நடுகற்கள் பற்றிய ஆர்வமும் ஆய்வும் இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை கொண்டது. நடுகல் கல்வெட்டுகள் பற்றிய சிறு குறிப்புகள் Epigraphica Indica (1892 முதல்), Anunal Report on South Indian Epigraphy (1887 முதல்) Annual Report of Indian Epigraphy (1946 முதல்) ஆகிய வெளியீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வால்ஷ் (1937), வெயிட்ஹெட் (1976), வொஜல் (1931), ஹுல்ட்ஷ் (1934) மற்றும் ஆச்சாரிய (1924) ஆகியோரால் நடுகல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.*1 இருந்தாலும், முறையான ஆவணப்படுத்தும் சீரிய துவக்கமானது ஆர்.நாகசாமி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 1970-களில், வடஆர்க்காடு மற்றும் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் உட்பட்ட அன்றைய தருமபுரி மாவட்டங்களில் நடத்தப்பட்டதில் உள்ளது. நடுகற்கள் அதிகம் கவனம் பெற்றது, 1975-ல் தமிழகத் தொல்லியல் துறை நடத்திய நடுகல் கருத்தரங்கத்துக்குப் பிறகுதான். இக்காலக்கட்டத்துக்குப் பிறகு ‘தமிழ் வீரயுகம்’ பற்றிய ஆய்வுகளும், சிந்தனையும், சங்க இலக்கியத்தில் நடுகல் காட்சிகள் மீதான மறு ஆய்வுகளும் வலுப்பெற்றன.
நாட்டுப்புற ஆய்வுகள் வளர வளர, நடுகற்கள் கூடுதல் முக்கியத்துவம் உடைய தொல்லியல் சின்னங்களான விளங்கிவருகின்றன. தினம் தினம் புதிய நடுகல் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் செய்தித்தாள்கள், இதழ்கள், சமூக ஊடகங்கள் வழியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன. முறையான ஆவணப்படுத்துதல் இன்மையால், ஒன்று முன்பே அறியப்பட்டதா அல்லது புதியதான அறிதலா என்ற குழப்பமும், மயக்கமும் எல்லாத் தரப்பிலும் உருவாகி வருகிறது.
நடுகற்களை ஆவணப்படுத்துதல் எப்படி ஒரு கட்டாயத்தை உருவாக்கியுள்ளதோ, அதுபோலவே வகைகளையும் வகைப்பாட்டையும் முறைப்படுத்திக்கொள்வதும் அவசியமாகியுள்ளது. முறைப்படுத்தப்பட்ட வகையும் வகைப்பாடும்தான், ஆவணப்படுத்துதலின் முதல் படியென உணர்த்துகிறது.
நடுகல் சொல்
நேரடிப் பொருளில், நடுகல் என்ற சொல் ‘நடப்பட்ட கல்’ என்று பொருள் தருவது. இலக்கியப் பயன்பாட்டில், அது ‘நினைவுக்கல்’ என்ற பொருளில் பெரும்பான்மையாக ஆளப்படுவது. தொல்லியல் பயன்பாட்டில், அது துவக்கத்தில் வீரக்கல் என்ற பொருளில் ஆநிரைக் கவர்தல் அல்லது மீட்டல் செயலில் மாய்ந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட கல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, தற்போது பல்வேறு காரணங்களுக்காக இன்னுயிரை ஈந்த வீரமக்களுக்காக எடுக்கப்பட்ட கல் என்ற பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், நடுகல் என்பது ‘வீரக்கல்’ என்று பொருள் பட பயன்பாட்டில் வழக்குப்பட்டுள்ளது.
ஆனால், வீரக்கல் என்ற சொல்லுக்கு ‘வீரன் நினைவாக எழுப்பப்பட்ட கல்’ என்ற பொருள் கொள்ளாமல், ‘வீரத்தின் அடையாளமாக அமைக்கப்பட்ட கல்’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் உண்டு.*2
நினைவுச்சின்ன வகைகளில் ஒன்று நடுகல்
தொல்பொருள்களின் வகைப்பாட்டில், நடுகல் என்பது ‘மூத்தோர் நினைவுச் சின்ன’ வகைகளில் ஒன்று. மூத்தோர் நினைவுச் சின்னங்கள் ‘ஈமச்சின்னங்கள்’ என்றும் குறிக்கப்பெறுகின்றன.
