130. தண்ணார் திங்கள் - பாடல் 1
பெற்றோர்களால் உபநயனம்
பின்னணி:
தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தருக்கு அவரது பெற்றோர்களால் உபநயனம் செய்து வைக்கப் பட்டது. பல நாட்கள் சீர்காழியில் தங்கிய சம்பந்தர் மீண்டும் பல தலங்களைக் காண ஆவல் கொண்டமையால், தனது விருப்பத்தைத் தனது தந்தையிடமும் நீலகண்ட யாழ்ப்பாணரிடமும் தெரிவித்தார். அந்நாள் வரை நடைபெற்ற நான்கு தலையாத்திரைகளிலும் பங்கேற்ற அவரது தந்தையார், தனக்கு வயதாகியதால் முன்போன்று நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் வேள்வி செய்யவேண்டும் என்ற ஆவல் இருப்பதால் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் கூறினார். எனினும் தவம் இருந்து பெருமான் அருளினால் அருமையாக பெற்ற உன்னைப் பிரிந்து இருப்பது கடினம் என்பதால் சில நாட்கள் உன்னுடன் பயணம் மேற்கொள்வேன் என்று தனது நிலையினை ஞான சம்பந்தருக்கு உணர்த்தினார். இதனை உணர்த்தும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பெருமானையே தனது தந்தையாக எப்போதும் கருதியமையால், சிவபாத இருதயரை, குலத்தாதை என்று சேக்கிழார் நயமாக குறிப்பிடுகின்றார். இந்த தல யாத்திரையில், பல அதிசயங்கள் நிகழ்கின்றன.
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவாற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்
Advertisement
தந்தையார் இவ்வாறு உரைத்ததைக் கேட்ட ஞானசம்பந்தர், தந்தையார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றுமுள்ள அடியார்கள் புடைசூழ சீர்காழி திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானை வணங்கிய பின்னர் தனது ஐந்தாவது பயணத்தை தொடங்குகின்றார். ஒவ்வொரு முறையும் தனது பயணத்தைத் தொடங்கும் ஞானசம்பந்தர், சீர்காழி பெருமானை தரிசனம் செய்து அவரை வணங்கிச் செல்வதை பழக்கமாகக் கொண்டிருந்ததை நாம் அவரது சரித்திரத்திலிருந்து அறியலாம். ஊர் மக்கள் பிரியா விடை அளிப்ப, முத்துச் சிவிகையில் ஏறி ஞானசம்பந்தர் அமர்ந்தபோது சங்க நாதங்களின் ஒலியும், ஊது கொம்புகளின் ஒலியும், மறையோர்கள் சொன்ன மங்கல வாழ்த்தொலிகளும், பெருமானின் திருநாமங்களும் கலந்து ஒலித்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இவ்வாறு தனது ஐந்தாவது தலயாத்திரையைத் தொடங்கிய ஞானசம்பந்தர், மிகுந்த விருப்பத்துடன் கண்ணார்கோயில் திருத்தலம் சென்று அடைகின்றார். ஐந்தாவது தலயாத்திரையில் முதன் முதலாக சென்ற இந்த திருத்தலம் சீர்காழியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் பாதையில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் தலத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் தெற்கே செல்லும் பாதையில் உள்ளது. இறைவனின் திருநாமம்---கண்ணாயிர நாதர்; இறைவியின் திருநாமம்---முருகுவளர் கோதை; அழகாக வளரும் கூந்தலைக் கொண்ட அம்பிகை என்று பொருள் கொள்ளும் வண்ணம் இந்த பெயர் அமைந்துள்ளது. கண்கள் சம்பந்தமான நோய்கள் இந்த தலத்து இறைவனை வழிபட தீரும் என்று கூறுவார்கள். அழகாக விளங்கும் பிராட்டியின் கூந்தல், தெய்வீக மனத்துடன் திகழ்கின்றது என்று ஞானசம்பந்தர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் கூறுவதை நாம் விளக்கத்தில் காணலாம். இந்த தலத்திலிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர், அடுத்து புள்ளிருக்குவேளூர் செல்கின்றார்.
