ஈமச்சின்னங்கள்
பெருங் கற்கால வழிபாட்டு நிலை
முந்தைய அத்தியாயத்தில், கற்காலத்தின் பண்பாடுகள் ஊடே நிலவிய நீத்தோர் அடக்கமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதனை முழுமையாக அறிந்துகொள்ளவும், அக்காலத்தில் நிலவிய நம்பிக்கைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள சான்றுகள் குறைவாகவே கிடைத்துள்ள நிலையிலும், இறந்த மனிதனைச் சிறப்பாக அடக்கம் செய்யும் முறை மேற்கொள்ளப்பட்டதை அறியமுடியாது போகவில்லை. அக்கால நம்பிக்கையான “உடல் அழிகிறதே ஒழிய உயிர் வாழ்ந்துகொண்டிருகிறது” என்பதை முற்றாக வெளிப்படுத்துகிறது. இறந்தவர்களுக்குத் தனிச்சின்னங்களை அமைத்து அவர்கள் வாழ்ந்தபோது உண்ட, உடுத்திய, பயன்படுத்திய பொருட்களை அவர்களின் எலும்புத் துண்டுகளோடு சேர்த்துப் புதைத்து வைத்துள்ளமை, அக்கால மக்கள் இறந்தவர்கள் பற்றி கொண்டிருந்த நம்பிக்கைகளையும் பற்றையும் நன்கு உணர்த்தவல்லதாக உள்ளது.
தாழி சின்னமும் தாய் தெய்வ வழிபாடும்
ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற ஒரு பானை ஓடு, பெருங் கற்படைக் கால மக்கள் தாய் தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது. இதில், செழித்து வளர்ந்த பயிருடன், கொங்கைகள் திரட்சியாகக் காட்டப்பட்ட ஒரு பெண்ணின் நின்ற உருவமும், அருகில் மானின் உருவமும், கீழ்ப்பகுதியில் முதலைகள் இரண்டு ஆற்றில் மிதந்திருக்கும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. இவற்றில், மான் தவிர மற்றவை வளமையின் குறியீடுகள் ஆகும். மான், துர்க்கையை சுட்டும் குறியீடாகும். இதனை, மால்லபுரத்தில் காணமுடியும். எனில், இங்கு காட்டப்படும் பெண் உருவம், துர்க்கை என்ற கருத்து உள்ளது. வேட்டை தெய்வமான துர்க்கை, இங்கு திரண்ட கொங்கை கொண்ட பெண்ணாக (மூத்த தேவியின் வளமைக் குறியீடு) காட்டப்பட்டிருப்பது, வேட்டைச் சமூகம் கொண்டிருந்த தாய் தெய்வத்தின் மீதான பற்றை, உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு உயர்ந்தபோதும் வெளிப்படுத்தினர் எனலாம்.
இதுகொண்டு, பெருங் கற்காலப் பண்பாட்டுக் காலத்தில், வேட்டைச் சமூகத்திலும் புதிய கற்காலத்திலும் நிலைபெற்றிருந்த தாய் தெய்வ வழிபாடு தொடரப்பட்டதைக் காட்டுகிறது எனலாம். மேலும் இது, ஒரு திணைத் தெய்வம் மற்றொரு திணை மக்களாலும் வழிபடப்பட்ட நிலையைச் சுட்டுகிறது. இது, சங்க இலக்கிய தெய்வ வழிபாடுகள் குறித்த காட்சிகளுக்கு முன்னுதாரமாக விளங்குவதாகும்.
எனில், மூத்தோர் நினைவுச் சின்னங்கள் வளமை தரும் நம்பிக்கையில் வழிபடும் நோக்கோடு எழுப்பப்பட்டன என்ற பண்பாட்டு அடையாளத்தை எளிதில் அடையக்கூடியதாக உள்ளது. எனில், பண்டைய ஈம முறைகளை அறிவது இப்பண்பாட்டை விளக்கிக்கொள்ள உதவுவதாகும்.
தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும்தான் நமக்கு பண்டைய ஈம முறைகளையும், ஈமச்சின்னங்களின் வகைகள் குறித்தும் சான்று வழங்கும் எழுத்துப்பூர்வ ஆவணங்களாக விளங்குகின்றன. ஈமச்சின்னங்களின் தொன்மையான காலக் கணக்கைக் கொண்டு இவ்வெழுத்துச் சான்றுகளைக் கணக்கிட்டால், எழுத்துச் சான்றுகள் ஈமச்சின்னப் பண்பாட்டின் மத்திய காலத்தை அல்லது இறுதி சில நூற்றாண்டுகளைக் குறிப்பிடுகின்றன எனக் கருத வேண்டும்.