நினைவுச் சின்னங்கள்
சமூகத்தின் முன் எந்த ஒரு செயலையும் நினைவில் இருத்திவைக்க மனிதன் அவ்வப்போது அமைக்கும் சின்னமே நினைவுச் சின்னம் என்று குறிக்கப்படுகிறது. அறுதியிடமுடியாத காலப்பழமை கொண்ட நினைவுச் சின்னங்கள் அமைக்கும் சமூகப் பழக்கம், பிற்காலச் சந்ததியருக்கு இவ்வாறு நிறுவப்படும் சின்னங்கள் குறியீடாக அமைந்துப் பொருள் தந்து வருவதால், அவை தனி அடையாளமாகப் பரிணாமம் பெற்று விளங்குகின்றன.
நினைவுச் சின்னங்களின் வகைகள்
நினைவுச் சின்னங்களை அவை நிறுவப்பட்ட நோக்கம் கொண்டு,
1. மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள்
2. வளமை அல்லது சடங்கு சின்னங்கள்
3. பிறவகைச் சின்னங்கள்
என மூன்று முக்கிய வகைகளாகப் பகுத்துப் பார்க்கலாம்.*3
1. மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள்
இறந்த தம் முன்னோர்களின் நினைவைப் போற்றும் பண்பாட்டின் வெளிப்பாடே மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள் ஆகும். மாந்தரினப் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலநிலைகளில் பல்வேறு வகையான வெளிப்பாட்டை மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள் கொண்டிருந்தமையை அறியமுடிகிறது.
ஈமச் சின்னங்களில் இன்றளவு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு, கீழ்கண்ட நான்கு வகைகளாகப் பிரித்து அறிய முடிகிறது. அவை –
1. கற்சின்னங்கள்
2. கட்டடச் சின்னங்கள்
3. நினைவுத் தூண்கள்
4. நடுகற்கள்
வளமை அல்லது சடங்குச் சின்னங்களில் இன்றளவு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு கீழ்க்கண்ட மூன்று வகைகளாகப் பிரித்து அறிய முடிகிறது. அவை –
1. சன்னியாசிக் கல் மற்றும் அதன் மாற்று வடிவங்கள்
2. நாகர் கல்
3. புதிர் பாதைகள்.*4
பிறவகைச் சின்னங்களில் இன்றளவு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு கீழ்க்கண்ட ஐந்து வகைகளாகப் பிரித்து அறிய முடிகிறது. அவை –
1. வெற்றிச் சின்னங்கள்
2. வேள்விச் சின்னங்கள்
3. எல்லைச் சின்னங்கள்
4. முத்திரைச் சின்னங்கள்
5. பெருவழிச் சின்னங்கள்
ஈமச் சின்னங்கள் குறித்து ஆயும் முன், பிறவகை நினைவுச் சின்னங்கள் குறித்து அறிமுகம் கொள்வது ஈமச் சின்னங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள உதவுகிறது.
வளமைச் சின்னங்கள்
வளமைச் சின்னங்கள், பயன்பாட்டு அளவில் சடங்குகள் நிகழ்த்தப் பயன்படுபவை. அதன் காரணமாக அவை சடங்குச் சின்னங்கள் என்றும் அழைக்கப்பெறும்.
1. சன்னியாசிக் கல் மற்றும் அதன் மாற்று வடிவங்கள்
நடுகற்கள் முதன்மையாக மேய்த்தல் சமூகத்தோடு தொடர்புடையதாகக் கருதப்படுவது போலவே, ‘சன்னியாசிக் கல்’ மற்றும் அதன் மாற்று வடிவங்கள், முற்றாக மேய்த்தல் சமூகத்தோடு அவர்களின் கால்நடைகளின் வளமையோடு தொடர்புடையதாகும். இது குறிஞ்சி - முல்லை நிலப் பண்பாடு வளர்த்தெடுத்த வளமைச் சின்னங்களில் ஒன்றாக விளங்குவதாகும். நடுகற்கள் போலவே இவை தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில், அதாவது பண்டைய தகடூர் நாட்டின் பகுதிகளில் மிகுதியாகக் காணக் கிடைக்கின்றன. சன்னியாசிக்கல் அப்பெயர் பெற்றதற்கான காரணத்தை அறியமுடியவில்லை. இது ‘மந்தைக்கல், ‘சிலைக்கல்’, ‘மந்திரக்கல்’, “கோவுக்கல்’, ‘ஜகனி’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.*5 இவை சன்னியாசிக்கல்லின் மாற்று வடிவங்களா அல்லது வளமைச் சின்ன கற்களின் வேறுவேறு பொருள் தரும் வடிவங்களா என்று மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.
