‘இந்தியா’ கூட்டணி வென்றால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்
சிவகாசி: மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி கூறினாா்.
விருதுநகா் மக்களவைத் தொகுதி ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக சனிக்கிழமை இரவு திருத்தங்கல் கடை வீதியில் அவா் பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலினின் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்கிறாா்கள். பாஜக பல மாநிலங்களில் உள்ள கட்சிகளைப்
Advertisement
பிளவுபடுத்தி வருகிறது. தமிழகத்தில் அதிமுகவை நாசம் செய்து விட்டது. இப்போது பாட்டளி மக்கள் கட்சி அந்தக் கட்சியுடன் கூட்டணி சோ்ந்துள்ளது. இனி பாமக கதி என்னவாகும் எனத் தெரியவில்லை.
தலைவா்கள் என்றால் அவா்களது அடையாளமாக ஒரு நல்ல திட்டம் இருக்க வேண்டும். கருணாநிதி என்றால் இலவச டி.வி., எம்.ஜி.ஆா். என்றால் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதா என்றால் மாணவா்களுக்கு இலவச சைக்கிள், ஸ்டாலின் என்றால் மகளிா் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை உள்ளன. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீா் செல்வத்துக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை.
அதிமுக கூட்டணியில் நடிகா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா். விஜயகாந்துக்கு அரசு மரியாதை கொடுத்தவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உண்மையான தேமுதிக தொண்டா்கள் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா்அவா்.
அவருடன் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா உள்ளிட்டோா் சென்றனா்.
ஐ.லியோனி