119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 8
சிவபெருமான் உறையும்
பாடல் 8:
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய
நிறுவி விரல் மா
மறையின் ஒலி முறை முரல் செய் பிறை எயிறன் உற அருளும்
இறைவன் இடமாம்
குறைவின் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள
முறையொடு வரும்
புறவன் எதிர்நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளும்
புறவம் அதுவே
விளக்கம்:
Advertisement
புறவம் என்பது இந்த பாடலில் வரும் பெயர். றகரம் குடும்பத்தைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துகள் இந்த பாடலின் அனைத்துச் சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் உணரலாம். புறா உருவில் வந்து சிபி சக்ரவர்த்தியை பரிசோதனை செய்த பழி நீங்கும் வண்ணம் இறைவனை தீக்கடவுள் வழிபட்டு பயன் அடைந்ததால் புறவம் என்றார் பெயர் வந்தது என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது.
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறவருளு மிறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே
தெறு=அழிக்க; புயவன்=தோள்களை உடைய இராவணன்; விறல்=வலிமை; விரல் நிறுவி= விரலை அழுத்தி; பிறை எயிறன்=பிறைச் சந்திரன் போன்று வளைந்த பற்கள்; மறையின் ஒலி=சாம கானம்; மறை அமரர்=முறையே பருத்தும் புறாவுமாக வந்த தேவர்கள், இந்திரன் மற்றும் அக்னி; நிறை=புறாவின் எடைக்குத் தகுந்து சமமாக உள்ள சதை; புறவன்=புறாவுக்கு உரியவனாகிய பருத்து உருவில் வந்த இந்திரன்; முறை முரல் செய்=முறையாக வாசித்த; உற=வாழ் நாளும் வாளும் அருளாக பெறும் வண்ணம்; பொறையன் மறை அமரர் நிறை என்ற தொடருக்கு வேதங்கள் மற்றும் தெய்வங்கள் உணர்த்தும் நீதிக்கு சமமான நீதி என்ற விளக்கம் சிலர் அளிக்கின்றனர். நிறைதை உழி=நிறைவு செய்ய வேண்டியிருந்த போது; நிறைதை=நிறைவு;.
புறாவினைத் துரத்தி வந்த பருந்து, தனது உணவாகிய புறாவுக்கு சமமாக சதை வேண்டும் என்று கோரிய போது, மன்னன் சிபி முதலில் தனது தொடையின் ஒரு பாகத்தை அறுத்து கொடுத்தார். ஆனால் அந்த மாமிசத்துண்டின் எடை, புறாவின் எடைக்கும் சமமாக இல்லாமல் போகவே, தானே தராசுத் தட்டின் மீது ஏறி அமர்ந்து தராசு நிலையாக நிற்குமாறு செய்தார். இந்த செய்தி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. .
பொழிப்புரை:
தருமம் அழியும் வண்ணம் உலகத்தை துன்புறுத்திய தோள் வலிமை மிக்க அரக்கன் இராவணனின் வலிமை அழியும் வண்ணம் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய பெருமான், அந்த அரக்கன் தனது தவறினை உணர்ந்து சாமகானம் முறையாக வாசித்து, புகழ்ந்த போது, பிறைச் சந்திரன் போன்று வளைந்த பற்களை உடைய அரக்கன் நீண்ட வாழ்நாளும் சிறந்த வாளும் பெறும் வண்ணம் அருள் புரிந்த சிவபெருமான் உறையும் இடம் சீர்காழி ஆகும். தான் துரத்தி வந்த புறாவினுக்கு அடைக்கலம் அளித்ததால், மன்னன் சிபி தனது உணவினை பறித்து விட்டான் என்று முறையிட்ட பருந்து, தான் அடைந்த இழப்பினுக்கு, வேதங்களும் தெய்வங்களும் உகக்கும் வண்ணம் நீதி அளிக்க வேண்டும் என்று முறையிட, மன்னன் சிபி புறாவின் எடைக்கு சமமாக தனது தொடைப்பகுதி சதையை அறுத்து தராசுத் தட்டில் வைத்த போதும் தனது உடலின் சதை புறாவின் எடைக்கு சமமாக இல்லாமை கண்ட பின்னர், பருந்தின் இழப்பினை ஈடு செய்யும் பொருட்டு, தானே தட்டினில் ஏறி அமர்ந்து எடை சமம் ஆகுமாறு செய்து தன்னையே பருந்துக்கு உணவாக அளிக்கத் துணிந்தான். இவ்வாறு மன்னனை பரிசோதனை செய்த குற்றத்தால் விளைந்த பாவத்தினை போக்கிக் கொள்ள இந்திரனும் அக்னியும் இறைவனை வழிபட்டு பலன் அடையவும் மன்னன் சிபி மீண்டும் குறையேதும் அற்ற உடலினைப் பெறவும் இறைவன் அருள் புரிந்தமையால் இந்த தலத்திற்கு புறவம் என்ற பெயர் வந்தது.