ஏனெனில், கள ஆய்வில் கோவுக்கல் பெயரில் அமைக்கப்பட்ட கற்கள் ‘கோயில் மாடு’ இறந்த பிறகு அதனைப் புதைத்த இடத்தில் நடப்படும் கல் என்பதை அறிய முடிகிறது. கோவுக்கற்கள், கோயிலின் உட்புறங்களிலும், ஊர்மண்டுகளில், ஊர்ப் பாதைகளின் முற்றங்களிலும் நடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இது வணக்கப்படும் கல்லாக இருந்தாலும், சடங்குகளில் இதன் பங்களிப்பை அறியமுடியவில்லை. சன்னியாசிக்கற்கள், கோயிலின் புறங்களிலும் ஊர் மண்டு, மந்தைவெளி, ஊர்ப்பொது வழிகளின் ஓரத்தில், ஊர்களின் நுழைவாயில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சடங்குகளில், சன்னியாசிக்கற்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
கோவுக்கல் – கல்வெட்டுடன் & வழிபடும் நிலை
சன்னியாசிக் கல் அமைப்பு
சன்னியாசிக்கல் என்பது பொதுவில் இரண்டு நடப்பெற்ற கற்களைக் கொண்டது. இவை வடக்குத் தெற்கு அல்லது கிழக்கு மேற்கு திசைகளில் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக நடப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் இரண்டு மீட்டர் முதல் நான்கு மீட்டர் வரை இடைவெளி உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கற்களுக்கு இடையே சுமார் ஒரு அடி அகலத்தில் வாய்க்கால் அமைப்பு ஒன்று வெட்டப்பட்டிருக்கும். இது தேவையின் பொருட்டு வெட்டப்படும் அமைப்பாகும். சில இடங்களில் இந்த வாய்க்கால் அமைப்பு நிரந்தர அமைப்பாக கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அமைப்பைக் காணமுடிகிறது.*6
கல்கூடப்பட்டி சன்னியாசிக்கல்
இரு கற்களில் ஒருகல் சற்று உயரம் கூடியதாக இருக்கும். உயரம் கூடிய கல்லில் குறியீடுகளும், தெளிவற்ற சொற்களாகப் படிக்க முடியாத உதிரியான எழுத்துகள், பெரும்பாலும் வட்டெழுத்து வடிவத்தில் தெளிவாக அறியமுடிகின்ற ‘ம’, ‘ய’ எழுத்துகளுடன், மேலும் மூன்று தனித்தனி எழுத்துகள் மாறிமாறியும் வரிசை மற்றும் திசை ஒழுங்கற்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை மந்திர எழுத்துகள் என்று குறிப்பிடுகின்றனர். இவற்றுடன் சதுர கட்டங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கட்டங்களுக்கு மேல் மனித வடிவம் ஒன்று நின்ற நிலையில் அல்லது முகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. இக்கட்டங்கள், 18 முதல் 108 கட்டங்கள் வரை இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
மோதூர் சன்னியாசிக்கல்லில் எழுத்துக்கள் இடம் பெறவில்லை. ஆனால், மனித வடிவமும், சில கோலங்களும் கீறலாக வடிக்கப்பட்டுள்ளன.
