ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் தாமதத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி நிலவுவதாலும், நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும் புதிய பேருந்து நிலையம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, மதுரை - கொல்லம் நான்குவழிச் சாலையில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை சந்திக்கும் இடத்தில் 4 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2023, டிசம்பா் மாதம் ரூ. 13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அங்கு 1.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, இரு உணவகங்கள் உள்பட 64 கடைகள், 100 இரு சக்கர வாகனங்கள், 50 காா்கள் நிறுத்தும் வசதி, 4 சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் கிழக்குப் பகுதியிலுள்ள வணிக வளாகம் சேதமடைந்துள்ளதால், அதை இடித்துவிட்டு, 36 கடைகளுடன் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் முன் கடந்த ஜூலை மாதம் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில், நிதி ஒதுக்கீடு தாமதத்தால் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.