ஜனவரி
4: பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பிஎஸ் 4 ஆய்வுக் கருவியில் காராமணி விதைகளை முளைக்கச் செய்து, இஸ்ரோ புதிய சாதனை.
7: இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் நியமனம்.
13: உலகின் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா (45 நாள் நிகழ்வு), உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தொடக்கம். முதல் நாளிலேயே ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்.
15: உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர், ஐஎன்எஸ் சூரத் ஆகிய 3 போர்க் கப்பல்களும் ஒரே நாளில் கடற்படையில் இணைப்பு.
16: "ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் இரு விண்கலன்களை ஒருங்கிணைத்து இஸ்ரோ சாதனை.
29: தனது 100-ஆவது ராக்கெட்டை (ஜிஎஸ்எல்வி-எஃப்15) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ.
29: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பிப்ரவரி
1: ரூ.50.65 லட்சம் கோடி மதிப்பிலான 2025-26 மத்திய பட்ஜெட் தாக்கல். தொடர்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய வரலாறு படைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
5: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்ற தடுப்பு நடவடிக்கையின்கீழ் முதல் கட்டமாக 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். கை-கால்களில் விலங்கிடப்பட்டு, அவர்கள் அனுப்பப்பட்டதால் கடும் சர்ச்சை.
8: தில்லி பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி.
9: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங் விலகல்.
15: புது தில்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா சிறப்பு ரயில்களுக்காக திரண்ட பயணிகளால் ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழப்பு.
17: தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்.
22: தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்ட சுரங்கப் பாதை இடிந்ததில் 8 பணியாளர்கள் உயிரிழப்பு.
26: மகா கும்பமேளா நிறைவு: மொத்தம்
66 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்.
மார்ச்
1: முறைகேடு புகாரில் சிக்கிய மாதபி புரி புச்சைத் தொடர்ந்து, செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்.
13: ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரு விண்கலன்களும் வெற்றிகரமாகப் பிரிப்பு.
14: தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு.
29: சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையில் 11 பெண்கள் உள்பட 18 நக்ஸல்கள் சுட்டுக் கொலை.
ஏப்ரல்
1: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் உச்சநீதிமன்ற வலைதளத்தில் தங்களது சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
2: வக்ஃப் திருத்தச் சட்டம், 2024, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
8: தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சட்டவிரோதம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். மேலும், மாநில அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது.
10: மும்பையில் 2008-இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான தஹாவூர் ராணா (64) அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
22: ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
28: கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய பிரான்ஸூடன் இந்தியா கையொப்பமிட்டது.
28: வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது.
மே
2: கேரளத்தின் விழிஞ்ஞம் நகரில் ரூ.8,800 கோடி செலவில் அமைக்கப்பட்ட சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
6: இந்தியா-பிரிட்டன் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது.
7: பஹல்காம் பயங்ரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா தகர்த்தது.
14: உச்சநீதிமன்றத்தில் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு.
30: 2024-25-ஆம் நிதியாண்டில் 4-ஆவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
ஜூன்
4: ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயமடைந்தனர்.
4: 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இதுவே எண்ம முறையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
6: உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். செனாப்
நதியில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் 1,315 மீட்டர் நீளமுடையது.
9: மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
12: குஜராத்தின் அகமதாபாதில் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் (ஏஐ 171) ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் தப்பினார்.
15: உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
17: ஈரான்-இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்க "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை தொடக்கம்.
26: அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம் -4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சுபான்ஷு சுக்லா. இவர் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்கு பிறகு விண்வெளிக்கு பயணித்த இரண்டாவது இந்தியர் ஆவார். 18 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்த அவர் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.
29: தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழி கட்டாயம் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றது.
ஜூலை
3: உச்சநீதிமன்ற அலுவல் பணிகளுக்கு பட்டியலின (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
4: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
5: குஜராத் மாநிலம் அனந்தில் திரிபுவன சகாரி பல்கலைக்கழகம் எனப்படும் இந்தியாவின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
21: நாட்டின் 2-ஆவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கர், உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜிநாமா செய்தார்.
24: பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணத்தின்போது, இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது.
28: ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள வனப் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட "ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுலைமான் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட்
7: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
14: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.