இலக்கியங்களில் ஈமச் செய்திகள்
தமிழரின் தொன்மையான இலக்கணமான தொல்காப்பியத்தில், இறந்தவர்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டார்கள். அதாவது இட்டா அல்லது சுட்டா அல்லது வேறு எந்த நடைமுறை பின்பற்றப்பட்டது, இறந்த எல்லோருக்கும் சின்னங்கள் எழுப்பப்பட்டனவா என்ற குறிப்புகள் இல்லை. ஆனால் இறந்த வீரனுக்கு நடுகல் எழுப்புவது பற்றிய விரிவான செய்திகளைப் பெறமுடிகிறது. அது,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்”
(தொல்காப்பியம், பொருள், 2-5)
என்று, நடுகல் எடுக்கும்போது கடைப்பிடிக்கப்பட்ட சடங்குகள் குறித்து விளக்குகிறது. நடுகல் மரபு, பெருங் கற்படைப் பண்பாட்டின் நீட்சி என்பதால், தொல்காப்பியம் குறிப்பிடும் இச்சடங்குகள் பெருங் கற்படைச் சின்னங்கள் எழுப்பப்பட்டபொழுது அக்கால மக்கள் மேற்கொண்டவை எனலாம்.
தொல்காப்பியத்தின் இவ்வரிகளுக்கு இருவகை விளக்கங்களை நமது நூல்களில் காணமுடிகிறது.
வ.எண் | பாடல் | விளக்கம்-1 | விளக்கம்-2 |
1. | காட்சி | இறந்தவரை சுற்றத்தார் கண்டு வணங்க காட்சிப்படுத்துதல் | கணியன் அல்லது சோதிடனைக் கொண்டு குறிப்பிட்ட தன்மை உடைய கல்லை சின்னத்துக்காகக் காண்பது. |
2. | கால்கோள் | இறந்தோரை ஒரு இடத்தில் வைத்து பஞ்ச பூதங்களும் அவற்றை எடுத்துக்கொள்ள அழைப்பது. | தீர்மானித்த கல்லைக் கொண்டுவருவது. |
3. | நீர்ப்படை | எஞ்சிய எலும்புகளை எடுத்து வந்து நீர்கொண்டு தூய்மைப்படுத்துவது. | கல்லை நீராட்டுதல் ஆகும். நீரினால் பொருட்கள் புனிதமடையச் செய்யலாம் என்பது பண்டைய நம்பிக்கை. |
4. | நடுகல் | நீத்தோருக்காக எழுப்பப்படும் நினைவுச் சின்னம். | அக்கல்லை நடுவதாகும் |
5. | பெரும்படை | இறந்தவருக்காக இடுபொருட்கள் வைப்பது அல்லது இடுபொருட்கள். | இறந்தவர் உயிரோடு இருந்த காலத்தில் விரும்பி உட்கொண்ட பொருட்களை படையலாக வைப்பது. |
6. | வாழ்த்துதல் | இறந்தவரைப் பற்றிய நற்செயல்களை, நற்பண்புகளை நினைவு கூறி எடுத்தியம்புவது | கல்லாய் இருக்கும் ஆன்மாவை எண்ணி வாழ்த்தி ஆடிப்பாடுவது. |
இரண்டாவதாகக் குறிப்பிட்ட விளக்கங்கள் பெரும்பான்மையும், பிற்காலத்திய புறப்பொருள் வெண்பாமாலையை அடியொட்டியதாகும். புறப்பொருள் வெண்பாமாலை, இச் சடங்குகளின் அறு நிலைகளை 1. கல்காண்டல், 2. காற்கோள்நிலை, 3. கல்நீர்ப்படுத்துதல், 4. கல்நடுதல், 5. இல்கொண்டு புகுதல் 6. கல்முறை பழிச்சல் எனக் குறிப்பிடுகிறது. இதில் 5 மற்றும் 6-ம் நிலைகள் வேறுபடுகின்றன. பெரும்படை என்பதே இல்கொண்டு புகுவதாகும் என்றும், கல்முறை பழிச்சல் என்பது வாழ்த்துதல் நிலை என்றும் கொள்வர். இல்கொண்டு புகுதல் என்பது கல்நடும் இடம் என்றும் கொள்வர். இதனைக் கொண்டு, கல்நட்ட இடத்தில் ஒரு பீடமோ, அறையோ இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் உட்பகுதியில் கல்லைக் கொண்டுவந்து வைப்பதை இச்சடங்கை குறிப்பதாகும் என்றும் கருதப்படுகிறது.
