143. கொடியுடை மும்மதில் - பாடல் 4
விடியற்காலையில் எழுந்து
பாடல் 4:
ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரில் பொருளன்று
தேனமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ
ஆனமர் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்த அடிகள் இடம் போலும்
வானவர் நாடொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்னகரே
விளக்கம்:
Advertisement
பொருள்=உண்மையான பொருள்; சிறுகாலை=விடியற்காலை (சிவக்கவிமணியார் பெரிய புராணம் உரை); விடியற்காலையில் எழுந்து, பொழுது புலரும் முன்னம் நீராடி உடலினை சுத்தம் செய்து கொண்டு, பெருமானை வணங்க வேண்டியது முறை என்று பெரியோர்கள் கூறுவார்கள். எனவே உடலை பேணி பாதுகாத்து உறக்கத்தில் ஆழாமல், விடியலில் பெருமானின் வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது என்று பொருள் கொள்வதற்கு சிறுகாலை என்ற சொல்லுக்கு விடியற்காலை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.
இந்த விளக்கம் நமக்கு அப்பர் பிரானின் பாடல் (6.99.3) ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பாடல் இறைவனின் அருளினால் தனது சூலை நோய் தீர்க்கப்பட்ட பின்னர் சைவ சமயம் சார்ந்த அப்பர் பிரானை சமணர்களின் தூண்டுதல் பேரில் பல்லவ மன்னன் விசாரணைனைக்கு அழைத்தபோது பாடிய பதிகத்தின் பாடல். தான். பல்லவ மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டவன் அல்லன் என்று புரட்சி குரல் எழுப்பும் பதிகம். பல வருடங்கள் சமண சமயத்தை சார்ந்திருந்த அப்பர் பிரான், விடியற்காலையில் குளிப்பதும், குளித்த பின்னர் சைவக் கோலம் பூண்டு இறைவனை வழிபடுவதும் அந்நாள் வரை தான் செய்யாத செயல்கள் என்பதால் அவற்றினைச் செய்யத் தொடங்கி விட்டேன் என்று தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை இங்கே குறிப்பிடுகின்றார். பகடு=யானை. கடவுதல்=கடமையாக கருதுதல். புரோதயம் என்ற சொல் பூர்வோதயம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு சூரியன் தோன்றுவதற்கு முன்னமே என்று பொருள். சூரியன் எழுவதற்கு முன்னர் குளித்து இறை வழிபாடு செய்யும் முறை. கார் என்றால் மேகம். மேகம் பொழியும் மழை போல், தனது கண்களிலிருந்து நீர் பொழிவதாக தனது நிலையினை கூறிக் கொள்கின்றார். கண்ணீர் மழை போல் பொழிவதும் மனம் கரைவதும் இறைவன் மீது நாம் வைக்கும் அன்பின் இலக்கணம். மாதேவா மாதேவா என்று சிவபெருமானின் திருநாமங்களைக் கூறி அவனை வாழ்த்தியவாறு, விடியற்காலையில், சூரியன் உதிக்கும் முன்னரே நீராடுவோம்; உடலெங்கும் திருநீறு அணிந்த கோலத்தோடு திகழ்வோம் என்று தனது நிலையினை அப்பர் பிரான் தெரிவிக்கும் பாடல்.
வாராண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதயம் ஆடப் பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல்மனமே நல்மனமாய்க் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமே பற்று அற்றோமே
சிறுகாலை என்ற சொல்லுக்கு இளவயது என்று பொருள் கொண்டு, சிறுவயதிலிருந்தே இறைவனைத் தொழுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சம்பந்தர் கூறுவதாக சிலர் பொருள் கூறுகின்றனர். முதல் வகை விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளதாக தோன்றுகின்றது. ஊன் அமர் யாக்கை=தசை முதலியவற்றால் கட்டப்பட்ட உடல்.
பொழிப்புரை:
தசை எலும்பு இரத்தம் முதலிய பொருட்களின் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள இந்த உடல் நிலையான பொருளல்ல என்பதை உணர்ந்து, அந்த உடலினைப் பேணி பாதுகாப்பதில் வீணாக நேரத்தை கழிக்காமல், என்றும் நிலையாக நிற்கும் பெருமானின் திருவடிகளை, தேன் மணம் கமழும் கொன்றை மலர்களை சூடிக்கொண்டுள்ள பெருமானின் திருவடிகளை, தினமும் விடியற்காலை நேரத்தில் பணிந்து புகழ்வீர்களாக. பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு, பால் தயிர் நெய் கோமியம் பசுஞ்சாணம் ஆகியவற்றைக் கொண்டு மகிழ்ந்து நீராடும் அடிகளின் இடமாவது, நாள்தோறும் வானவர்கள் வந்து வழிபடும் வலம்புரம் எனப்படும் நன்னகராகும்.