130. தண்ணார் திங்கள் - பாடல் 4
தேவியின் கூந்தல் நறுமணம்
பாடல் 4:
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மரு வளர் கோதையை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே
விளக்கம்:
Advertisement
மருவளர்=நறுமணம் வளர்கின்ற; இயல்பாகவே தேவியின் கூந்தல் நறுமணம் உடையது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இயல்பாகவே நறுமணம் உடைய கூந்தல் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பல தேவாரப் பாடல்களில், பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்று சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் தேவியின் திருநாமம் மருவார்குழலி என்பதாகும். மணம் பொருந்திய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.25.1) மருவார் குழலி என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் மணம் கமழும் கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்தவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். மருவார் குழலி என்ற தொடர் பல தேவாரப் பாடல்களில் மூவர் பெருமானர்களால் குறிப்பிடப் படுகின்றது.
மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன்பள்ளி மேவிய
கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதார் மேல் மன்னும் பாவமே
புறவம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.74.3) மணம் நிறைந்த கூந்தலை உடைய தேவி காணுமாறு சுடுகாட்டில் நடனம் ஆடியவன் என்று பெருமானை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உதரபந்தம்=பூதங்கள் இடுப்பில் அணியும் ஒருவகை ஆபரணம்
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பார்க்கக்
கந்தம் மல்கு குழலி காண கரிகாட்டு எரி ஆடி
அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா அமர்வெய்தி
எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே
தில்லைத் திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.1.2) நறுமணம் கமழும் கூந்தலை உடைய அன்னை என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நுதல்=நெற்றி; கொட்டம்=நறுமணம்
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை கொலோ
விசயமங்கை தலத்தின் அருளிய பதிகத்தின் (3.17) முதல் பாடலில் அம்மையை மருவமர் குழலி என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மரு=வாசனை. இயற்கையாகவே நறுமணம் சென்று அமரும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
மருவமர் குழல் உமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே
சண்பை நகர் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.75.1) நறுமணம் கமழும் கூந்தலை உடைய தேவி என்று உமையன்னையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சந்தம் என்ற சொல்லுக்கு நறுமணம் அழகு என்று இரண்டு பொருள்களும் பொருந்தும்.
எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதி செய்ய வளர் தூபமொடு தீப மலி வாய்மை அதனால்
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
சந்த மலி குந்தள நன் மாதினொடு மேவு பதி சண்பை நகரே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.123..6) ஞானசம்பந்தர் தேவியை நறுமணம் மிகுந்த கூந்தலை உடையவள் என்று குறிப்பிடுகின்றார். விரவது=கலத்தல்; இந்த பாடலில் பெருமான் உமை அன்னையுடன் கூடி இருப்பது போன்று தோற்றம் தருவது, நிலவுலகம் மற்றுமுள்ள பல உலகங்களில் வாழும் உயிர்களில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புணர்ந்து தத்தம் இனங்களைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை முன்னிட்டே என்று சம்பந்தர் கூறுகின்றார்.
தரை முதலினில் உயிர் புணர் தகை மிக
விரை மலி குழல் உமையொடு விரவது செய்து
நரை திரை கேடு தகை அது அருளினன் எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே
அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.
தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ
மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது.
இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.
மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்
கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை
அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே
பெருவேளூர் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (4.60.3) அப்பர் பிரான் நறுமணம் வீசுவதும் மென்மையானதும் ஆகிய கூந்தலை உடைய நங்கை என்று பார்வதி தேவியை குறிப்பிடுகின்றார். குறவி=குறத்தியாகிய வள்ளி அம்மை; வள்ளியம்மையின் தோள்களைக் புணர்ந்து தனது அன்பினை வெளிப்படுத்தியவன் என்று முருகனைக் குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, உமையம்மைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தைக் கொடுத்து தனது அன்பினை வெளிப்படுத்திய பெருமானின் செய்கை நினைவுக்கு வந்தது போலும். நங்கையோர் பாகத்தன் என்று பெருமானை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்
நறவு இள மென்கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்
பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை
உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே
பிராட்டியின் கூந்தல் தெய்வீக நறுமணம் வீசுகின்றது என்று குறிப்பிடும் அப்பர் பிரான் அந்த கூந்தலை அன்றலர்ந்த நறுமணம் வீசும் மலர்கள் அலங்கரிக்கின்றன என்று கூறும் பாடல் (6.4.9), அதிகை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலாகும். கோசரம்=தேசம்: நாண்மலர்=அன்று அலர்ந்த மலர்கள், அந்நாளில் மலர்ந்த பூக்கள்: செம்பொன்னினால் செய்தது போன்று அழகுடன் செம்பட்டை நிறத்தினில் உள்ள சடை கொண்டவன் என்று பெருமானை குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு பிராட்டியின் கூந்தலுக்கு உரிய இயற்கை நறுமணத்தினை உணர்த்துவது பொருத்தம் என்று தோன்றியது போலும்.
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை
எம் பெருமானே தெய்வ நாறும்
வம்பின் நாண் மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே
வலங்கை மழுவாளனே
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம்
மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்ட கோசரத்துளானே அவனாகில் அதிகை
வீரட்டனாமே
எறும்பியூர் தலத்தின் மீது அருளிய, பன்னிய செந்தமிழ் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.91.3) அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தையும் வென்ற நறுமணம் கொண்ட கூந்தலை உடைய அன்னை என்று தேவியை குறிப்பிடுகின்றார். கடுஞ்சுடர்=பேரொளியை உடைய விளக்கு; படிந்து=நிலத்தில் வீழ்ந்து; ஒரு=ஒப்பற்ற; ஓத வேலி=அலைகளையுடைய கடல்; நிறை=மிகுதியாய் காணப்படுகின்ற; மருவை வென்ற=மலர்களின் மணத்தை வென்ற நறுமணம்; நறுங்குழல் மங்கை என்பது தலத்து இறைவியின் திருநாமம். இந்த பெயர் அப்பர் பிரானுக்கு, இயற்கையாகவே நறுமணம் வீசும் தேவியின் கூந்தலை நினைவுபடுத்தியது போலும். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தை வென்ற நறுமணம் உடைய கூந்தலை உடையவள் தேவி என்று கூறுகின்றார். தெய்வீக மணம் கமழும் கூந்தல் என்பதால் இயற்கையில் மணம் வாய்ந்த கூந்தலாக, வேறு நறுமணப் பொருட்களோ வாசனை மலர்களோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாத கூந்தலாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
கருவை என் மனத்திருந்த கருத்தை ஞானக் கடும் சுடரைப் படிந்து
கிடந்து அமரர் ஏத்தும்
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகின் நிறை தொழில்
இறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா
மணியை வாசத்
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச்
சென்று அடையப் பெற்றேன் நானே
திருக்கோளிலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல் கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம் காணலாம். தன்னிடத்தில் அன்பு உடையவனே என்று பெருமானை அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரொருவர் எனக்கு உதவி செயவல்லார், நீயே குண்டையூரில் இந்த நெல்மலையினை திருவாரூர் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுந்தரர் கோரும் பாடல்.
எம்பெருமான் உனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்
வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ் திருகோளிலி எம்பெருமான்
அன்பதுவே அடியேற்கு அவை அட்டித் தரப் பணியே
திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.48.8) சுந்தரர் தேவியை மணம் வீசும் குழலாள் என்று கூறுகின்றார். வம்பு=நறுமணம்; இந்த பாடலிலும் பெருமானின் சடை மற்றும் பிராட்டியின் கூந்தல் குறிப்பிடப்பட்டு, அவற்றின் சிறப்புகள் உணர்த்தப் படுகின்றன. கோலுதல்=வளைத்தல்; திரிபுரங்களை எரிப்பதற்காக பெருமான் வில்லை வளைத்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது.