27: ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, இந்தியா மீது உச்சபட்சமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத இறக்குமதி வரி அமலுக்கு வந்தது.
31: சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை
சந்தித்துப் பேசினார். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமர் மோடி முதல்முறையாக சீனா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர்
1: 2009-ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் கட்டாயமாக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, அந்தச் சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே தனது 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
12: நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
15: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
22: நாட்டில் நான்கு விகித (5%, 12%, 18%, 28%) ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, இரு விகித (5%, 18%) முறை அமலுக்கு வந்தது.
26: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.
26: இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மேல் சேவையில் இருந்த "மிக் 21' ரக விமானங்களின் பிரியாவிடை நிகழ்ச்சி சண்டீகர் விமானப் படைத் தளத்தில் நடைபெற்றது.
அக்டோபர்
6: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
11: ரூ.35,440 கோடி மதிப்பீட்டிலான இரு பெரும் வேளாண் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
13: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
28: வங்கக் கடலில் உருவான "மோந்தா' புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடந்தது.
29: நாட்டின் மேம்பட்ட, பன்முக தாக்குதல் போர் விமானமான "ரஃபேல்' போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சுமார் 30 நிமிஷங்கள் 200 கி.மீ. தொலைவுக்குப் பறந்தார்.
30: மும்பையின் போவை பகுதியில் உள்ள ஒரு நடிப்புப் பயிற்சி மையத்தில் 17 சிறார்கள் உள்ளிட்ட 19 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்தவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு, அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நவம்பர்
1: கேரளத்தை தீவிர வறுமையில் இருந்து விடுபட்ட மாநிலமாக முதல்வர் பினராயி விஜயன் மாநில சட்டப்பேரவையில் அறிவித்தார்.
2: கடற்படைக்கான தகவல்தொடர்பை மேம்படுத்தும் விதமாக சுமார் 4,400 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7 (சிஎம்எஸ்-03) செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
7: நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
10: பயங்கரவாத சதிக்கான வெடிபொருளுடன் சென்று கொண்டிருந்த கார் தில்லி செங்கோட்டை அருகே வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
14: பிகார் பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மொத்தம் உள்ள 243 இடங்களில் 202 இடங்களில் வெற்றி. நிதீஷ் குமார் 10-ஆவது முறையாக முதல்வரானார்.
17: சவூதியில் மெக்கா புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் சென்ற பேருந்து எரிவாயு லாரியில் மோதி நிகழ்ந்த விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஒரே ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
20: மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க மாநில ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித் துறை காலக்கெடு நிர்ணயிப்பது பொருத்தமற்றது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விளக்கமளித்தது. மசோதா மீது குடியரசுத் தலைவர், ஆளுநர் எடுக்கும் முடிவு நீதித் துறை வரம்புக்கு உட்பட்டது அல்ல என்றும் தெரிவித்தது.
21: நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தன.
21: துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதன் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.
24: உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்றார்.
25: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி கோயில் கோபுர உச்சியில் பிரதமர் மோடி காவிக் கொடியேற்றினார்.
டிசம்பர்
4: 23-ஆவது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புது தில்லி வந்தார்.
7: கோவா மாநிலத்தில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நிகழ்ந்த
தீ விபத்து சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள், விடுதி பணியாளர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
13: கேரள உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.
12: கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் திலீப் உள்பட 3 பேரை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.
15: பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் மாநில அமைச்சர் நிதின் நவீன் பொறுப்பேற்றார்.
18: இந்தியா - ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்.
20: அஸ்ஸாமின் ஹோஜாய் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த யானைக் கூட்டத்தின் மீது சைரங்-புது தில்லி ராஜ்தானி விரைவு ரயில் மோதியதில் பிறந்த குட்டி யானை உள்பட 8 யானைகள் உயிரிழந்தன.
20: அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் அணுமின் சக்தி (சாந்தி) மசோதா, 2025-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
21: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புறுதி திட்டம் சட்டம், 2005-க்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதா, 2025-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
22: இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு.
24: அமெரிக்க நிறுவனத்தின் 6,100 கிலோ எடை கொண்ட ப்ளூபேர்ட்-6 தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் எல்விஎம்-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
29: ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடர் குறித்த விளக்கம் தொடர்பாக நவ. 20-ஆம் தேதி தாங்கள் வெளியிட்ட உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.