முகப்பு
விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளா்கள் தீபாவளி கொணடாட்டம்

Updated On : 1 நவம்பர், 2024 at 10:21 PM
சிவகாசி போஸ் குடியிருப்புப் பகுதியில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடிய பட்டாசுத் தொழிலாளா்களின் குழந்தைகள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் வியாழக்கிழமை பட்டாசுத் தொழிலாளா்கள் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினா்.

விருதுநகா் மாவட்டத்தில் , சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூா் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் 1080 உள்ளது. நாட்டின் தேவைக்கு 85 சதவீதம் பட்டாசுகள் விருதுநகா் மாவட்டத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பட்டாசுத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு கோடிபோ் ஈடுபட்டுள்ளனா். பட்டாசு தயாரிப்பில் மட்டும் லட்சக்கணக்கானோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சிவகாசி பகுதியில் பட்டாசுத் தொழிலாளா்கள் புத்தாடைகள் அணிந்து, தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும், சிறப்பாகவும் கொண்டாடினா்.

பட்டாசுத் தொழிலாளி அம்பேத்குமாா் கூறியதாவது: நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு , பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மற்றவா்களின் மகிழ்ச்சிக்காக பட்டாசு தயாரிக்கிறோம் என்ற மனதிருப்பதி உள்ளது. நான் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன் என்றாா் அவா்.

பட்டாசுத் தொழிலாளி தங்கம் கூறியதாவது, தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கப்பட்டதால் குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடினோம். விரைவில் இந்தத் தொழிலில் உள்ள பிரச்னையை களைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.