மோதூர் - சன்னியாசிக்கல் முன்புறத் தோற்றம்
மோதூர் - சன்னியாசிக்கல் பின்புறத் தோற்றம்
வேறு சில இடங்களில் செப்புத் தகடுகளில் மந்திரங்கள் எழுதப்படுவதுபோல் கல்லில் வெட்டப்பட்டுள்ளதையும் அறியமுடிகிறது.*7
மந்திரக்கல்
சன்னியாசிக்கல் வளமைச் சடங்கு
பொதுவில், தமிழர் திருநாளான மாட்டுப்பொங்கல் அன்று ‘சன்னியாசிக்கல் வளமைச் சடங்கு விழா’ எடுக்கப்படுகிறது. விழா நாளன்று சன்னியாசிக்கற்களும், இடையிலுள்ள வாய்க்கால் பகுதியும் சுத்தம் செய்யப்படுகின்றன. மஞ்சள், குங்குமம் பொன்ற மங்கலப் பொருட்களைக் கொண்டு தொடக்க பூசை செய்யப்படுகிறது. தொடக்கப் பூசைக்குப் பிறகு 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் குடங்களில் தண்ணீர் எடுத்துவரப்பட்டு மந்திர எழுத்துப் பொறிப்புள்ள கல் மீது ஊற்றிப் பூசை செய்கின்றனர். இப்பூசையின்போதும் மஞ்சள், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஊற்றப்படும் நீர், இரு கற்களுக்கும் இடையே வெட்டப்பட்ட வாய்க்காலில் நிறைந்து நிற்கிறது. பிறகு சன்னியாசிக் கல்லுக்கு ஆடு பலியிடப்பட்டு, பலியிடப்பட்ட ஆட்டின் தலையை வாய்க்காலில் புதைத்து, வாய்க்காலை மூடிவிடுகின்றனர். சில இடங்களில் வாய்க்கால் அமைப்புடன் அறை போன்று பள்ளம் தோண்டப்பட்டு மேற்சொன்ன வழிபாட்டுச் சடங்கை நிகழ்த்துகின்றனர். சில இடங்களில் ஆடு, கோழி, பன்றி என மூன்று உயிர்கள் பலி தரப்பட்டும் இந்த வளமைச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இது முப்பூசை என்று அழைக்கப்படுகிறது.
பின்னர், ஊரில் உள்ள எல்லாக் கால்நடைகளையும் அலங்கரித்து அழைத்து வந்து, பூசை செய்து மூடப்பட்ட கால்வாய் மீது இரு கற்களுக்கு இடையில் ஓடவிடுவர். இந்த வளமைச் சடங்கின் மூலம் கால்நடைகளுக்கு வருகின்ற நோய் தீரும் என்ற நம்பிக்கையும், கால்நடைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.*8
சடங்குகளில் உயிர்ப்பலி
வளமைச் சடங்குகளில் உயிர்ப் பலி இடம்பெறுவது பழங்குடி வழிபாட்டின் நம்பிக்கை சார்ந்து நிகழ்த்தப்படுவதாகும். பழங்குடி வழிபாட்டின் நம்பிக்கைகளை சுமந்துவரும் எல்லாச் சமூகங்களிலும் இது மேற்கொள்ளப்படுவதாகும். “பலியிடப்படும் மிருகத்தின் ரத்தம் நான்குபுறமும் இறைப்பதன் நோக்கம் அவ்வுயிரினம் மேலும் பெருக வேண்டும் என்பதாகும்”*9 “ஆட்டு ரத்தத்தினை ஆகுதியாக இறைத்தால் ஆட்டு வளம் பெருகும் என்று நம்புகின்றனர். அதேபோல் ‘கொழுப்பாவெறிந்து குருதிப் பலி’ கொடுத்தால் மாட்டு மந்தை பெருகும் என்று நம்பினர். வேத வேள்வி (யக்ஞம்) கூட இந்த அடிப்படையில் செயப்படுவதாகும்.”*10
சன்னியாசிக்கல் வளமைச் சடங்கில் முப்பூசையில் பலியிடப்படும் உயிர்களின் நேக்கமும் இப்பழங்குடி மனத்தின் மரபுவழிப்பட்ட நம்பிக்கை சார்ந்ததாகும். இங்கு ரத்தம் நாற்புறமும் இறைக்கப்படுவதற்குப் பதிலாக வாய்க்கால் அல்லது தொட்டியில் இருக்கும்படி செய்யப்படுகிறது. அதன் மீது வளர்ப்பு மிருகங்கள் ஓடவிடப்படுவதன் மூலம் இறைக்கப்படுவதன் நோக்கம் நவீன வடிவம் பெற்றுள்ளது. மஞ்சள், குங்குமம், எண்ணிக்கை கொண்ட குட நீர் கல் மீது ஊற்றுதல் முதலியன இங்கு இடம் பெறுவதும் வழிபாடு நவீன வடிவம் பெறுவதன் பார்ப்பட்டதே.
பாறை ஓவிய வளமைச் சின்ன வழிபாடு
இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘பெரிய கோட்டப்பள்ளி’ என்ற இடத்தில் உள்ள பெருங் கற்காலத்தைச் சார்ந்தக் கருதப்படும் பாறை ஓவியம், இவ்வகை வளமைச் சடங்குக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கருத முடிகிறது.