தொல்காப்பியத்துக்கும் புறப்பொருள் வெண்பாமாலைக்கும் இடைப்பட்டதாகிய சிலப்பதிகாரம், 5-ம் நிலையாகிய பெரும்படை அல்லது இல்கொண்டு புகுதலைப் பற்றிக் குறிப்பிடாமல், இச்சடங்குகளை 5 நிலைகளாகக் காதை என்ற சொல்லால் சுட்டுகிறது. அவை - 1. காட்சிக்காதை, 2. கால்கோள்காதை, 3. நீர்ப்படைக் காதை, 4. நடுகல் காதை, 5. வாழ்த்துக்காதை. சிலப்பதிகாரத்தில் பெரும்படை அல்லது இல்கொண்டு புகுதல் குறிப்பிடாமை, சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தின் பொதுக்கூறா அல்லது பௌத்த சமயம் சார்ந்த நடைமுறையா என்று நம்மிடையே ஆய்வு விரியவேண்டி உள்ளது. புறப்பொருள் வெண்பாமாலைக்குப் பிற்காலத்தில் தோன்றிய 12-ம் நூற்றாண்டு ‘வீரசோழியம்’, 17-ம் நூற்றாண்டு ‘இலக்கண விளக்கம்’, 19-ம் நூற்றாண்டு ‘சாமிநாதம்’ ஆகியவையும் தொல்காப்பியத்தை பிரதி செய்கின்றன. இலக்கண விளக்கம், வாழ்த்துதல் அல்லது கல்பழிசல் நிலையைச் சுட்டுவதில்லை.
சங்க இலக்கியத்திலும் ஈமச்சின்னங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் கொண்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வீரயுகத்தின் எதிரொலிப்பாக உள்ள அப்பாடல்களிலும், சவ அடக்கம் பற்றிய செய்திகளை விரிவாகக் காண முடியாது உள்ளது. புறநானூறு 239-ம் பாடல் ஒன்று மட்டும்,
“இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படு வழிப்படுக...”
என்று குறிப்பிடுகிறது.
இதில், ‘இடுக’ என்பது இறந்தவர்களை ஓர் இடத்தில் இடுவதையும், அதாவது பண்டைய நடைமுறையாகத் தோன்றும் பிணத்தின் சதைப்பகுதிகள் மறையும்வரை திறந்தவெளியில் பிணத்தை வைத்திருப்பதாகும். ‘சுடுக’ என்பது எரியூட்டலையும், ‘படுவழிப்படுக என்பது இறந்தோரை நேரடியாக ஈமக்குழியில் வைப்பதையும் குறிக்கிறது. சுடும் நிகழ்வு, புறநானூறு 240, 245, 246 மற்றும் 363-ம் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகள், சுடாமல் சின்னங்களில் புதைத்துவந்த பண்டைய நிலையுடன் புதியதாக சுடும் வழக்கம் நிகழத் தொடங்கியதைக் காட்டுகின்றன எனலாம்.
சங்கம் மருவிய காலத்து இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைதான், தன்காலத்தில் வழக்கில் இருந்த சவ அடக்கமுறை குறித்து தெளிவாகக் குறிப்பிடுகிறது.
“சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிழ்ப்போர்”
இங்கு, சுடுவோர் என்பது பிணத்தை எரியூட்டுவதை மேற்கொண்டோர். இடுவோர் என்பது திறந்தவெளியில் வைப்பதை மேற்கொண்டோர். தொடுகுழிப் படுப்போர் என்பது தோண்டப்பட்ட குழியில் முழுப் பிணத்தையும் புதைப்போர். தாழ்வையின் அடைப்போர் என்பது நிலத்துக்குக் கீழே தாழ்ந்த இடங்களில், அதாவது கல்பதுக்கை அல்லது குடைவரை போன்ற சின்னங்களில் அடைப்பதை மேற்கொண்டோர் மற்றும் தாழி முதலிய சின்னங்களில் வைப்பதை மேற்கொண்டோர் என்பதைச் சுட்டுகிறது.
