பருவக்காற்று
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வாய்மொழிக்கு ஏற்ப, தமிழகத்துக்கு நீராதாரத்தை வழங்கக்கூடியவை, இரண்டு பருவகாற்றுகள். அவை, 1. தென்மேற்குப் பருவக்காற்று, 2. வடகிழக்குப் பருவக்காற்று*24. தமிழ்நாட்டில் தென்மேற்கிலிருந்தும், வடகிழக்கிலிருந்தும் குறிப்பிட்ட பருவத்தில் காற்றுகள் வீசுவதால் அவற்றுக்கு அப்பெயர்.
அ. தென்மேற்குப் பருவக்காற்று
ஜூன் முதல் அக்டோபர் வரை வீசும் தென்மேற்குப் பருவக்காற்று, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வீசுகிறது. இருப்பினும், தமிழகத்தை ஒட்டிய கேரளம், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழைநீர் வரத்து அதிகமாக இருக்கும். பாலக்காட்டுக் கணவாய் வழியாக வரும் தென்மேற்குப் பருவக் காற்றின் ஒரு பகுதியால், தென் தமிழகத்திலும், மத்திய தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் மழை பெய்வதுண்டு.*25
ஆ. வடகிழக்குப் பருவக்காற்று
அக்டோபர் முதல் டிசம்பர் வரை இக்காற்று தமிழகத்தில் வீசும். மழையின் அளவு குறைவாகத்தான் இருக்கும். எனினும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்வது இந்தப் பருவக்காற்றின்போதுதான். சில நேரங்களில், வங்காள விரிகுடா கடலில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால், கடற்கரையோர மாவட்டங்களில் பெரும் மழை பெய்கிறது. மாறிமாறி வரும் மழையும், வெயிலும் மக்களின் வாழ்வை பல நேரங்களில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பொதுவாகவே, பருவ மழை தமிழகத்துக்குச் சிறப்பானதாக அமைவதில்லை.
மழை அளவு
கோடை மேகங்கள், அரபிக் கடலிலிருந்து நீராவிக் காற்றைக் கொண்டுவருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை இவற்றைத் தடுப்பதால், இன்றைய கேரள மாநிலமாகிய பண்டைய சேர நாடு, மிகுதியான மழையைப் பெறுகிறது. உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடந்து தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று வீச வாய்ப்புகள் குறைவு. அதனால் இப்பருவத்தில் தமிழ்நாடு பெறும் மழையின் அளவு குறைவுதான்.
நிலப்பகுதியின் நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி மிகுந்த உயரத்துக்குச் செல்வதால் குளிர்ந்து நீராகி மழையாகப் பெய்யும். இப்பருவத்தில், தமிழ்நாடு ஓரளவு மழையைப் பெறுகிறது. கொண்டல் மேகங்கள், வங்கக் கடலில் இருந்து நீராவிக் காற்றைக் கொண்டு வருகின்றன. அவை, கிழக்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுகின்றன. இதன் விளைவால், தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்கிறது. இவ்வகையில், இன்றைய தமிழ்நாடு பெறும் சராசரி மழையளவு 969 மில்லி மீட்டர் ஆகும். எனினும், தமிழ்நாட்டின் மழையளவு 600 மில்லி மீட்டரிலிருந்து 700 மில்லி மீட்டர் வரை, இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. தமிழ்நாட்டின் உட்பகுதியிலுள்ள சமவெளிப் பகுதிகளில் சில இடங்களில், 1250 மில்லிமீட்டர் வரை எப்பொழுதாவது மழை பெய்வதுண்டு. பொதுவாக, 600 முதல் 900 மில்லி மீட்டர் மழையைத்தான் தமிழகம் பெறுகிறது. கடற்கரை ஓரங்களில் மட்டும் 1000 முதல் 1250 மில்லிமீட்டர் வரை மழை பெய்கிறது.*26
தென்மேற்கு பருவ மழையினாலும், வடகிழக்குப் பருவ மழையினாலும் தமிழகத்தில் அதிகப் புயல், மழை, வெள்ளம் போன்றவை நிகழ்கின்றன.*27
தட்பவெட்ப நிலை
தமிழ்நாடானது, நிலநடுக்கோட்டின் வடக்கே வெப்ப மண்டலத்தில் அமைந்திருக்கிறது. எனினும், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலும், கடலிலிருந்து பருவக் காற்றுகள் வீசுவதாலும், வெயிலின் கொடுமையால் வடஇந்தியாவைப்போல் அவ்வளவாகத் தாக்கப்படாமல், ஓரளவு சம தட்பவெட்பம் உடையதாக தமிழ்நாடு அமைந்துள்ளது. எனினும், நிலநடுக் கடல் நாடுகளில் உள்ளதுபோல், அவ்வளவு வெதுவெதுப்பான தட்பவெப்ப நிலை இங்கு அமையவில்லை. வெயில், மழை, புயல் ஆகியவற்றின் சீற்றங்களால் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதும் இல்லை.