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்
வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டைக்
கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
பிராட்டியின் கூந்தல் இயற்கை மணம் வாய்ந்தது எனும் தேவாரப் பாடல் குறிப்புகள் நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றன. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல் புராணத்தில், இந்த நிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார். பெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே
வண்டினை நோக்கி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் கருத்து; நறுமணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை உடைய அழகிய சிறகுகளை உடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும் மயில் போன்ற சாயலும் நெருங்கிய பற்களும் உடைய எனது தலைவியின் கூந்தலில் வீசும் நறுமணத்தினை விடவும் அதிகமான நறுமணம் கொண்ட பூவினை நீ இதுவரை கண்டதுண்டோ. எனது கேள்விக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி உண்மையான பதிலை நீ கூறுவாயாக. இந்த பாடல் பொருட்குற்றம் உள்ள பாடல் என்று நக்கீரன் உரைக்க, இறைவன் நேரில் தோன்றி, நக்கீரனிடம், நீ வணங்கும் ஞானப் பூங்கோதையின் (திருக்காளத்தி தலத்து அம்மை) கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் இல்லையா என்று கேட்க, நக்கீரன் இல்லை என்று முதலில் பதில் உரைத்தார். பின்னர் தான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டு, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, கோப பிரசாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய பாடல்களை (பதினோராம் திருமுறை) பாடியதாகவும் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார்.
தரு=மரங்கள்; தருவளர்=மரங்கள் வளர்கின்ற; கானம்=காடு; துங்க=உயர்ந்த; வேழம்=யானை; உருவளர் ஆல்=உயர்ந்து வளரும் ஆலமரம்; கரு=புகழ், மேன்மை; இந்த பாடலில் பெருமானை அடைந்து பணியும் மனிதர்களே கற்றோர் என்று சம்பந்தர் கூறுகின்றார். எனவே ஏனையோரை அவர் கற்றவராக மதிக்கவில்லை என்பது இதனின்று புலனாகின்றது. கற்றதனால் ஆய பயன் நற்றாள் தொழல் என்று தானே வள்ளுவப் பெருந்தகையும் கூறுகின்றார். பெருமான் தோலுரித்த யானை கயாசுரன் என்ற அரக்கன் என்றாலும் யானையின் பொதுத்தன்மை குறித்து காட்டில் வாழும் யானை என்று இங்கே குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் இந்த தலத்து இறைவனை வணங்கித் தொழும் அடியார்கள் அடையவிருக்கும் பலனை குறிப்பிடும் சம்பந்தர், இரண்டாவது மூன்றாவது பாடல்களில் தலத்தின் இயற்கை அழகினை குறிப்பிட்டு நம்மை இந்த தலத்திற்க்கு செல்லுமாறு ஊக்குவிக்கும் சம்பந்தர், இந்த பாடலில் தலத்து பெருமானை வணங்குவோரே கற்றவர்களாக கருதப் படுவார்கள் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
மரங்கள் அடர்ந்த கானகத்தில் வாழ்வதும் சிறந்ததும் பெரியதும் ஆகிய யானையின் தோலை உரித்து அதனை, உமையன்னை அஞ்சும் வண்ணம் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமான், சனகர் சனந்தனர் சனத்குமாரர் சனாதனர் ஆகிய நான்கு முனிவர்க்கும், உயர்ந்து வளரும் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம், வேதங்களின் பொருளாகிய அறத்தினை உணர்த்தினார். இத்தகைய பெருமையை உடைய பெருமான் உறைவதும், நாளும் புகழ் வளர்ந்து திகழ்வதும் ஆகிய கண்ணார்கோயில் திருக்கோயிலை அடைந்து பெருமானைப் பணியும் மனிதர்களே, கற்றவர்களாக கருதப் படுவார்கள்.