முகப்பு
தினம் ஒரு தேவாரம்

139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 8

புகழ்ந்து போற்றி வணங்க

Updated On : 18 செப்டம்பர், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:34 PM


பாடல் 8:

    பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட
    வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி
    புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர்
    மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே
  

விளக்கம்:

பொலியும்=அழகுடன் விளங்கும்; மால்=பெரிய; வரை=மலை; புக்கு=சென்றடைந்து; வலி=வலிமை; பெருமானின் திருவடியை வணங்கும் புண்ணியர்கள் வானுலகம் செல்வம் திண்ணம் என்று உணர்த்தும் பொருட்டு காண்மினே என்று கூறுகின்றார்.

Advertisement

பொழிப்புரை:

தனது தேர் செல்லும் வழியில் தோன்றி தனது பயணத்தை தடுத்தது என்று தவறாக நினைத்து, தேரிலிருந்து இறங்கி கயிலை மலை இருக்குமிடம் நோக்கிச் சென்று மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது அந்த முயற்சி, தடைப்பட்ட பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் இராவணன், பெருமானைப் புகழ்ந்து போற்றி வணங்க, அவன் பால் இரக்கம் கொண்ட பெருமான், அவனுக்கு வாட்படையும் நீண்ட ஆயுளையும் அளித்தான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, திருமங்கலக்குடி தலத்தில் உறையும், புலித் தோலினை ஆடையாக உடுத்தியவனை, பணிந்து வணங்கி அவனது திருவடிகளை போற்றும் அடியார்கள், நல்ல செயல்களைப் புரியும் உயிர்கள் பொருந்தி விளங்கும் வானுலகம் சென்றடையும் தகுதி படைத்தவர்களாக விளங்குவதை, உலகத்தவரே நீங்கள் காண்பீர்களாக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.