தமிழ்நாட்டில், குளிர்காலம் என்று சொல்லத்தக்கது, சங்க காலத்தில் குறிப்பிட்ட முன்பனிக் காலம் எனக் குறிப்பிடப்பட்ட காலம்தான். ஜனவரி மாதத்தில் 24 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பநிலை குறைவதும் உண்டு. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 30 முதல் 33 சென்டிகிரேடு வரை வெப்பநிலை உயர்வதும் உண்டு.*28
கனிமங்கள்
உலகம் தோன்றியதிலிருந்து இன்றுவரை உள்ள காலத்தை ஐந்து பேரூழிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு ஊழிக் காலத்திலும், நிலப்பரப்பு பல்வேறு வகையில் உருமாற்றம் பெற்றுள்ளது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.*29 இப்பேரூழியின் காலங்களில்தான், தமிழகத்தில் கனிமங்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தமிழகத்தின் நிலப்பரப்பில் கனிமவளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டை இரும்புக் காலம் என்று ஆய்வாளர்கள் என்று அழைப்பர். காரணம், இக்காலகட்டத்தில் அதிக அளவில் இரும்புப் பொருட்கள் பயன்படுத்தியதுதான். இதனை உறுதிசெய்யும் வகையில், பெருங்கற்காலப் பண்பாட்டு வாழ்விடங்களிலும், புதைகுழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிக அளவில் இரும்புப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதிச்சநல்லூர், சானூர், கொடுமணல், செம்பியன் கண்டியூர், தாண்டிக்குடி, பொருந்தல், நெடுங்கூர் என பல அகழாய்வுகளை இதற்குச் சான்றாகக் கூறலாம். இவ்வகழாய்வுகளில் ஊது உலைகளும், இரும்புக் கருவிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில், இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்று இருப்பதை, அங்குக் கிடைத்த ஊது உலை போன்ற தொல்லியல் சான்றுகள் நிரூபிக்கின்றன.*30 பழங்காலத்திலேயே, தமிழகத்தில் இரும்புத் தாதுக்கள் உருக்கப்பட்டு, இரும்பைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தமிழகத்தில் பெரில் அல்லது அக்குவாமேரின் எனும் மூல தாதுப் பொருட்கள், கோவை மாவட்டம் தாராபுரத்தில் காணப்படுகின்றன.*31 திருப்பூருக்கும் கரூருக்கும் இடையே உள்ள கொடுமணல், காங்கேயம், படியூர் ஆகிய இடங்களிலும் இவ்வகை பெரில் எனும் மூலத்தாது கிடைப்பதாக ராஜன் குறிப்பிடுகிறார்.*32 திருநெல்வேலி மாவட்டத்தில் கிராஃபைட்டும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரும்புத்தாதும் பரவிக் கிடக்கின்றன. இருப்பினும், குறிப்பாக சேலம், கடலூர், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. மைகா, மேக்னசைட், சேலம் மற்றும் கோவை மாவட்டத்திலும்; கிரிஸ்டல் கற்கள், கோவை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலும் அதிக அளவில் காணப்படுகின்றன.*33