தொல்பொருள் சான்றுகள் கொண்டு பார்க்கும்போது, தாழியில் அடைத்தலின் போதும், தாழியில் கவிழ்த்தலின் போதும், பெரும்பான்மையாக எலும்புத் துண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அரிதாகவே முழு எலும்புக்கூடு காணப்படுகிறது. இரண்டு நிலையிலும், எரியூட்டிய எலும்புத்துண்டுகள் காணப்படவில்லை என்றே தோன்றுகிறது. (நமது அகழாய்வு அறிக்கைகள் இச்செய்தியை வழங்குவதில்லை).
சின்னங்கள் யாருக்கு
தொல்காப்பியம், நடுகல் எடுப்பது வீரனுக்குரியதாகச் சுட்டுவதைக் கொண்டு பார்த்தால், ஈமச்சின்னங்கள் வீரர்களுக்கு மட்டும் எடுக்கப்பட்டதாகக் கருத வேண்டும். ஆனால், சங்க இலக்கியம் இறந்துபட்ட பெண்கள் உள்பட அனைவருக்கும் சின்னம் எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது. இங்கு, இலக்கியங்கள் இறந்துபட்டோரைக் குறிப்பிடும்போது, ‘கல்லாயின்னே’ என்கிறது. ‘கல்லாயினன்’ என்றால் இறந்துபட்டான் என்று பொருள். அதனுடன், உற்றார் உறவினரால் ஈமக்கடன் அளிக்கப்பட்டான், தெய்வத்தன்மை பெற்றான் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இது, ஈமக்கடனுக்கும் கல்லுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை உணர்த்துகிறது. பிற்கால நடுகல் பண்பாடு, வீரர்களுக்கு மட்டும் எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
தமிழகத்தில், ஈமச்சின்னங்கள் குறிப்பாக தாழி மற்றும் கல்வட்ட வகையினங்கள் குறிப்பிட்ட ஓர் இடத்தில் 1000-க்கும் மேற்பட்டு காணப்படுவதால், உதாரணமாக ஆதிச்சநல்லூர், தாழிக்காடு, குருவிநாயனபள்ளி கல்வட்டங்கள் போன்று ஆயிரக்கணக்கிலும், வேறு சில இடங்களில் நூற்றுக்கணக்கிலும் ஈமச்சின்னங்கள் இருப்பதைக் காணும்போது, இறந்த எல்லோருக்கும் சின்னங்கள் எழுப்பப்பட்டன எனக் கருதமுடிகிறது. மேலும், இடுபொருட்களின் குணமே இறந்துபட்டவரின் சமூக நிலையை உணர்த்தவல்லது எனக் கருதமுடிகிறது. மேலும், கால அகாசம், பொருளாதார நிலை, குழுவின் ஒற்றுமை, குழுவின் மரபான வழக்கம், ஈமச்சின்னங்களுக்கான மூலப்பொருட்கள் கிடைக்கும் நிலை ஆகிய காரணங்கள், சின்னங்களின் தன்மையைத் தீர்மானிக்கின்றன என்று கருதலாம்.
ஆதிச்சநல்லூர் தாழிச்சின்னங்களின் எளிமை, கடும் உழைப்பு தேவையற்ற குணத்தின் தன்மையை இடுபொருட்களின் தன்மையோடு ஒப்பிடும்போது, தாழி வகைச் சின்னங்கள் பொருளாதாரக் காரணத்தால் உருவானதல்ல என்பதை எளிதில் அடையச்செய்கிறது. மல்லச்சந்திரம் கல்திட்டைகள் வகை சிறப்பு வடிவங்கள் போன்ற ஈமச்சின்னங்கள் பெரும் கூட்டு உழைப்பையும் பொருளாதாரத்தையும் வேண்டுபவை. ஆனால், இடுபொருட்கள் குணம் எளிமையைக் கொண்டிருப்பவை. போலவே, நிலத்துக்குக் கீழ் அமைக்கப்படும் கல்பதுக்கை போன்ற ஈமச்சின்னங்களின் இடுபொருட்களின் குணம், பொருளாதார செழிப்பைக் காட்டுபவையாக உள்ளன. சங்க இலக்கியம், இறந்த சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கு தாழிச் சின்னம் எழுப்பப்பட்டதையும், அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் சின்னம் எழுப்பப்பட்டதையும், வெளிமான் என்பானுக்கு தாழிச் சின்னம் எடுக்கப்பட்டதையும், பெண்கள் தாழியில் இட்டுப் புதைத்ததை தும்பிசேர் கீரனாரின் புறநானூறு 256-ம் பாடல் காட்டுவதையும் இங்கு நினைவுகூரலாம். இங்கும் சமூக, பொருளாதார நிலை சின்னங்களின் வகையையோ, சிறப்பு வடிவமைப்பையோ தீர்மானிக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது.
மேற்கண்ட தரவுகளைக் கொண்டு பார்க்கையில், கால அகாசம், பொருளாதார நிலை, குழுவின் ஒற்றுமை, குழுவின் மரபான வழக்கம், ஈமச்சின்னக்களுக்கான மூலப்பொருட்கள் கிடைக்கும் நிலை ஆகிய காரணங்கள் சின்னங்களின் தன்மையைத் தீர்மானிக்கின்றன என்று குறிப்பிடலாம்.
தமிழகப் பெருங் கற்காலம் – ஒரு மறுபரிசீலனை
தமிழகத்தில் பெருங் கற்காலப் பண்பாடு நிலவிய காலக்கட்டம் குறித்து 19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலங்கள் மற்றும் 20-ம் நூற்றாண்டின் கருத்துருவங்களான மு.பொ.ஆ. 200 என்பதில் இருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டு, மு.பொ.ஆ. 1000 என்ற காலப் பழமைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருந்தல் அகழாய்வு, தமிழகத்தின் பெருங் கற்காலத்தின் பழமையை மு.பொ.ஆ. 1500 எனக் காட்டியுள்ளது. (கா. ராஜன், பொருந்தல் அகழாய்வு, ஆவணம் எண்: 20, 2010).
இக்கால நிரூபணங்கள், இப்பண்பாடு குறித்து கொண்டிருந்த முந்தைய நிலைப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. முதல் நிலைப்பாடு, பெருங் கற்படைச் சின்னங்களின் பரவல் குறித்தது. துவக்கத்தில், வட கர்நாடகத்தில் கோலூர் - கல்லடிக்கி என்ற இடத்தில் மு.பொ.ஆ. 1200-ம் காலத்துக்குரிய கல்திட்டை வகைச் சின்னம் அறிப்பட்டது. இயற்கையாகக் கிடைத்த நான்கு கற்பலகைகளுடன் மூடுகல்லும், வாயிலும் கொண்டு அது உருவாக்கப்பட்டதாகும். (A. Sundara, Early Chamber Tombs of South India: A Study of the Iron Age Monuments of North Karnataka, University Publishers, Delhi, 1975, pp. 200-215) பின்னர், ராஜன்கொலூர் மற்றும் அய்யவோளே ஆகிய இடங்களில், வடிவமைப்பில் வளர்ச்சியடைந்த மு.பொ.ஆ. 800 - 600 சின்னங்கள் அறியப்பட்டன. இவற்றில், கிழக்கு மற்றும் தெற்கு நோக்கிய இடுதுளைகள் உள்ளன. இதன் வளர்ச்சி பிரம்மகிரியை அடைந்தது என்று அவர் கருதுகிறார். பிரம்மகிரியில் உள்ள சின்னங்கள் மு.பொ.ஆ. 700-க்கு உரியதாக அறியப்பட்டது.
கல்வட்டம் வகை - 1
தமிழகப் பகுதிகளில் மு.பொ.ஆ. 500 வரையிலான பழமை கொண்ட தொகரப்பள்ளியில் அமைந்த பெருங் கற்படைச் சின்னங்கள் அறியப்பட்டன. (B. Narashimmaiah, Neolithic and Megalithic Culture in Tamil Nadu, Sundeep Prakaram, New Delhi, 1980, p.150) இவற்றுக்கு இடையிலான கால வித்தியாசத்தின் அடிப்படையில், தமிழகத்துள் இன்றைய கர்நாடகப் பகுதியில் இருந்து இப்பெருங் கற்படை பண்பாடு பரவியது என்ற கருத்துருவம் முன்வைக்கப்பட்டு, ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (B. Narashimmaiah, opp,cit., & K. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, Mano Pathippakam, Thanjavur, 1997 மற்றும் பலர்).