பெரிய கோட்டப்பள்ளி - பாறை எழுத்தோவியம்
இப்பாறை ஓவியத்தில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மற்றும் பிற்கால கீறல் குறியீடுகள் சில, ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று எதிரும் புதிருமாகவும், நேர்க்கோடு அற்ற முறையிலும் தீட்டப்பட்டுள்ளன. இது சன்னியாசிக்கல்லின் பொறிக்கப்படும் எழுத்துகளின் வெளிப்பாட்டுக் குணத்தை ஒத்ததாகக் கருதமுடிகிறது. பெரிய கோட்டப்பட்டி எழுத்தோவியம் இடம்பெற்ற பாறையைச் சுற்றி வலம் வரும்படியான சுற்றுப்பாதை இருந்திருக்க வாய்ப்புண்டு. பாதைத்தடம் இன்று சுவடற்று இருந்தாலும், பாறையைச் சுற்றிய பகுதி சமதளமாக இருப்பதைக் கொண்டு இவ்வாறு ஊகிக்க முடிகிறது.
பெருங் கற்காலப் பண்பாடு மேய்தல் சமூகத்தினரோடு நெருங்கிய தொடர்புடையது. இப்பெருங் கற்கால பாறை ஓவியம் மேற்கண்ட காரணத்தினால் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாடு, சடங்கு நிகழ்த்தப்பட்ட இடங்களில் ஒன்றாக விளங்குவதாகிறது.
நாகர் கல்
நாகர் வழிபாடு கிரேக்கம், எகிப்து உட்பட உலகின் பண்டைய நாகரிகங்கள் முதல் இந்தியாவில் தற்காலம் வரை மிக்க செல்வாக்குப் பெற்றுள்ள வளமை வழிபாட்டுச் சின்னமாகும். நாக வழிபாடு, திணை வேறுபாடுகள் இல்லாமல், ஐந்து திணை நில மக்களாலும் வளமை குறித்து குறிப்பாக சந்ததிப் பெருக்கம் நோக்கமாக மேற்கொள்ளப்படுவதாகும். இவ்வழிபாடு குறித்து விரிவான ஆய்வுகள் பல அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
***
சான்றெண் விளக்கம்
1 . Rajan.K, South Indian Memorial Stones, Manoo Pathippagam, Thanjavur, (2000), p.1.
2. கேசவராஜ். வெ, தென்னிந்திய நடுகற்கள், காவ்யா, சென்னை, 2006, ப,33.
3. பார்த்திபன்.த, ‘தொன்மைத் தடயங்கள் ஓர் அறிமுகம் - தொகுதி-1’, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம் வெளியீடு, ஓசூர், (2010), ப.108.
4. பார்த்திபன்.த, ‘தொன்மைத் தடயங்கள் ஓர் அறிமுகம் - தொகுதி-1’, நூலில் இப்பகுப்பில் முதல் வகை சின்னத்தை மட்டும் வகைப்படுத்தியிருந்தேன். அதனை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து இங்கு விரிவுபடுத்தியுள்ளேன்.
5. Rajan.K, South Indian Memorial Stones, op.cit., p.135.
6. Ibid., pp. 136-137.
7. த.பார்த்திபன். ‘தகடூர்ப் பகுதி நாட்டுப்புற வளமைச் சின்னங்கள்’, கையெழுத்துப் பிரதி, ப.47.
8. பார்த்திபன்.த, ‘தொன்மைத் தடயங்கள் ஓர் அறிமுகம் - தொகுதி-1’, மு.கு.படி., பக்.113-114. தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் இவ்வழிபாட்டின் பல்வேறு வடிவங்களை, Rajan.K, South Indian Memorial Stones, op.cit., pp.135-137 மற்றும் தி.சுப்ரமணியன். தமிழகத் தொல்லியலும் வரலாறும் (தகடூர் பகுதி), நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்., சென்னை நூலிலும் காண்க.
9. Singaravelu.S, Social Life of Tamils - The Classical Period, இரா.பூங்குன்றன், தொல்குடி-வேளிர்-அரசியல், நூலில் மேற்கோளில் இருந்து, புதுமலர் பதிப்பகம், கோவை, 2001, ப.16
10. Debiprasad Chattopadhyaya, Lokayata: A Study in Ancient Indian Materialism, இரா.பூங்குன்றன், மே.கு.படி.
(நடுகற்களின் வகைகளும் வகைப்பாடுகளின் அடுத்த அத்தியாயத்தில் புதிர்பாதை வளமைச் சின்னம் இடம் பெறும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.