தமிழகம், தாதுப் பொருட்களும், மண் வளமும் மிக்க நாடு. இங்கு, காவிரியின் வடக்குப் பகுதியில், மணலுடன் சிவப்பு மண் கலந்து காணப்படுகிறது. பாறைப் படிவங்கள், பலவகையான படிமங்கள் ஆகியவற்றை இங்கு காண முடிகிறது. செங்கல்பட்டுக்கு தெற்கே மற்றும் சென்னைக்கு அருகே பண்டைய கிரிஸ்டலைன் படிவங்களும் காணப்படுகின்றன.*34 தமிழகம், இயற்கை வளங்களும், கனிம வளங்களும் நிறைந்த பகுதி என்பதை தமிழகத்தில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வுகள் பல தெளிவுபடுத்தியுள்ளன. கொடுமணல்*35 பொருந்தல்*36 அழகன்குளம்*37 ஆகிய இடங்களில் கிடைத்த மணிகள் மற்றும் மணிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான சான்றுகள் அனைத்தும், தமிழகத்தின் நிறைந்த கனிம வளத்தையே காட்டுகின்றன.
நிலப்பொதியியல்
தமிழகமும், அதனை உள்ளடக்கிய பெரும்பாலான தென்னிந்தியப் பகுதிகளும், உலகம் தோன்றியபொழுதே தோன்றிய உறுதிமிகு தொன்மைப்பாறைகளால் ஆன ஒன்று. தமிழக நிலப்பரப்பின் வரலாறு, இந்நிலவுலக வரலாற்றின் வேர்ப்பகுதியாக அமைந்துள்ளது.
தணல் பிழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைப் படலமாகும்போது, நீராவிப் படலம் தோன்றி உலகைச் சூழ்ந்து நின்றது. தணல் படலம், பாறைப் படலமாக மாறிய பின்பு, நீராவிப் படலம் குளிர்ந்து இடைவிடா மழையாகப் பொழிந்தது. பொழிந்த நீர், ஊழிப் பெருக்கெடுத்து ஓடிப் பள்ளங்களில் தங்கியது. இவ்வாறு தங்கிய அகன்ற ஆழமான பள்ளங்களே கடல்கள் ஆயின. பெருக்கெடுத்து ஓடிய வழிகளே ஆறுகளாயின. இந்த ஆறுகளின் வழியே ஓடிய வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட வண்டல் மண், கடலிலும் உலகின் ஆழமான பகுதிகளிலும் படிந்து படிவுப் பாறைகளாயின.* 38.
பாறை வகை
ஆர்க்கேயன் பேரூழிக் காலத்துக்குப் பிற்பட்ட ஊழிக்கால மாற்றங்கள் எல்லாம், நிலத்தை கடல் கொண்டதால் ஏற்பட்டவையே. ஆர்க்கேயன் பேரூழிக் காலத்தில், உலகத்தில் உயிரினங்கள் வாழவில்லை.*39 முதன்மையான தணல் பாறைகள், பன்முறை களைந்து தம் படிவு நிலையில் மாற்றம் பெற்றன. இவ்வாறு மாற்றம் பெற்ற பாறைகள், தமிழகமெங்கும் காணப்படுகின்றன. இவற்றை நைஸ் என்னும் பாறை வகையாகக் குறிப்பர். ஆர்க்கேயன் தொகுதிப் பாறைகள் என்று கூறப்படுவது, இந்த நைஸ் பாறைகளையும் அதன்பின் தோன்றிய தொல்லுயிர் எச்சங்களற்ற படிவுப் பாறைகளையும் குறிப்பதாகும்.
