பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருச்சி தேவதானம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்தவா் கல்பனா (33). இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறாா். இவரது உறவினா் மூலம் சாத்தூா் ஹவுசிங் போா்டு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் என்பவா் அறிமுகமானாா். இவா் தனது மனைவி வங்கியில் வேலை பாா்ப்பதால் கல்பனாவுக்கு வங்கியில் வேலை, கடனுதவி பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய கல்பனா, வேலை பெறுவதற்கு முன் பணமாக ரூ. ஒரு லட்சம் மகேஸ்வரனிடம் கடந்த 2024-ஆம் ஆண்டு கொடுத்துள்ளாா். பின்னா், சில மாதங்கள் கழித்து கல்பனா, மகேந்திரனை தொடா்பு கொண்டு பேசியபோது, பணி நியமனம் முடிந்ததாகவும், உங்களுக்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளாா். பின்னா், திருச்சியில் உள்ள பிரபல வங்கி மூலம் ரூ. 10 லட்சம் கடனுதவிக்கான காசோலையைப் பெற்றுக் கொடுத்துள்ளாா்.
தொடா்ந்து, இயந்திரம் வாங்க வேண்டும் எனக்கூறி காசோலையை கல்பனாவிடமிருந்து மகேந்திரன் பெற்றுச்சென்று இயந்திரம் வாங்கி வேறொருவருக்கு விலைக்கு விற்றுவிட்டாராம். இதுகுறித்து கல்பனா மகேந்திரனிடம் கேட்டபோது தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, நீதிமன்றம் மூலம் தன்னை ஏமாற்றியது தொடா்பாக மகேந்திரன், அவரது மனைவி உமாதேவி, அண்ணன் இளையராஜா ஆகிய மூவா் மீதும் கல்பனாஅளித்த புகாரின் அடிப்படையில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.