ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மாா்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உத்ஸவம் சனிக்கிழமை மாலை பச்சை பரப்புதல் வைபவத்துடன் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் வேதபிரான் பட்டா் பெரியாழ்வாா் இல்லத்தில் எழுந்தருளினாா். பெரியாழ்வாரின் 225-ஆவது வம்சாவளி வேதபிரான் பட்டா் சுதா்சன் ஆண்டாள், ரெங்கமன்னாரை வரவேற்று பழங்கள், பலகாரங்கள் படைத்து வழிபாடு நடத்தினாா்.
பின்னா், கட்டளைபட்டி யாதவ சமூக மக்கள் சாா்பில் தாய் வீட்டு சீதனமாக ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பச்சைக் காய்கறிகள் வழங்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, இந்தக் காய்கறிகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, ஆண்டாள், ரெங்கமன்னாா் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
இரவு பெரியபெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வாா் யானை வாகனத்திலும் ஆண்டாள் சந்நிதியில் எழுந்தருளி திருப்பல்லாண்டு தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், ராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான வருகிற 30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. வரும் ஜன. 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உத்ஸவம் நடைபெறுகிறது.