சேலம் மாவட்டம், சங்கரிதுர்க்கத்துச் சுண்ணாம்புப் பாறைகளும், தமிழ்நாட்டின் தொழில் வளத்துக்கு வழிகோலும் கஞ்சமலைப் பகுதியின் இரும்புக் கனிமப் படுகைகளும், ஆர்க்கேயன் தொகுதிப் பாறைகள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.*40 சேலம் மாவட்டத்து கஞ்சமலைப் பகுதிப் பாறைகள், உலகிலேயே மிகப் பழமையான பாறை வகையைச் சார்ந்தவை. இத்தகைய பாறை வகைகள், உலகில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளன.
சேலம் அருகே கஞ்சமலை, கோதுமலை, தீர்த்தமலை, கொல்லிமலை, பச்சைமலை ஆகிய பகுதிகளில் மேக்னசைட் என்றழைக்கப்படும் இரும்புத்தாது பெருமளவில் கிடைக்கிறது.*41 தமிழ்நாட்டில் கிடைக்கும் மேக்னசைட் கனிமப் பொருள், உலகிலேயே மிகச் சிறந்தது. இந்த மேக்னசைட் கனிமப் பொருளை உள்ளடக்கிய ட்யூனைட் என்ற பாறை ஆர்க்கேயன் பாறை வகையைச் சார்ந்ததாகும்.*42
இரும்பு, மக்னீசியக் கனிமப் பொருளை உள்ளடக்கிய கருமை நிறம் படர்ந்த சார்னகைட் என்ற பாறை, உலகிலேயே முதன்முதலில் சென்னை, பல்லாவரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, தி. ஆலண்ட் என்பவரால் விவரிக்கப்பட்ட, தொன்மைமிக்கதாகும்.*43 தமிழகத்தில் உயர்ந்த மலைகளான நீலகிரி, ஆனைமலை, பழனி மலை ஆகியவை, சார்னகைட் பாறைகள் ஆன மலைகளாகும். புதுவையிலும் விருத்தாசலத்திலும் கிடைப்பது கிரிடேசியஸ் அமைப்புகளைக் கொண்ட பாறை வகைகளாகும்.*44
நிலப்பொதியியல் வரலாற்றில், மிகச் சிறப்பாக குறிப்பிடத்தக்க அளவில் மாபெரும் கடலெழுச்சி ஒன்று நிகழ்ந்தது. இவ்வெழுச்சியால், பரந்து கிடந்த இந்தியப் பெரு நிலப்பரப்புகளை பெரிய அளவில் கடல் விழுங்கியபோதும்கூட, தமிழக நிலப்பகுதியை முழுமையாகக் கடல் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காடுகள்
தமிழகத்தில், சங்ககாலத்தில் முல்லை நிலம் எனக் குறிப்பிடுவது காடுகளும் அவற்றைச் சார்ந்துள்ள நிலப்பகுதிகளுமே ஆகும். இன்றைய தமிழ்நாட்டின் மொத்தப்பரப்பில், பதினாறு சதவீதம் காடுகளாக உள்ளது என்று வனத்துறையினர் கணக்கிட்டுள்ளனர். 45 மீட்டருக்கு மேலும் உயரமாக வளர்ந்த மரங்களைக் கொண்டு, மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் காணப்படும் காடுகளை ‘தென் வெப்ப மண்டல ஈரமான பசுமைமாறாக் காடுகள்’ என்ற பெயரால் அழைக்கின்றனர்.*45 முப்பது மீட்டருக்கு மேல் உயரமான தேக்கு முதலான மரங்களைக் கொண்டுள்ள நீலமலை, ஆனைமலை, பழனி மலை காடுகளை ‘பழுப்பு உதிரும் தென்னிந்தியக் காடுகள்’ என்று குறிக்கின்றனர்.
