முகப்பு
தினம் ஒரு தேவாரம்

112. பொடியுடை மார்பினர் - பாடல் 5

புன்னை, வெள்ளெருக்கு

Updated On : 29 அக்டோபர், 2018 at 5:47 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:40 PM

பாடல் 5:

    கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதில் ஒர் வெண்குழையோடு
    புனமலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி
    வனமுலை மாமலை மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
    இனமலர் ஏய்ந்தன தூவி எம் பெருமான் அடி சேர்வோம்

விளக்கம்:

Advertisement

அலங்கல்=மாலை;  வனமுலை=அழகிய முலை; கனம் என்ற சொல்லுக்கு கூட்டம், மிகுதி, செறிவு என்று பல பொருள்கள் உள்ளன. பொன் என்று பொருள் கொண்டு பொன் போன்ற நிறத்தில் உள்ள கொன்றை மாலை என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இலங்க=விளங்கித் தோன்ற; புனம்=முல்லை நிலம்; முல்லை மற்றும் கொன்றை முல்லை நிலத்து மலர்கள். ஏய்ந்தன=தகுந்த; பெருமானுக்கு பிடித்த எட்டு மலர்களை கொண்டு அவனுக்கு அர்ச்சனை செய்தல் சிறப்பாக கருதப் படுகின்றது. சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள், புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை. அக மலர்கள் என்று நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணங்கள் எட்டினை குறிப்பிடப் படுகின்றன. கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

மூன்றாவது நான்காவது ஐந்தாவது மற்றும் ஏழாவது பாடல்களிலுள்ள பல கூறி என்ற தொடரை இறைவன் கூற்றாக கொண்டு பொழிப்புரை அளிக்கப் பட்டுள்ளது. இவற்றை அடியார்கள் கூற்றாக கொண்டு, அடியார்கள் இறைவனின் தன்மையைக் குறிப்படும் புகழ்ச் சொற்களாக கருதுவதும் பொருத்தமாக உள்ளது. மேலும் ஆறாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் உள்ள கருத்தினை, பலவகையாக அடியார்கள் போற்றிப் புகழ்ந்த என்று உணர்த்தும் தொடர்களை, காணுங்கால் இந்த பாடல்களுக்கும் அவ்வாறு பொருள் கொள்வது மிகவும் பொருத்தமென்று தோன்றுகின்றது.      

பொழிப்புரை:

பொன் போன்று அழகிய கொன்றை மலர் மாலைகள் தனது திருமேனியில் விளங்கித் தோன்ற அணிந்தவனும், தனது காது ஒன்றினில் வெண்குழை அணிந்தவனும், முல்லை மற்றும் கொன்றை மாலைகளை சடையில் அணிந்தவனும், பலியேற்பதற்காக பல ஊர்கள் செல்வோம் என்று கூறிக் கொண்டு செல்பவனும், அழகிய மார்பகங்களை உடையவளும் மலையில் வளர்ந்த மங்கையும் ஆகிய பார்வதி அன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமான் உறைகின்ற  வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் பெருமானின் அர்ச்சனைக்குத் தகுந்த சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.