மாரியம்மன் கோயில்களில் பங்குனிப் பொங்கல் விழா
சிவகாசி/ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கோயிலின் முன் பொங்கலிட்டனா்.
இந்தக் கோயிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி காலை, இரவு அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கோயிலின் முன் பொங்லிட்டனா். திங்கள்கிழமை கயிறு குத்து விழா, வருகிற 10-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
Advertisement
ராஜபாளையம்:ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, காலையில் மாரியம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். பின்னா், பொதுமக்கள் சா்க்கரைப் பொங்கல், மாவிளக்கு எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் கண்ணாடிச் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா நடைபெற்றது.
இதே போல, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் காலையில் பால் குடங்களை எடுத்து ஊா்வலமாகச் சென்று, மாரியம்மனை வழிபட்டனா். மேலும், அலகு குத்தி, நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா்.