13 முதல் 20 மீட்டர் உயரமான சந்தனம் முதலான மரங்களோடு புல்லும் புதரும் மண்டிய இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் மேடுகளில் காணப்படும் காடுகளை ‘சருகுதிரும் தென் வெப்ப மண்டலக் காடுகள்’ என்றும் அழைக்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் சோலைகளாகக் காணப்படும் காடுகளை ‘தென்மலைப் பகுதி ஈர இளவெயில் மண்டலக் காடுகள்’ என்பர். 6 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை உயரமுள்ள மரங்களோடு முட்புதர்கள் மண்டிய சமவெளிப் பகுதிகளில் காணப்படும் காடுகளை ‘தென் வெப்ப மண்டல முட்காடுகள்’ என்று அழைப்பர்.*46 மேலும், வெப்ப மண்டல பசுமை மாறா உலர் காடுகள், கடற்கரைச் சதுப்பு நிலக் காடுகள் என பகுத்துக் காண்பதுண்டு. இவை பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் குறிஞ்சி, முல்லைத் திணைகளில் குறிக்கப்படும் பண்டைய காடுகள் ஆகும்.
நாகரிக, பண்பாட்டு வளர்ச்சியில், வாழிடம் மற்றும் இயற்கை வளத்தின் பங்கு
மக்களின் இயல்பான வாழ்க்கை முறை, காற்று, மழை, தட்பவெட்ப நிலைகளின் மாற்றத்தால் மாறக்கூடியவை என்பது அறிவியல்பூர்வமாகவும் அறியப்பட்ட ஒன்று. எனவேதான், இடத்துக்கு இடம் நாகரிகமும் பண்பாடும் மாறி மாறி அமைகின்றன. அதனால்தான், சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்களைவிட, காடுகளில் வாழ்பவர்கள், நாகரிகத்தில் குறைந்த வளர்ச்சி பெற்றுள்ளனர். கடற்கரை ஓரங்களிலும், ஆறுகளின் ஓரங்களிலும் வாழ்ந்த மக்கள், அயல் நாட்டுத் தொடர்பு, நாகரிக வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை எளிதில் அடைந்தனர்.
தமிழகத்தின் பண்டைய நாகரிக வளர்ச்சி பெற்ற இடங்களைக் காணும்போது இவை நன்கு புலப்படும். மேலும், தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளும் இக்கருத்தை மேலும் தெளிவுபடுத்துகின்றன. அந்தப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்களும் அதற்குச் சான்றாக உள்ளன. அழகன்குளம்*47, காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்)*48, அரிக்கமேடு*49 கரூர்*50 போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. இவற்றுள், கரூர் மட்டும் உள்நாட்டுப் பெரும் வணிக நகராகும். பிற அனைத்தும், ஆற்றங்கரைகளில் அமைந்த பெரும் வணிக நகரங்களாகும்.
விளை பொருட்களும் வணிகமும்
சமவெளிப் பகுதிகளிலும், காடுகளிலும், மலைகளிலும், கடற்கரை ஓரங்களிலும் வாழ்ந்த மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை இவை வழங்கின. ஆற்றங்கரைகளிலும், உள்பகுதிகளிலும் இருந்த நன்செய் நிலங்களில் நெல்லும் கரும்பும் பயிராயின. புன்செய் பயிர்களாக கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, சோளம், துவரை, மொச்சை, இஞ்சி, ஆமணக்கு, கொத்தமல்லி ஆகியவை சமவெளிகளிலும் மலைப்பிரதேசத்திலும் காடுகளிலும் விளைந்தன.*51
தமிழக விளைப் பொருட்களின் மேல் அயல்நாட்டினரின் கவனம் ஈர்த்தது. அதன் பயனாக, மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், சீனாவுக்கும் கடல் வாணிகம் நடைபெற்றது. தமிழகத்தின் கீழைக் கடற்கரையை ஒட்டி இருந்த பண்டைய துறைமுக நகரங்களான காயல், தொண்டி, முசிறி, கொற்கை, பெரியபட்டணம் போன்றவை மண்மேடிட்டு மறைந்துபோயின. இந் நகரங்களைப் பற்றிய சிறப்புகளை, ஆங்காங்கே நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் கிடைத்த குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.