இதன் காரணமாக, கர்நாடகப் பகுதியில் உற்பத்தியான இப்பண்பாடு, தகடூர் நாட்டின் வழியாக தமிழகம் முழுவதும் மெல்ல மெல்லப் பரவியது என்றும் எழுதப்பட்டன. மேலும் பிரம்மகிரி, அரிபென்கல் ஆகிய இடங்களில் உள்ளவை கொள்ளேகால் - திப்பம் வழியாக கோவைப் பகுதிக்கும், அங்கிருந்து திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளுக்கும், மற்றொரு வழியாக கோலார், சித்தூர் வழியாக தகடூர்ப் பகுதிக்குப் பரவி, தகடூரில் இருந்து வளர்ச்சியடைந்து வட ஆர்க்காடு, செங்கல்பட்டுப் பகுதிகளுக்குச் சென்றன என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. அன்றைய நிலையில், கர்நாடகப் பகுதியில் மிகையான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தரவுகள் கூடுதலாகவும் இருந்தமையாலும், தமிழகத்தில் மிகக்குறைந்த இடங்களே அகழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்ததாலும் இந்நிலை உருவானது போலும்.
தகடூர்ப் பகுதியின் மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகள், தகடூரில் இப்பண்பாட்டு மு.பொ.ஆ. 1000 அளவில் நிலைபெற்றிருந்ததை நிரூபித்தது. அண்மையில், ஈரோட்டின் பொருந்தல் அகழாய்வு முடிவு, இப்பண்பாட்டின் காலத்தை மு.பொ.ஆ. 1500 என்று தெரிவித்தது பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. இப்புதிய காலநிலைத் தரவுகளால், பெருங் கற்படைப் பண்பாடு பரவல் பற்றி மேற்குறித்த நிலைப்பாடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகியுள்ளன. மேலும், பொருந்தல் சின்னங்கள் நன்கு வளர்ச்சியடைந்த குணங்களுடன் வெளிப்பட்டிருப்பதால், இன்றைய தமிழகப் பரப்பில் தொன்மையான அல்லது துவக்க நிலை பெருங் கற்படைச் சின்னங்கள் இன்னும் அறியப்படாத நிலையில்தான் உள்ளன என்ற கருத்துருவத்தை முன்னிறுத்தலாம். அதாவது, இதன் பின்ணணியில் மு.பொ.ஆ. 1500-க்கு முற்பட்ட சின்னங்கள் இந்நாள் வரை அறியப்படவில்லை எனலாம்.
கல்வட்டம் வகை - 2
இதன் ஊடே, இந்நாள் வரை அறியப்பட்ட செய்திகளைக் கொண்டு, இப்பெருங் கற்காலப் பண்பாட்டில் ஊன்றி கவனிக்க வேண்டிய இரு போக்குகளை முன்னிறுத்தவேண்டி உள்ளது. முதல் போக்கு, “மட்கல ஈமச்சின்னங்கள்” ஆகும். இது தாழி / பேழைப் பயன்பாடாக வெளிப்பட்டுள்ளது. இரண்டாவது போக்கு, “கற்படைச் சின்னங்கள்” ஆகும். இவ்விரண்டு போக்குகளுமே, பெருங் கற்காலப் பண்பாட்டில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளன. இப்போக்குகள் தொடர்பான ஆய்வுகள், தமிழகத்தில் பெருங் கற்காலப் பண்பாடு வட தமிழக மற்றும் தென் தமிழகம் என இரு கூறுகளாக சமகாலத்தில் நிகழ்ந்ததை அடையாளப்படுத்தியது. இது வெவ்வேறு பண்பாட்டின் வெளிப்பாடுகள் அல்ல; ஒரே பண்பாட்டின் இரு பக்கங்கள் என்பதையும் காட்டியுள்ளன. இதுவே, ஈமச்சின்னங்களுக்கான பொருட்களின் இயற்கை வளத்தின் அளிப்பு கொண்டே, இவ்விருப் போக்குகளும் தீர்மானமானது என்றும் நிரூபித்தது. அதாவது, கற்கள் மிகுதியாகக் கிடைக்கும் பகுதிகளான மலையும் மலை சார்ந்த பகுதிகளில் (குறிஞ்சி / முல்லைப் பகுதிகள்) கற்களின் பயன்பாடு கொண்ட கல்வட்டம், கல்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல் வகை ஈமச்சின்னங்கள் எழுப்பட்டன. அதே காலகட்டத்தில், கற்கள் அரிதாகக் கிடைக்கும் வயலும் வயல் சார்ந்த பகுதிகளில் (மருதம் / நெய்தல் பகுதிகள்) சுடுமண் மட்கலன்களால் ஆன தாழி / பேழைச் சின்னங்கள் பயன்பாட்டில் இருந்தன. இது ஒரு பொது அடையாளம்தான். உண்மையில், மலையும் மலை சார்ந்த பகுதிகளில் (குறிஞ்சி / முல்லைப் பகுதிகள்) கற்களின் பயன்பாடு மிகுதியாக இருந்தன என்றாலும், கல்வட்டம் போன்ற ஈமச்சின்னங்களில் தாழி / பேழைப் பயன்பாடும் கூடுதலாக இருந்துள்ளது. அதாவது, தாழி / பேழையினை மையமாகக் கொண்டு கல்வட்டங்கள் எழுப்பப்பெற்றுள்ளன. அதுபோன்றே, தாழிப் பண்பாட்டில் கற்களின் பயன்பாடு முற்றாக இல்லை என்று கூறமுடியாது. ஆதிச்சநல்லூர் தாழிக் காடுகளில், கற்களின் பயன்பாட்டை அறியமுடியாது உள்ளபோதும், பிற இடங்களில் சிறிதே தாழியின் மூடுகள், குறுகற்குவை மற்றும் தாழி கவிழாமல் இருக்க நிலமட்டத்துக்குக் கீழ் தாங்கிகள் போன்றவற்றுக்குக் கற்களின் பயன்பாடு இருந்துள்ளது.
