகின்ற ஆறாவது அனுவாகத்தில் ஸ்ரீ ருத்ரம் உள்ளது. பதினோரு சூக்தங்கள் கொண்டுள்ள ஸ்ரீ ருத்ரத்தின் ஆறாவது சூக்தத்தின் நடுப் பகுதியில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது. இவ்வாறாக வேதத்தின் நடுவில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது என்று நாம் கருதலாம். திருமூலரும் வேதத்தின் நடுவில் உள்ள மந்திரம் பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுகின்றார். மந்திர மறையவை என்ற தொடருக்கு பதிலாக மந்திர மறையவர் என்ற பாடபேதமும் வழக்கில் உள்ளது. வேத மந்திரங்களை நன்கறிந்த மறையவர்கள், இறைவனைத் தொழுகின்றனர் என்ற பொருளும் பொருத்தமாக உள்ளது.
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்தி தந்தானே
பொழிப்புரை:
சிறந்த நமச்சிவாய மந்திரத்தைத் தனது நடுவில் கொண்டுள்ள வேதங்களும், வானவர்களும் இந்திரனும் வணங்கி வழிபட இறைவன் திருவெண்காடு தலத்தினில் உறைகின்றார், அவர் சுடுகாட்டினில் உள்ள வெந்த சாம்பலைத் தனது திருமேனியில் பூசியுள்ளவர்; அவர் உலகத்திற்கும் உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் முடிவாகவும் உள்ளார்.