இதுபோலவே, இலங்கை, பர்மா, மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, காம்போடியா, சீனா ஆகிய நாடுகளுடன் தமிழகம் மிக நெருங்கிய வணிகத் தொடர்பும், வரலாற்றுத் தொடர்பும் கொண்டிருந்தது என்பதற்கு, வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன.*52
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், நாகரிக மாற்றங்களுக்கும், தொழில் துறையில் அவை பெறும் முன்னேற்றங்களுக்கும், அந்நாட்டின் இயற்கை நில அமைப்புகளே முதன்மைக் காரணமாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்கள், சங்க காலம் தொட்டு கடல் கடந்து வணிகம் புரிந்தனர் என்றால், அதற்கு தமிழகத்தின் இயற்கை அமைப்பு ஓர் இன்றியமையாத காரணம் ஆகும். தமிழகம் தொன்மையான நாடாகத் திகழவும் இவை துணை நிற்கின்றன. எனவே, தமிழகத்தின் இயற்கை வளம் தன்னிகரற்றது என்பது ஏற்புடையது.
மேற்கோள் எண் - நூல் விளக்கம்
24. கே.கே.பிள்ளை - தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ்நாடு அரசு, 14. 25. மேலது - பக். 14-15. 26. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர், பக். 36-37. 27. B. Narasimhaiah, Neolithic and Megalithic Culture in Tamil Nadu, Sundeep Prakashan, Delhi, 1980, pg. 12-13. 28. The Chief Conservator of Forests, Madras, Forestry in Madras State – 1968, p.12. 29. ந.சி.கந்தையா - திராவிட இந்தியா, இன்டர்நேசனல் லிங்குஸ்டிக் சென்டர், சாத்தூர், 2000, பக் 22-23. 30. கா.ராஜன் - தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. பக். 129-130. 31. B.Narasimaiah, op. cit., p.16. 32. கா.ராஜன், மு.கு.நூ. பக். 82-83. 33. B.Narasimaiah, op. cit., p.16. 34. Ibid., p.15. 35. க.ராஜன் - தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, சென்னை, ப. 83. 36. க.ராஜன் - பொருந்தல் அகழாய்வு - செய்திக்குறிப்பு, ஆவணம் இதழ் 20, 2010, ப.109. 37. T.S.Sridhar, (G.Ed), Alagankulam, an Ancient Roman Port City, Dept. of Archaeology, Govt.of Tamilnadu, 2005. Chennai. 38. தமிழ் நாட்டு வரலாற்றுக் குழுவினர் - தமிழ் நாட்டு வரலாறு – தொல்பழங்காலம், தமிழ்நாடு அரசு வெளியீடு – 1975. பக். 4-8. 39. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர், பக். 35-36. 40. மேலது. ப. 7. 41. ந.சி.கந்தையா - திராவிட இந்தியா, இன்டர்நேசனல் லிங்குஸ்டிக் சென்டர், சாத்தூர், 2000, பக். 23. 42. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர், ப. 7. 43. மேலது – ப. 8-9. 44. மேலது – ப. 7-8 45. மேலது – ப. 43. 46. மேலது – பக். 44-45 47. T.S.Sridhar - Excavations of Archaeological Sites in Tamil Nadu (1969 – 1995) – 2004. 48. Indian Archaeology - A Review - 1970 – 71. 49. Ancient India Vol-2 50. A. Abdul Majeed - Tamil Civilization, Tamil Univercity, Thanjavur 1987, p.73. 51. Narasimaiah, op. cit., p.9. 52. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர் - தமிழ்நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், மு.கு.ப. ப. 21. |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.