139. சீரினார் மணியும் அகில் - பாடல் 9
அழகுடன் விளங்குபவன்
பாடல் 9:
ஞாலம் முன் படைத்தான் நளிர் மாமலர் மேல் அயன்
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி
ஏலவார் குழலாள் ஒரு பாகம் இடம் கொடு
கோலமாகி நின்றான் குணம் கூறும் குணமதே
விளக்கம்:
Advertisement
நளிர்=குளிர்ச்சி; ஞாலம்=உலகம்; ஏலவார்குழலி என்ற திருநாமம், பல தலங்களில் உள்ள அம்பிகையின் திருநாமமாக உள்ளது. எரியான்=தீப்பிழம்பாக நின்றவன்; கோலம்=அழகு; கோலமாக நின்றான்=அழகுடன் விளங்குபவன்; பெருமானின் திருநாமத்தை சொல்வது, அவனது புகழினை எடுத்து ஓதுவது ஆகியவை நல்ல குணங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. குணமதே என்று கூறுவதால் பெருமானின் புகழினைக் கூறாமல் வீணாக காலத்தைக் கழித்ததல் நல்ல குணமாக கருதப்படாது என்பதையும் இங்கே சம்பந்தர் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
உலகத்தை முன்னர் படைத்தவனும், குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர் மேல் உறைபவனும் ஆகிய பிரமனும், திருமாலும், திருவடியையும் திருமுடியையும் அறிவதற்கு அரிய நிலையில் நீண்ட தீப்பிழம்பாக உயர்ந்து நின்ற பெருமான், திருமங்கலக்குடி தலத்தில், ஏலவார்குழலி என்ற திருநாமத்திற்கு பொருந்தும் வகையில் நறுமணம் வீசும் சாந்தினைத் தனது குழலுக்கு அணிந்தவளாகிய பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ளான். இவ்வாறு அழகுடன் விளங்கும் பெருமானின் புகழ் மிகுந்த குணங்களை கூறுவீர்களாக. அத்தகைய செய்கை சிறந்த குணமாக கருதப்படும்.