கல்வட்டம் வகை - 3
இடுபொருட்களின் பொதுக்குணங்கள், தாழி / பேழைப் போன்ற மட்கலப்படைச் சின்னங்களும் கற்படைச் சின்னங்களும் ஒரு பொது சிந்தனையின் பாற்பட்டவை என்பதை உணர்த்துகின்றன. இடுபொருட்களின் பொது குணங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்.
கருப்பு - சிவப்பு மட்கலன்கள். (பெருங் கற்காலப் பண்பாட்டின் முக்கியக் கூறாகக் கருதப்படும் கருப்பு - சிவப்பு மட்கலன்கள், இப்பண்பாட்டுக்கு உரிய வாழிடப் பகுதியிலும், ஈமச்சின்னங்களிலும் காணப்படுகின்றன).
சிவப்பு நிற மட்கலத் தாங்கிகள்.
இரும்புப் பொருட்கள். பெரும்பான்மையாக வாள், குறுவாள் போன்ற ஆயுதங்கள்.
அணிமணிகள்.
இது, மற்றொரு பரிணாம வளர்ச்சியை நமக்கு அடையாளப்படுத்துகிறது. அது புதிய கற்காலப் பண்பாட்டில் இருந்து பெருங் கற்காலப் பண்பாடு வளர்ச்சி அடைந்தது என்பது.
தென்னிந்தியாவைப் பொறுத்த அளவில், புதிய கற்காலப் பண்பாட்டை மட்கலன்களின் பயன்பாடுக்கு முந்தைய காலகட்டம் மற்றும் மட்கலப் பயன்பாட்டுக் காலகட்டம் என இரு காலகட்டங்களாகப் பிரித்து அறிவர். மட்கலப் பயன்பாட்டுக் காலகட்டத்திலேயே மூத்தோரை தாழிகளில் இட்டுப் புதைத்த சான்றுகளை நாம் பெற்று வருகிறோம். எனில், தாழி என்ற மட்கலப் பயன்பாடு புதிய கற்காலத்தின் உற்பத்தி என்பதை அறியமுடிகிறது. புதிய கற்காலப் பண்பாட்டின் நீட்சியாகவே சுடுமண் மட்கலன்களான தாழி / பேழைப் பயன்பாடு பெருங் கற்காலத்திலும் தொடரப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
கல்திட்டை போன்ற கல்லறை
புதிய கற்காலப் பண்பாடு, பண்டைய தகடூர் நாட்டுப் பகுதிகளிகளில் மிகச் செழிப்பாக இருந்துள்ளதை பையம்பள்ளி மற்றும் மோதூர் அகழாய்வுகளும், வரட்டணப்பள்ளி, மலையூர்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கற்கால தொழிற்கூடங்களும் நிரூபிக்கின்றன.
