143. கொடியுடை மும்மதில் - பாடல் 6
தேவர்கள் அமுதம் உண்ணும் பொருட்டு
பாடல் 6:
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடனாகிச்
சுண்ண வண்ணப்பொடி மேனி பூசிச் சுடர்ச் சோதி நின்று இலங்கப்
பண்ண வண்ணத்தன பாணி செய்யப் பயின்றார் இடம் போலும்
வண்ண வண்ணப் பறை பாணியறா வலம்புர நன்னகரே
விளக்கம்:
Advertisement
உண்ண வண்ணத்து=உண்ணும் பொருட்டு, அமுதம் உண்ணும் பொருட்டு; ஒளி நஞ்சம்= கருமை நிறத்துடன் பொழிந்த; சுண்ண=நறுமணம் நிறைந்த; பண்ண வண்ணத்தன=பல வகையான
பொழிப்புரை:
தேவர்கள் அமுதம் உண்ணும் பொருட்டு, அதற்கு முன்னம் எழுந்த நஞ்சின் தாக்கத்தால் அவர்கள் இறந்து விடாமல் இருக்கும் வண்ணம், கருமையுடன் ஒளிவீசி பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த வந்த அந்த நஞ்சினை தானே உட்கொண்டு தேவர்களை காப்பாற்றியவர் பெருமான். அவர் தனது மனைவி உமையன்னையை, தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவர் ஆவார். அவர், நறுமணம் பொருந்திய வெண்மை நிறத்துடன் மிளிரும் திருநீற்றினைத் தனது உடலெங்கும் பூசிக் கொண்டு விளங்குகின்றார். அவர் சுடர் விடும் சோதியாக திகழ்கின்றார். அத்தகைய பெருமான், பலவகைப்பட்ட பறை வாத்தியங்கள் தொடர்ந்து முழங்கி நாள்தோறும் திருவிழா போன்று ஆரவாரத்துடன் விளங்கும் வலம்புர நன்னகரமாகும்.