119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 9
அன்னமாக பிரமன்
பாடல் 9:
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை
கொள் மால்
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பொருள்கள் தண் புகழ்
கொள் கண்டன் இடமாம்
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில
விண் படர அச்
சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை
சண்பை நகரே
விளக்கம்:
சண்பை எனப்படுவது இந்த பாடலில் வரும் பெயர். ண் எனப்படும் மெய்யெழுத்து இந்த பாடலின் அனைத்து சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். சண்பை எனப்படும் கோரைப் புல்லால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு யாதவ குலத்தவர் அனைவரும் அழிய, அதனால் தனது குலத்திற்கு ஏற்பட்ட பழிச் சொல்லினை களையும் பொருட்டு கண்ணபிரான் இறைவனை வழிபட்ட இடம் என்பதால் சண்பை என்ற பெயர் வந்த விவரம் இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது.
Advertisement
விண்பயில மண்பகிரி வண்பிரம னெண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே
பயிலுதல்=ஒரு காரியத்தை இடைவிடாது செய்தல்; விண் பயில=தொடர்ந்து அன்னமாக பிரமன் மேலே பறந்து சென்றதை குறிப்பிடுகின்றது. பகிரி=பிளத்தல்; மண் பகிரி=மண்ணைப் பிளந்து பன்றி வடிவில் கீழே சென்ற திருமால்; வண் பிரமன்=சிறந்த பிரமன்; எண் பெரிய= எண்ணுவதற்கு மிகவும் அரிதாகிய, எண்ணுதற்கு மிகவும் பெரிய; பண்=தகுதி வாய்ந்த; படை=சக்ராயுதம்; கண் புரிய=கண்ணால் காணக்கூடிய; ஒண்பு=முயற்சி, ஊக்கம்; நுண் பொருள்=காண முடியாத வண்ணம் நீண்ட; தண் புகழ்=இனிய புகழ்; கண்டன்=அகண்டன் என்பதன் முதற்குறை; அகண்டன்=கண்டு அளப்பதற்கு அப்பாற்பட்டவன்; மண்=உலகம்; பரியும்=ஆளும்; ஒண்பு=ஆண்மை; ஒழிய=நீங்கும் வண்ணம்; நுண்பு=அற்பர்கள்; சகர்=யாதவர்; புண் பயில=ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு; விண் படர=இறந்து விடுதல்;
ஒரு முறை துர்வாச முனிவர் துவாரகை வந்த போது, அவரை ஏளனம் செய்ய நினைத்த யாதவர்கள், கண்ணனின் மகன் சாம்பனுக்கு நிறைமாத கர்ப்பிணி போன்று பெண் வேடம் இட்டு முனிவரிடம் அழைத்துச் சென்று என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்டனர். உண்மையை உணர்ந்த முனிவர், உங்கள் குலத்தை அழிக்க வல்ல இரும்பு உலக்கை பிறக்கும் என்றார். சாம்பனின் பெண் வேடத்தை கலைத்த போது ஒரு உலக்கை வெளியே வந்து விழுந்ததைக் கண்டு அச்சம் கொண்ட யாதவர்கள், அந்த உலக்கையை பொடி பொடியாக மாற்றி கடற்கரையில் தூவி விட்டு சென்றனர். நாளடைவில் உலக்கைப் பொடிகள் தூவிய இடத்தில் சண்பை எனப்படும் ஒரு வகையான கோரைப் புற்கள் முளைத்தன. சில மாதங்கள் கழித்து அங்கே கடற்கரையில் ஒன்று கூடிய யாதவர்களின் இடையே, அளவுக்கு அதிகமாக குடித்திருந்த யாதவர்களின் இடையே, வாக்குவாதம் எழுந்தது. அந்த வாக்குவாதம் சண்டையாக முற்ற, கரையில் முளைத்திருந்த கோரைப் புற்களைக் கொண்டு ஒருவர் ஒருவர் அடித்துக் கொள்ளலானார்கள். அந்த கோரைப் புற்கள் கூரிய வாட்களாக மாறி அனைவரின் உடல்களில் காயங்களை விளைவித்து அனைவரும் இறந்துபட காரணமாக அமைந்தது. இதனால் குலத்திற்கு ஏற்பட்ட அவப்பெயரின் தாக்கத்தை போக்கிக் கொள்ள கண்ணன், சீர்காழி வந்து பெருமானை வணங்கி தவம் செய்தார். எனவே இந்த தலத்திற்கு சண்பை என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறுவார்கள். அந்நாள் வரை ஒற்றுமையாக இருந்த துவாரகையை ஆண்டு வந்த யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மடிந்ததை, அரசாளும் தன்மை நீங்கப் பெற்றனர் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பண்ப முனி=ஆற்றல் மிக்க தவத்தினை உடைய முனிவர்; மொழி= வாய்ச்சொல், இங்கே சாபம் என்று பொருள் கொள்ள வேண்டும். கண்பழி செய்=கருதத் தக்க பழியைச் செய்த
பொழிப்புரை:
சிறந்தவனாக கருதப்படும் பிரமன் அன்னத்தின் உருவத்துடன் மேலும் மேலும் விண்ணில் பறந்து சென்ற போதிலும், எண்ணுதற்கு அரியதும் சிறந்த தகுதியினை உடையதும் ஆகிய, சக்ராயுதத்தை தனது படையாகக் கொண்ட திருமால் பன்றியின் வடிவம் கொண்டு மண்ணை பிளந்து வெகு ஆழத்தில் சென்ற போதிலும், அவர்கள் இருவரும் தங்களது முயற்சியினால் காண்பதற்கு மிகவும் அரிதான பொருள்களாக விளங்கிய, இனிய புகழினை உடைய திருவடிகளையும் முடியையும் கொண்டுள்ளவனும், கண்டு அளக்கமுடியாத வண்ணம் வியாபித்து இருப்பவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் சீர்காழி ஆகும்; தங்களின் அரசாளும் தன்மை நீங்கும் வண்ணம், அற்பர்களாக தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் கோரைப் புற்களைக் கொண்டு சண்டை செய்த யாதவர்கள், அந்த கோரைப் புற்கள் கூரிய வாள் போன்று அவர்களை வெட்டி அனைவரையும் விண்ணுலகத்திற்கு அனுப்பியது. இவ்வாறு யாதவ குலம் அழிய காரணமாக இருந்த, தவ ஆற்றல் மிகுந்த தூவாச முனிவரின் சாபத்தால், இறந்து பட்ட அனைவரும், பழியிலிருந்து நீங்கி நற்கதி அடையவேண்டும் என்ற விருப்பத்துடன் கண்ணபிரான் வழிபட்டு பலன் அடைந்ததால் சண்பை என்ற பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது.