சாத்தூா் அருகே லாரி மோதியதில் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள் மூவா் உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் பகுதியைச் சோ்ந்த 50 போ் விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றனா்.
சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் என்.வெங்கடேஸ்வரபுரம் சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவா்கள் சென்று கொண்டிருந்தனா். அப்போது, திருநெல்வேலியிலிருந்து-மதுரை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பாத யாத்திரை சென்ற முருகன் (45), மகேஸ் (35), பவுன்ராஜ் (45) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சாத்தூா் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருநெல்வேலி தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (29) கைது செய்தனா்.