அகலிகையின் அழகில் மயங்கி, வஞ்சகமாக அவரது கணவரைப் போன்று வேடம் தரித்து ஏமாற்றிய குற்றத்தினால் கௌதம முனிவரிடம் பெற்ற சாபத்தினை இந்திரன் இந்த தலத்து இறைவனை வணங்கி தீர்த்துக் கொண்டான் என்பதும் மகாபலியை வெல்வதற்காக வாமன அவதாரம் எடுத்த திருமால் பெருமானை வழிபட்டார் என்பதும் தலபுராணம் கூறும் தகவல்கள். இந்த இரண்டு தகவல்களையும் ஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடல்களில் அளிக்கின்றார்.
பாடல் 1:
தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ் புனல் சூடிப்
பெண் ஆணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம்
நண்ணா ஆகும் நல்வினையாய நணுகும்மே
விளக்கம்:
தண்மை=குளிர்ச்சி; தண்ணார் திங்கள்=குளுமை பொருந்திய பிறைச் சந்திரன்; பொங்கரவம்= சீற்றத்துடன் பொங்கி எழுந்து படமாடும் பாம்பு; தாழ் புனல்=வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதி; நல்வினை=புண்ணியம்; நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பஇன்பங்களுக்கு காரணம், நாம் பழைய பிறவிகளில் செய்த பாவங்களும் (தீவினைகளும்) புண்ணியங்களுமே (நல்வினைகள்) என்பதை சைவம் தெளிவாக உணர்த்துகின்றது. நம்மை விட்டு பாவங்கள் நீங்கினால் எஞ்சி இருக்கும் புண்ணியங்களால் நமக்கு, இம்மையில் எப்போதும் இன்பமே ஏற்படும் என்பதை இந்த பதிகத்தின் வாயிலாக சம்பந்தர் உணர்த்துகின்றார். நண்ணா=நெருங்காது; நண்ணும்=நெருங்கி நிற்கும்;
இந்த பாடலில் பெண் ஆணாகிய பேரருளாளன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையினை மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமுறை ஆசிரியர்கள் பல பாடல்களில் குறிப்பிடுகின்றனர். பெருமான் புரிந்த பல அருட்செயல்களில் இந்த செயலே மிகவும் பெரிய அருட்செயலாக கருதப்படுவதால், பேரருளாளன் என்று பெருமானை சம்பந்தர் அழைக்கின்றார். கை தொழுவார்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். எவரேனையும் கண்டவுடன் கைகூப்பித் தொழுதல் நமது பாரம்பரிய பழக்கம். நமக்கு சமமானவர்களை நமது நெஞ்சினுக்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும், நம்மை விடவும் உயர்ந்தவர்களை நமது முகத்திற்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும் நமது தலையின் மேல் கைகளை வைத்து இறைவனைத் தொழவேண்டும் என்று கூறுவார்கள். நம்மை விடவும் கீழாக எவரையும் கருதாது இருக்கவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
பொழிப்புரை:
குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனையும், சீற்றத்துடன் பொங்கி எழும் பாம்பினையும், பள்ளத்தை நோக்கி ஓடும் தன்மையை உடைய பெரிய நீர்ப்பரப்பினைக் கொண்டு மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியையும் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு பேரருள் புரிந்தவனாக பெண்ணாகவும் ஆணாகவும் திகழ்கின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், கண்ணார்கோயில் தலத்தினை விட்டு என்றும் பிரியாதவனாக ஆங்கே உறைகின்றான். இந்த பெருமானை, தங்களது கைகளால் தொழும் அடியார்களை பாவங்களும் அதனால் விளையும் துன்பங்களும் நெருங்காது; புண்ணியங்கள் அவர்களை நெருங்க அதன் விளைவாக இன்பங்களே அவர்களது வாழ்வினில் ஏற்படும்.