பெருங் கற்படைச் சின்னங்கள்
பெரிய பெரிய கற்கள், சமயங்களில் 15 முதல் 20 டன்னுக்கும் மேற்பட்ட எடை கொண்ட கற்கள் இவ்வகைச் சின்னங்களுக்கு பயன்படுத்தப்பட்டமையால், இது ‘மெகாலிதிக் மானுமென்ட்ஸ்’ என்று குறிக்கப்படுகின்றன. இதன் தமிழ் மொழியாக்கமே “பெருங்கல் சின்னங்கள்” என்றும், இச்சின்னங்கள் ஈமச்சின்னங்கள் என்பதால் “பெருங் கற்படைச் சின்னங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன. புதிய கற்காலத்தை அடுத்து நிலவிய தனிக்குணங்கள் நிறைந்த பண்பாடாக இருப்பதுகொண்டு, இது பெருங்கல் பண்பாடு என்றும், பெருங் கற்படைப் பண்பாடு என்றும் குறிக்கப்படுகிறது. இப்பண்பாடு நிலவிய காலம், பெருங் கற்காலம் என்றும் பெருங் கற்படைக் காலம் என்றும் குறிக்கப்படுகின்றன. தென்னிந்தியாவைப் பொறுத்த அளவில், இப்பண்பாடு நிலவிய காலகட்டத்தில், இரும்பு உலோகத்தின் பயன்பாடு வெளிப்பட்டிருப்பதால், உலக வரலாற்று வழக்கப்படி, இக்காலப் பண்பாடு “இரும்புக் காலப் பண்பாடு” என்றும் அழைக்கப்படுகிறது.
கல்பதுக்கை
இந்தியாவைப் பொறுத்த அளவில், இப்பண்பாடு தென்னிந்தியாவில் மட்டும் காணப்படுவதாகும். நவீன ஆய்வுகள் மூலம் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும் பெருங் கற்படைப் பண்பாடு இருந்தமையை அறியமுடிகிறது. பொதுவாக, இப்பண்பாடு பொ.ஆ. 200 - 300 அளவில், அதாவது தென்னிந்தியாவில் சங்க காலம் முடிவுக்கு வந்தபொழுது இப்பண்பாடும் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.
உலக நிலை
பெருங் கற்காலப் பண்பாடு இந்தியாவில் மட்டும் காணப்பட்ட பண்பாடு அல்ல. இப்பண்பாடுக்கு உரிய ஈமச்சின்னங்கள் ஐரோப்பா, மேற்காசியா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இவ்வகைச் சின்னங்கள் முதலில் எங்கு தோன்றியது, எவ்வாறு பரவியது என்பது குறித்து முழுமையாக அறியமுடியாது உள்ளது. காலத்தால் பழைமை வாய்ந்த இவ்வினச் சின்னங்கள் ஐரோப்பாவில் காணப்படுகின்றன. பெரிய பெரிய கற்களின் உபயோகம் மட்டும்தான் இவற்றுக்கு இடையிடையான ஒற்றுமையாகும். இடுபொருட்களின் குணங்கள், இவற்றை உருவாக்கிய மக்கள், காலநிலை ஆகியவற்றில் இவை பலவகையிலும் வேற்றுமைகளையே கொண்டிருக்கின்றன.
தாழி
வகைகள்
தென்னிந்தியாவைப் பொறுத்த அளவில், மிகப்பெரும் கற்கள் கொண்டு எழுப்பப்பட்ட பிரம்மாண்டமான சின்னங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளன. இப்பண்பாட்டுக்கு உரிய ஈமச்சின்னங்களை முறையாக ஆய்விடுகையில், சிறிதும் பெரிதுமான எல்லா எடையளவும், பருமனும் கொண்ட கற்கள் இவ்வகைச் சின்னங்களை எழுப்பப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடியும்.
இவ்வாறு கற்கள் கொண்டு எழுப்பப்பட்ட சின்னங்களை 1. கல்வட்டம், 2. கல்திட்டை, 3. கல்பதுக்கை, 4. கல்பதுக்கை போன்ற கல் திட்டை என வகைப்படுத்திக் காண்பது தொல்லியலாளர்களின் போக்கு ஆகும். உண்மையில், இந்த நான்கு பொது வடிவங்களிலும் உருவ வேறுபாடுகள் கொண்ட பல வகையானச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பேழை
கல்வட்டம் என்ற பயன்பாடு வழக்குப்பட்டுவிட்டது. ஆனால், இச்சொல் வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட எல்லா உருவங்களுக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையான வட்டவடிவமான சின்னங்களில் காணப்படும் பலவகை வேறுபாடுகள், இவற்றுக்கு வேறு வேறு சுட்டுப் பெயர்களை வேண்டுகின்றன. குண்டுக்கல் வட்டம், பலகைக்கல் வட்டம், பரல்உயர் வட்டம் அல்லது கற்குவி கல்வட்டம், கற்குவை வட்டம், கல்உயரடுக்கு வட்டம் என்ற சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு கட்டுமானத் தொழில்நுட்பத்தில் எழுப்பப்பட்டவை ஆகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.