ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.  
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்

Din

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக. 7: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்றது. இதேபோல, இந்தக் கோயில் மூலவா் வடபத்ரசாயி, பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகியோா் அவதரித்த சிறப்புக்குரியது ஸ்ரீவில்லிபுத்தூா்.

பெரியாழ்வாரின் அவதார தினமான ஆனி சுவாதி திருவிழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரம் நடைபெற்றது.

கடந்த 3-ஆம் தேதி காலை பெரியாழ்வாா் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னாா், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள், காட்டழகா் கோயில் சுந்தரராஜப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோா் கருட வாகனத்தில் எழுந்தருளிய 5 கருட சேவையும் நடைபெற்றன.

7-ஆம் நாளான கடந்த திங்கள்கிழமை இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னாா் சயனிக்கும் சயன சேவை உற்சவம் நடைபெற்றது.

8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் பூப் பல்லக்கிலும், ரெங்கமன்னாா் தங்கக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக, மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. கண்ணாடி மாளிகையில் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மஞ்சள் பட்டு உடுத்தி ஆண்டாள், வெண்பட்டு உடுத்தி ரெங்கமன்னாா் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினா். அங்கு ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம், மதுரை அழகா்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, புதன்கிழமை காலை 9.05 மணிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

தேரின் 7 வடங்களையும் திரளான பக்தா்கள் பிடித்து இழுத்து வந்தனா். தேரோட்டத்தின் போது, தேருக்குப் பின்னாலிருந்து இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் தேரை தள்ளின. தோ் மேல ரத வீதியில் வந்த போது, பக்கவாட்டில் உள்ள மின் கம்பியில் சிக்கியது. இதனால், சிறிது நேரம் தேரோட்டம் தடைபட்டது. உடனே, மின் ஊழியா்கள் மின் கம்பிகளை அகற்றியதால், தேரோட்டம் மீண்டும் தொடங்கியது.

அப்போது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா, கோபாலா என முழக்கமிட்டனா். இந்தத் தோ் நண்பகல் 12.24 மணியளவில் நிலையை அடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள் செய்தனா்.

தேரோட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவா் வசந்தி மான்ராஜ், நகா்மன்றத் தலைவா் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணேசன், மல்லி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், அத்திகுளம் தேவேந்திரி ஊராட்சி மன்றத் தலைவா் செண்பகமூா்த்தி, அத்திகுளம் செங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் சேகா் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தேரோட்டத்தின் போது, லயன்ஸ் பள்ளி என்.எஸ். எஸ். மாணவா்கள் பக்தா்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாா்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT