130. தண்ணார் திங்கள் - பாடல் 11
மறுமையில் சிவலோகம்
பாடல் 11:
காமரு கண்ணார் கோயில் உளானைக் கடல் சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியல் மாடப் புகலிக் கோன்
நாமரு தொன்மைத் தன்மையுள் ஞானசம்பந்தன்
பாமரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே
விளக்கம்:
Advertisement
இந்த பாடலில் பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா என்று சம்பந்தர் கூறுகின்றார். தாம் செய்யாத குற்றத்திற்கு பலர் பழிச்சொற்கள் பெறுவதும் தண்டனை அடைவதையும் நாம் இன்றும் காண்கின்றோம். இதற்கு மூல காரணம் அவர்களின் பண்டைய வினைகளே. பெருமானை வழிபடும் அன்பர்கள் மற்றும் பதிகத்தினை ஓதும் அன்பர்கள் அத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்பதால், அந்த வினைகளால் ஏற்படும் பழிகள் வருவதும் தவிர்க்கப்படும் அல்லவா. காமரு=அழகுடைய; நாமரு தொன்மை=மீண்டும் மீண்டும் ஒரே சொற்களைச் சொல்வதால் அந்த சொற்கள் நாவினுக்கு மிகவும் அதிகமான பழக்கமாக மாறியதை நாவுக்கு தொன்மைத் தொடர்பு உடைய சொற்கள் என்று கூறுகின்றார். பாமரு பாடல் என்ற தொடருக்கு எங்கும் பரந்து செல்லும் இனிய ஓசையினை உடைய பாடல் என்றும் பொருள் சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
அழகுடன் விளங்கும் கண்ணார் கோயில் திருத்தலத்தினில் உள்ள கோயிலில் உறையும் பெருமானை, பூஞ்சோலைகள் நிறைந்ததும் பொன்னால் அழகு சேர்க்கப்பட்ட மாடங்கள் நிறைந்ததும் ஆகிய புகலி நகரத்தின் தலைவனாக திகழும் ஞானசம்பந்தனின் நாவின் மூலமாக. பெருமானின் புகழினை மீண்டும் மீண்டும் பாடி பழக்கப்பட்ட நாவின் மூலமாக வெளிவரும் பாடல்கள் பத்தினையும் பாடவல்ல அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் சென்ற பல பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவாக ஏற்படும் தீங்குகள் நம்மை விட்டு நீங்கும் என்றும் வாழ்வினில் இன்பம் ஏற்படும் என்று இம்மையில், பெருமானை கை தொழுவதால் ஏற்படும் விளைவினை சம்பந்தர் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் தலத்தின் இயற்கை வளமும், அடியார்கள் பாடும் செவ்வழிப் பண்களை கேட்ட வண்டுகளும் செவ்வழிப் பண்ணில் முரல்கின்றன என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில் சுடுகாட்டினில் நடனம் ஆடும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், நான்காவது பாடலில் பெருமானின் திறமையை (யானை உரித்தது மற்றும் அறம் உரைத்தது) குறிப்பிடுகின்றார். பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருமால் வாமனனாக சென்று வஞ்சகமான முறையில் மாவலியை ஏமாற்றியதால் தனக்கு ஏற்பட்ட பழி மற்றும் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள இலிங்கம் தாபித்து வழிபட்ட கோயில் கண்ணார் கோயில் என்று உணர்த்துகின்றார். ஆறாவது பாடலில் கண்ணார்கோயில் பெருமானை வணங்கி வழிபடும் அன்பர்களுக்கு இயமனால் துன்பம் ஏதும் உண்டாகாது என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் தலத்தில் உள்ள கன்னிப்பெண்கள், பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர் என்று கூறும் சம்பந்தர், திருக்கண்ணார் என்று இறைவனை அழைக்கும் அன்பர்கள் அனைவரும் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில் பெருமானை வழிபடும் அடியார்கள் வானோர் உலகத்தினைச் சென்று அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில் புத்தர்கள் மற்றும் சமணர்களின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தினை ஓதும் அடியார்களுக்கு தகாத பழிகள் வாரா என்று கூறுகின்றார். கண்ணார்கோயில் சென்றடைந்து பெருமானை வணங்கி வழிபட்டு, அந்த தலத்திற்கு உரிய பதிகத்தினை பாடி, இம்மையில் துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பங்கள் அடைந்தும், நரகத்தினில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்தும், மறுமையில் சிவலோகம் சென்றடைந்து என்றும் அழியாத இன்பத்துடன் இருப்போமாக.