முகப்பு
தினம் ஒரு தேவாரம்

112. பொடியுடை மார்பினர் - பாடல் 1

இறைவனின் அருளால்

Updated On : 25 அக்டோபர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:40 PM

பின்னணி:

நெல்வாயில் அரத்துறை இறைவனின் அருளால் முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகொம்பு பெற்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் நெல்வெண்ணெய், பழுவூர், விசயமங்கை, புறம்பயம், வைகா, சேய்ஞலூர், பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம்புலியூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் வாழ்கொளிபுத்தூர் வந்து அடைகின்றார். இந்த தலம் வந்தடைந்த சம்பந்தர், கருங்குவளை மலர் போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய இறைவரின் திருவடிகளை வணங்கி திருப்பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். பதிகங்கள் பாடி நீடுவார் என்று குறிப்பிட்டுள்ளமையால் பல பதிகங்கள் சம்பந்தர் இந்த தலத்து இறைவனை குறித்து பாடியிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் நமக்கு இந்த பதிகமும் சாகை ஆயிரம் உடையார் என்று தொடங்கும் மற்றொரு பதிகமே கிடைத்துள்ளது. 

    சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
    கார்வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
    பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
    வார்புகழ் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.  

Advertisement

தலத்து இறைவின் திருநாமம் மாணிக்க வண்ணர்; இறைவியின் திருநாமம் வண்டார் பூங்குழலி. திருமால் வழிபாட்டு தாபித்த மாணிக்கலிங்கம் என்று கருதப்படுகின்றது. மாணிக்க வண்ணர் உறையும் தலம் என்ற நிலை, சம்பந்தர்க்கு பெருமானின் கருமை நிறம் உடைய கண்டத்தை நினைவூட்டியது போலும். கறைமிடற்றான் என்று பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சேக்கிழாரும் மேலே குறிப்பிட்டுள்ள பாடலில் கார் வளர் கண்டர் என்று கூறுவதை நாம் உணரலாம். சம்பந்தர் இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் பெருமானின் திருப்பாதங்களைப் பணிந்து இறைவனைப் காண்போம் என்று கூறியதை மனதினில் கொண்டு சேக்கிழார் இந்த பாடலில் கண்டர் தாள் பணிந்து காண்பவர் என்று திருஞானசம்பந்தரை குறிப்பிடுகின்றார். 

மயிலாடுதுறையிலிருந்து பதினாறு கி.மீ. தொலைவில் உள்ள தலம். மாயவரம் நகரிலிருந்து மணல்மேடு செல்லும் பாதையில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலின் அருகே உள்ள கிடாத்தலைமேடு என்ற இடத்திருந்தும் செல்லலாம். மயிலாடுதுறை மற்றும் வைத்தீசுவரன் கோயிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தற்போது வாளொளிபுத்தூர் என்று அழைக்கப் படுகின்றது. தீர்த்த யாத்திரையின் போது இங்கே வந்த அர்ஜுனனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது என்றும், அருகில் நீர்நிலைகள் ஏதும் இல்லாமையால் தாகத்துடன் தவித்த அர்ஜுனனின் எதிரில் ஒரு முதியவர் தோன்றினார் என்றும், அவரது கையில் தனது வாளைக் கொடுத்துவிட்டு அவர் காட்டிய இடத்தில் (வன்னி மரத்தின் அடியில்) தோண்டி ஊற்றெடுத்து வந்த நீரைக் குடித்த அர்ஜுனன் நனது வாளினை திரும்பப் பெற்றுக்கொண்ட பின்னர் முதியவராக வந்த சிவபெருமான் மறைந்து விட்டார் என்றும் கூறுவார்கள். துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.  

இந்த பதிகம் அகத்தியர் தேவாரத் திரட்டில் திருவடிப் பெருமை என்ற தலைப்பின் கீழே சேர்க்கப் பட்டுள்ள பெருமையினை உடையது. பாடல் தோறும் பெருமானின் திருவடிகளை காண்போம் என்றும் திருவடிகளில் சேர்வோம் என்றும் திருவடிகளைத் தொழுவோம் என்று முதல் பத்து பாடல்களில் கூறப் படுவதை நாம் உணரலாம். அரவணையான் என்று தொடங்கும் அப்பர் பிரானின் திருவதிகைப் பதிகமும் அந்தணாளர் என்று தொடங்கும் சுந்தரரின் திருப்புன்கூர் பதிகமும் இந்த தலைப்பின் கீழ் உள்ள மற்ற பதிகங்கள். 
       
பாடல் 1:

    பொடியுடை மார்பினர் போர்விடை ஏறிப் பூதகணம் புடைசூழக்
    கொடியுடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பல பல கூறி
    வடிவுடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்
    கடிகமழ் மாமலர் இட்டுக் கறைமிடற்றான் அடி காண்போம்
   

விளக்கம்:

பொடி=திருநீறு; கொடியுடை=அழகிய கொடிகள் நிறைந்த; மிடறு=கழுத்து; கடி=நறுமணம்; வாகனத்தில் ஏறி பலர் புடை சூழ செல்வதால், பெருமான் பிச்சை ஏற்பது அவரிடம் ஏதும் இல்லாத காரணத்தால் அல்ல என்பதும், பெருமான் பிச்சை ஏற்றாலும் தலைவனாக உள்ளார் என்பதையும் உணர்த்துகின்றது.    

பொழிப்புரை:

தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசியவரும் போர்க்குணம் கொண்டுள்ள எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பூத கணங்கள் புடை சூழ, செடிகொடிகள் நிறைந்த பல ஊர்கள் சென்று வேதங்களை சொல்லியவாறு பிச்சை ஏற்கச் செல்பவரும், அழகிய உருவமும் வாள் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்களும் கொண்டுள்ள உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய பெருமான் உறைகின்ற  வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று, உலகத்தவர் வாழும் பொருட்டு பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சினை உண்டு அதனைத் தனது கழுத்தினில் தேக்கி கருமை நிறத்து கறை தெரியும் வண்ணம் தோற்றம் அளிக்கும், இறைவனின் திருப்பாதங்களில் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.