காதல் என்பது பொதுவுடமை. ஆம், அதற்கு எந்த வரையறையும் இல்லை. அதற்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும். அதனால்தான் என்னவோ காதலுக்கு கண் இல்லை என்கிறார்கள். இது புறம் சார்ந்த காரணிகளுக்காக மட்டுமல்ல; ஆண் - பெண் இடையே காதல் மலர்வதைப் போல, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் காதல் மலரும் என்பதற்காகத்தான். இதனை நவீன சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
அக்காலத்திலும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களிடையே ஈர்ப்பு ஏற்பட்டதுண்டு. ஆனால் அது பொதுவெளியில் முன்வைக்கப்படவில்லை. முன்வைக்க விடவில்லை. அப்போது இருந்த சூழல் அப்படி. ஆனால் இன்றைய நவீன சமூகம் இதனை விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிந்து வருகிறது. சட்ட அங்கீகாரமும் கிடைத்து ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளதால், தன்பாலின மற்றும் திருநர் சமூகத்தின் காதல் மெல்ல மெல்ல சபையேறி வருகிறது. அங்கீகாரமும் பெறுகிறது.
இது ஆக்கப்பூர்வமான நகர்வைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதுதான் ஆரோக்கியமான செய்தி.
இவ்வாறு அங்கீகாரம் பெற்ற - திருநர் அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சில காதல் கதைகளும் உண்டு. அவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன்மூலம் இவர்களின் காதல் தவறானது என்ற பிம்பம் உடைந்து சமநிலை மனநிலை உருவாகக்கூடும்.
[திருநங்கை - ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். திருநம்பி - பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரையும் பொதுவாக திருநர் சமூகம் எனக் குறிப்பிடலாம்]
இனி எந்தவொரு திருநர் கதையைக் கேட்டாலும் கேரளத்தின் சாஹத், சியா பாவெல் கதையைத்தான் முதன்மையாகச் சொல்ல வேண்டும். ஏனெனில் திருநர் சமூகத்தில் முதல்முறையாக குழந்தையைப் பெற்றெடுத்து நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள். இது ஒருபுறம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தாலும், திருநர் சமூகத்தின் மீது மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
ஆண் - பெண் குழந்தை பெற்று இயல்பாக குடும்ப வாழ்க்கையை நடத்துவதைப் போன்று, திருநர் சமூகத்தாலும் குழந்தை பெற்று இயல்பான வாழ்க்கையில் இன்பம் காண இயலும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சாஹத் (25) மற்றும் சியா பாவல் (23) ஆரோக்கியமான ஆண் குழந்தைக்குப் பெற்றோராகியுள்ளனர்.
இதில் சாஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். சியா பாவெல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இருவருமே தங்கள் பாலின மாற்றத்தை உணர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். சிகிச்சையின்போது இவர்களிடையே காதல் மலர்ந்தது.
இதில் சாஹத் கணக்காளராகப் பணிபுரிந்து வருபவர். சியா பாவல் தொழில்முறை நடனக் கலைஞர். இருவருமே தங்கள் துறைகளில் முன்னேறத் துடித்தாலும், மற்றவர்களைப் போன்று குடும்ப அமைப்போடு குழந்தையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே இருந்துள்ளது.
சட்ட சிக்கல்கள் இருந்தாலும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எழாமல் இல்லை. இதற்கு மத்தியில் ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், சாஹத் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர் எனக் கூறியதுதான் குழந்தையைத் தத்தெடுப்பதற்கு பதிலாக, சொந்த ரத்தத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை அவர்களுக்குக் கொடுத்தது. மூன்று ஆண்டுகளாக காதலித்துவரும் இவர்கள், நீண்ட நாள்கள் ஆலோசித்தே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
சாஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர் என்பதாலும் அதற்கான பகுதியளவு சிகிச்சையில் இருப்பதாலும் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், சியா பாவல் விந்தணுக்கள் செலுத்தப்பட்டு சாஹத் கருவுற்றார். அப்போது அவருக்கு வயது 23.
ஆனால், சாஹத் ஆணாக மாறும் சிகிச்சையில் தனது மார்புகளை அகற்றியிருந்தார். கருவுற்றதால், ஆணாக மாறும் ஹார்மோன் சிகிச்சையை மருத்துவர் அறிவுரைப்படி தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தார். சியா பாவலும் பெண்ணாக மாறும் சிச்சையில் பாதியளவு கடந்திருந்தார். குழந்தை பெறும் வரை இருவருமே தங்கள் ஹார்மோன் சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்து, பின்னர் தொடர்ந்தனர்.
கருவுற்றிருந்த 8வது மாதத்தில் சாஹத்தும் சியாவும் பேறுகால போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்து திருநர் (மூன்றாம் பாலின) சமூகத்துக்கு புது நம்பிக்கையை அளித்தது.
இந்த நம்பிக்கையின் விளைவாக, 2023 பிப்ரவரி 9ஆம் தேதி சாஹத் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தாலும் தாயும் - சேயும் ஆரோக்கியமாக இருந்தனர். சாஹத் தனது மார்புகளை அகற்றிவிட்டதாலும், சியா பாவல் பகுதியளவு சிகிச்சையில் இருந்ததாலும், தாய்ப்பால் வங்கியில் இருந்து அக்குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டது.
இதன்மூலம் மூன்றாம் பாலினத்தவருக்குப் பிறந்த குழந்தை என்ற பெருமையைப் பெற்றது அக்குழந்தை. இதேபோன்று குழந்தை பெற்றெடுத்த முதல் மூன்றாம் பாலின பெற்றோரானார்கள் சாஹத்தும் சியா பாவலும். இது மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வில் புது நம்பிக்கையைக் கொடுத்தது. நாடு முழுவதிலுமிருந்த திருநர் சமூகத்தினர் அக்குழந்தையையும், திருநர் தம்பதியையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.
பெண் கருவுற வேண்டும். ஆண் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இயற்கை. இப்படித்தான் இதுவரை நாம் புரிந்துவைத்திருந்தோம். ஆனால், இயற்கை பல அதிசயங்களை உள்ளடக்கியது. அந்த அதியத்தில் ஒன்றுதான் இன்று திருநர்கள் தம்பதிகளாகி, தந்தை ஒருவர் தாயாகி இருப்பதும். இதுவும் இயற்கையே.
குழந்தையின் பாலினம் என்ன?
இந்த பிப்ரவரியுடன், சாஹத் - சியா பாவல் தம்பதிக்கு குழந்தை பிறந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், குழந்தை பிறந்த சமயத்தில் குழந்தை என்ன பாலினம் என்பதை இருவருமே பொதுவெளியில் சொல்லவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் தனித்துவமானது. ''குழந்தை இந்த பாலினம் என நாங்களோ மற்றவர்களோ எப்படிக் கூற முடியும். தான் என்ன பாலினம் என்பதை குழந்தைதான் முடிவு செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தக் கூற்று சராசரி சமூகத்தில் இருந்து பார்க்கும்போது அர்த்தமற்றதாகத்தான் இருக்கும். ஆனால், தங்களுக்குள் பாலின மாற்றம் நிகழ்ந்து அதனை பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் கூற அச்சப்பட்டு, கூறி அவமானப்பட்டு நின்றவர்கள் பார்வையில் ஆழ்ந்த அர்த்தமுடையதாக இருக்கும்.
இவர்கள் தங்கள் குழந்தைக்கு சாபியா சாஹத் எனப் பெயரிட்டுள்ளனர். அழகான பெண் குழந்தையை திருநர் பெற்றோர்களான இருவரும் வளர்த்து வருகின்றனர்.
திருநர் - திருநம்பி என்ற அடைமொழிக்குள் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் சுருங்கிவிடாமல், குழந்தை பெற்று சமூகத்தில் சராசரி குடும்ப வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற சாஹத் - சியா பாவலின் கனவு நனவாகியுள்ளது.
குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தாய் பெயர், தந்தை பெயர் எனக் குறிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, அதற்காக கோழிக்கோடு மாநகராட்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடிக்கொண்டு இருந்தாலும்... எத்தனையோ சிக்கல்களைக் கடந்து வந்த இவர்களுக்கு இது மற்றுமொரு சவால் அவ்வளவுதான்
தங்கள் கனவு நனவானதை எண்ணி, ஒட்டுமொத்த நாட்டில் உள்ள திருநங்கை, திருநம்பிகளுக்கு நம்பிக்கையளிப்பவர்களாக இருப்பதை எண்ணி தங்கள் நாள்களை மகிழ்வோடு வாழ்ந்து வருகின்றனர் நாட்டின் முதல் திருநர் பெற்றோர்.
புதிய நம்பிக்கை!
ஓர் ஆண் ஆணுடனோ, பெண் பெண்ணுடனோ பாலுறவு கொண்டால் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறையுடன் அபராதமும் செலுத்த வேண்டும் என்ற சட்டப்பிரிவு 377-ஐ கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீக்கியது.
இதேபோன்று மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதில் திருநர் சமூகத்துக்கான உரிமைகள், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் நடைமுறையில் சாஹத் - சியா பாவல் போன்ற திருநர் தம்பதிகள் வாழ்வதைப் பார்க்கும்போது, அந்த சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கூடுதல் நம்பிக்கை பிறக்கிறது என்பது உண்மைதான்.
இந்த உண்மை இதுபோன்று பல திருநர் திருமணங்களுக்கு வழிவகுத்துள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த திருநம்பி மனு கார்த்திகா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருநங்கை சியாமளா எஸ். பிரபாவை பெற்றோர் சம்பதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதில் மனு கார்த்திகா தொழில்நுட்பத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ளார். சியாமளா, கேரள சமூக நலத்துறை திருநங்கைகள் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பாட்டாளராகவும் உள்ளார். ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவுடன் பிஎச்டி படித்து வருகிறார்.
2017ஆம் ஆண்டு இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. பெற்றோர் சம்மதத்துக்காக 4 ஆண்டுகள் காத்திருந்து 2022-ல் காதலர் தினத்தன்று இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
பாலக்காடு மாவட்டம் எலவங்காடு பகுதியைச் சேர்ந்த திருநம்பி பிரவீன்நாத், மலப்புரம் மாவட்டம் கோட்டைக்கல் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரிஷானாவை பெற்றோர் சம்மதத்துடன் ஹிந்து முறைப்படி திருமணம் செய்தார்.
இதில் பிரவீன்நாத் மிஸ்டர் திரிச்சூர் பட்டம் வென்றவர். தனியார் நிறுவனத்தின் பணிபுரிந்துவருகிறார். ரிஷானா மாடலிங் துறையில் உள்ளார். மிஸ் மலபார் பட்டம் வென்றவர்.
தங்கள் பிள்ளை திருநங்கை/திருநம்பி என்று சொல்வதற்கே அவமானப்பட்டு, அதனால் திருநர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் மாறி, அவர்களை குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குள் காதல் மலர்வதோடு மட்டுமல்லாமல், அதனை பெற்றோர் சம்மதத்துடனோ அல்லது முறைப்படி பதிவு அலுவலகத்திலோ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை திருநர் சமூகத்தில் எழுந்துள்ளதும் ஒரு புரட்சியே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.